அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போக விடேன் என்றான். ஆதியாகமம்: 32:26
எனக்கு அன்பானவர்களே!
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
தேவ ஊழியரான பாஸ்டர். பால்யாங்கிசோ, அவர்கள் கொரியா தேசத்தை சேர்ந்த
10 இலட்சம் அங்கத்தினர்களை கொண்ட பெரிய சபையை உருவாக்கினவர்.
கொரிய தேசத்தின் எழுப்புதலில் பெரிய பங்காற்றியவர்கள்.
ஒருநாள் அவர் சென்னை பட்டினத்திற்கு வந்து, தமிழ்நாட்டில் உள்ள பாஸ்டர்களுக்கென்று ஒரு விசேஷ கருத்தரங்கு நடத்தினார். அப்பொழுது அவர்கள் கூறிய காரியம், கொரியா தேசத்தின் எழுப்புதலுக்கு காரணம் என்னவென்று அறிய வாஞ்சையோடு இருக்கிறீர்கள் அல்லவா?
என்னுடைய பதில் ஒன்றே ஒன்று தான். அது ஜெபம். ஜெபம் தான் கொரியாவில் பெரிய எழுப்புதலை கொண்டு வந்தது என்று பிரசங்கித்தார்.
மறுநாளில் என்ன செய்தி கொடுப்பார்கள் என்று ஆவலோடு காத்திருந்தவர்களுக்கு அவர் கொடுத்த செய்தி ஜெபம் தான். மூன்றாவது நாளில் ஜெபத்தை குறித்தே பேசி கருத்தரங்கு முடிவு பெற்றது. அந்த கருத்தரங்கில் ஜெபத்தை குறித்த போதனை பலரின் உள்ளத்தை அசைத்தது.
காரியம் என்னவென்றால், கொரியாவில் உள்ள பாஸ்டர் பால்யாங்கிசோ அவர்கள் சபையில் உள்ள சாதாரணமான விசுவாசிகளும், சிறுகுழந்தைகளும் தினமும் ஒரு மணி நேரம் ஜெபிப்பார்களாம்.
மட்டுமல்லாமல், அவர்கள் சபையில் உள்ள உதவி பாஸ்டர்கள் 800 பேர் தினமும் மூன்று மணி நேரம் ஜெபிப்பார்களாம். தலைமை போதகரான நான் ( பால்யாங்கி சோ) தினமும் ஏழு மணி நேரம் ஜெபிப்பாரம்.
இந்த காரியம் அனேகருடைய ஜெப வாழ்க்கையில் ஒரு எழுப்புதலைக் கொண்டு வந்தது.
தனி ஜெபம், குடும்ப ஜெபம், நண்பர்கள் ஜெபம், சபையார் ஜெபம் என்று பல உண்டு.ஜெபம் ஜெயத்தைக் கொண்டு வரும். எழுப்புதலை கொண்டு வரும்.
ஜெபமே ஜெயம்! ஜெபம் மனிதனுடைய வாழ்க்கையை மறுரூபமாக்குகிறது! ஜெபம் தேசத்தை அசைக்கிறது! ஜெபம் தேசத்திற்கு ஷேமத்தை கொண்டு வருகிறது.”
தனி ஜெபம் இயேசுவை அறிந்த நம் யாவருக்கும் மிக முக்கியமானது ஆகும்.தனி ஜெபம் மிக மிக அவசியம், அதிகாலையிலே எழும்பி தேவனுடைய சமுகத்தில் தனியாக அமர்ந்திருந்து உறவாட வேண்டும்.
தனிப்பட்ட முறையில் நமக்கும் தேவனுக்கும் ஒரு சம்பந்தம் வேண்டும். தனிப்பட்ட முறையிலான உறவு இல்லையென்றால், நாம் கிறிஸ்துவை உடையவர்களாக இருக்க முடியாது.
தனி ஜெபம் தனிப்பட்ட மனிதர்களுடைய வாழ்க்கையில் ஆசீர்வாதத்தை கொண்டு வருகிறது. உதாரணமாக, ஆதியாகமம்:.32 :24-ல்
பாருங்கள் யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான்.
அப்பொழுது தேவன் அவனோடு உறவாடினார்.
ஆதியாகமம்: 32:26-29 யாக்கோபு, நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மை போகவிடேன் என்று கூறி, தேவனோடு தனியாக போராடி ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டான் என்று பார்க்கிறோம்.
வேதத்தில் பார்ப்போம்,
அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்; பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார்.
ஓசியா: 12:4
அவன் தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணும் போது, அவன் அவருடைய சமுகத்தை கெம்பீரத்தோடே பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி, அந்த மனுஷனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார்.
யோபு: 33 :26.
இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம் பண்ணினான்.
ஏசாயா: 37 :20.
பிரியமானவர்களே,
தனி ஜெபம் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் மிகுந்த ஆசீர்வாதத்தை கொண்டு வருகிறது. உதாரணமாக, ஆதி.32 : 24-ல் பாருங்கள்,யாக்கோபு, நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மை போகவிடேன் என்று கூறி, தேவனோடு தனியாக போராடி ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டான்.
ஆம் பிரியமானவர்களே,
ஆசீர்வாதம் என்றால் எல்லோருக்கும் ஆசை தான். ஆனால் தனியாக ஜெபிக்க வேண்டுமென்றால் நேரம் இல்லை என்பார்கள். தனி ஜெபம் தான் மனிதனுடைய வாழ்க்கையில் ஆசீர்வாதத்தை கொண்டு வருகிறது.
அடுத்த படியாக தனி ஜெபத்தில் தேவனுடைய வழிநடத்துதல் கிடைக்கும்.
தன் சகோதரனான ஏசாவை இருமுறை ஏமாற்றி, அவனுடைய புத்திர சுவீகார பங்கையும், அவனுக்குரிய அனைத்து ஆசீர்வாதங்களையும் சுதந்தரித்து கொண்டதால் ஏசா தன்னை கொன்று விடுவான் என்று பயந்து, மாமன் வீட்டுக்கு ஓடினான் யாக்கோபு.
பின்பு அநேக வருடங்களாக அங்கேயிருந்து தனக்கான குடும்பம், சொத்து அனைத்துடனும் திரும்பவும் தன் சொந்த இடத்திற்குத் திரும்பினான். இந்த வேளையில் தன் சதோதரன் இன்னும் தன்னுடன் கோபமாக இருப்பானோ என்று பயந்த யாக்கோபு, தன்னை எதிர் கொண்டு வரும் ஏசாவுக்காக அணியணியாகப் பரிசுகளை அனுப்பினான்.
பின்பு, இராத்திரியில் தன் குடும்பத்தையும் அனுப்பினான். இவர்கள் அனைவரும் யாப்போக்கு என்ற ஆற்றைக் கடந்து அக்கரை சென்றதும், யாக்கோபு இக்கரையிலே தனித்திருந்தான்.
ஏசாவுக்குப் பயந்து அவன் பிந்தித் தனித்திருந்த போது, அவனோடு போராட வேறொருவர் வந்தார். இரவு முழுவதும் நடந்த இந்தப் போராட்டத்தில் யாக்கோபு இளைத்துப் போகவேயில்லை.
அப்போது கர்த்தர் அவனுடைய தொடைச் சந்தைத் தொட்டார்; அது சுளுக்கிற்று. பின்னர் அவர் போக முயன்றபோது, யாக்கோபு, “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போக விடமாட்டேன்” என்றான்.
அவன் கேட்டுக் கொண்டபடி கர்த்தர் அவனை இஸ்ரவேலாக ஆசீர்வதித்தார்.
யாக்கோபு மட்டுமல்ல, பாதகமான சூழ்நிலைகள் மனமுடைவுகள் எதிராளிகளின் பயமுறுத்தல் போன்றவற்றால் தனிமையில் தள்ளப்பட்டவர்களின் வரிசையில் மோசே, எலியா, யோவான் போன்றவர்களும் அடங்குவர்.
ஆனால், இவர்கள், தங்கள் தனிமை வேளைகளில் தான் தேவ அழைப்பையும், தேவ பெலத்தையும், தரிசனங்களையும் பெற்றார்கள். இவர்களுடைய வெற்றி வாழ்வின் பின்னணியத்தில் பெரும் பங்கு வகித்தது இந்தத் தனிமை தான்.
இன்றும், தேவனுக்கென்று நேர்மையாய் உழைக்கின்ற பல ஊழியர்களின் கடந்த கால வாழ்வில் இப்படிப்பட்ட தனிமையான நேரங்கள் வரவில்லை என்று சொல்ல முடியாது.
தேவபிள்ளையே, இன்று நீயும் தனிமைப்படுத்தப்பட்ட உணர்வோடு தத்தளிக்கிறாயா? இது தான் தேவனைப் பார்ப்பதற்குரிய நல்ல நேரம். ஜெபத்தில் அவரோடு போராடக்கூடிய உகந்த நேரம் இது தான்.
அவர் நமக்கென்றும் பல திட்டங்களை வைத்திருக்கிறார். அவரை உறுதியாய் பற்றிப் பிடிப்போமாயின், அவர் நம்மையும் ஆசீர்வதித்து நம் மூலமாக பெரிய காரியங்களைச் செய்து முடிப்பார்.
தனிமை தான் தேவனோடு நம்மைப் பிணைக்கும் இனிய நேரம்.ஆகவே எனக்கு நண்பர்கள் இல்லை, உறவினர்கள் இல்லை.நான் தனிமையில் இருக்கிறேன் என்ற எண்ணம் இருந்தால் அவற்றை மாற்றி, என்னோடு என் மகள் ( அல்லது) மகன் பேச மாட்டானா? என்று ஏங்கும் இயேசுவின் குரலுக்கு செவி கொடுப்போம்.
நம் அருமை இரட்சகர் இயேசுவின் மேல் உள்ள உறவில் ஒவ்வொரு நாளும் வளர கர்த்தர் தாமே நமக்கு அருள் புரிவாராக.
ஆமென்