சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு; 2 தீமோத்தேயு:4:1
எனக்கு அன்பானவர்களே!
கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஜார்ஜ் என்ற புகழ்பெற்ற தொழிலதிபர், ஆரம்பித்த கொஞ்ச காலத்திலே செல்வம் பெருக ஆரம்பித்த போது, தனது மனைவி, பிள்ளைகள், ஆண்டவரின் அன்பையும், பாசத்தையும் மறந்து உலகத்தின் பின்னே போனார்.
நாட்கள் செல்ல செல்ல தனிமை அவரை வாட்டியது.எல்லா செல்வங்களும் இருந்தும், நிம்மதி இல்லாமல் நிலை குலைந்து போனார். எதையும் அவரால் திறம்பட செய்ய இயலவில்லை.
இந்நிலையில் அவர் ஒரு ஊழியரை சந்தித்து தன் நிலையை எடுத்துச் சொன்ன போது, ஆண்டவரின் ஊழியர் அவருக்காக ஜெபித்த போது, தேவனுடைய அன்பு அவரது தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்விலும், வேலை செய்யுமிடத்திலும் ஊற்றப்படவே,
அவரது தொழிலும் தழைத்து, செல்வம் ஓங்கியது.
அநேக ஆண்டுகள் கழித்து, ரோட்டரி கிளப் கூடுகையிலே, வருத்தத்துடன் அமர்ந்திருந்த ஒருவரை ஜார்ஜ் சந்தித்தார்.
அவர் ஜார்ஜிடம், தனது மகன் குடி, திருட்டு ஆகியவற்றிற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளான் எனக் கூற, ஜார்ஜின் மனம் அந்த வாலிபன் மீது அன்பு கொண்டது.
அவனை கிரயம் செலுத்தி சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்தார். தன்னுடைய வாழ்க்கையை இயேசு எவ்விதம் மாற்றினார் என அவனிடம் சம்பாஷித்து வந்தார்.
அந்த வாலிபனும் கண்ணீருடன், தன் பாவ வாழ்க்கையை விட்டு வெளியே வந்து, தேவனைச் சார்ந்து கொண்டான். நாளடைவில் அவனது வாழ்க்கைத் தரம் உயர்ந்தது.
ஒரு போதகராக லுத்தரன் சபையிலே தேவனுக்கு மகிமையாக ஊழியம் செய்தார். உண்மையில் இயேசுவின் அன்பை அந்த வாலிபனின் உள்ளத்தில் ஜார்ஜ் விதைத்ததாலேயே, இந்த மாற்றம் நிகழ்ந்தது.
பிரியமானவர்களே,
உங்கள் உதவி தேவைப்படுகிற ஒருவருக்கு நீங்கள் ஒரு விடையாக முற்படுங்கள். நீங்கள் சரியான நேரத்தில் சொல்லுகிற வார்த்தைகள் ஒருவரை, இருள் எனும் அந்தகாரத்தினின்று, ஒளியின் ராஜ்ஜியத்திற்கு வழிநடத்தும்.
ஆகவே, “சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய் திருவசனத்தை பிரசங்கம் பண்ண ஆயத்தமாயிருங்கள்” (2 தீமோத்தேயு 4:2).
இன்றிலிருந்து திருவசனத்தை மற்றவர்களின் இருதயத்தில் விதைக்கும்படியாக, உங்கள் இருதயத்தை திறப்பீர்களா?
உங்கள் வார்த்தையை கேட்கிற ஜனங்கள் தங்கள் வாழ்வில் செழிக்கும் போது, நீங்கள் நூறு மடங்கு பலனை பெறுவீர்கள்.
வேதத்தில் பார்ப்போம்,
சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.
2 தீமோத்தேயு: 4 :1.
சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மை பாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.
1 கொரிந்தியர்: 9 :16.
அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.
கொலோசேயர்: 1:23.
பிரியமானவர்களே,
பவுல் அடிகளார் கற்றுத் தருகிறார். சமயம் வாய்க்கும் போது மட்டுமல்ல, சமயம் வாய்க்காத போதும் கர்த்தரின் வார்த்தைகளை ஜாக்கிரதையாய் யாவருக்கும்!! சொல்ல வேண்டும்
சமயம் வாய்க்கும் போது கர்த்தரின் வார்த்தைகளை வாய் பேசட்டும்! வாய்காத போது நமது நடை; உடை; பாவனைகள் பேசட்டும் – என்கிறார் சகோ.அகத்தியன் அவர்கள்!
எத்தனை பேருக்குத் தெரியும்? கிறிஸ்தவராகிய நம்மை இந்த உலகம் உற்று நோக்கிக் கொண்டுள்ளது! எல்லாரிடமும் நாம் வேத வார்த்தைகளைப் பேசிவிட முடியாது! அதற்கான சமயமும் வாய்த்திடாது!
பக்கத்து வீட்டார் காய்கறி விற்பனையாளர் நமது அலுவலக நண்பர்கள் எப்படி இயேசு கிறிஸ்துவை அறிவார்கள்?
நாம் நமது அனைத்துச் செயல்களிலும், சில சமயம் மௌனத்தினாலும்கூட கிறிஸ்துவை வெளிப்படுத்திட வேண்டும்!
தேவையற்றதைக் களைந்திடல் வேண்டும்! ஜெபித்து முயன்றிடுங்கள்! பலசமயம் அழகான புன்முறுவல் கூட கிறிஸ்துவை வெளிப்படுத்தும்!
பிறகு அவர்களாக பேசுவார்கள்; அப்போது இயேசு கிறிஸ்துவை அவர்கள் உள்ளத்தில் விதையுங்கள்! நல்ல நற்செய்தி விதைகளை! பிறகு கர்த்தர் பார்த்துக் கொள்வார்.
நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்’ என்று இயேசுகிறிஸ்து கூறினார். நாம் யாருக்காவது கிறிஸ்துவின் அன்பை குறித்து கூறியிருக்கிறோமா?
உலகத்தில் வந்த எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியாகிய கிறிஸ்துவை குறித்து நாம் யாருக்காவது வெளிப்படுத்தியிருக்கிறோமா?
உலகம் முழுவதும் இருளுக்குள் மூழ்கி, வழி தெரியாமல் தத்தளித்து கொண்டு இருக்கிறார்கள். நாமோ ஒளியை எப்படி கொடுப்பது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோமே தவிர,
எத்தனையோ பிரசங்கங்களை கேட்டு கொண்டு தான் இருக்கிறோமே தவிர எழுந்து பிரகாசிக்க இதுவரை முன்வராமல், விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடி வைத்து கொண்டிருக்கிறோம்.
‘விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின் மேல் வைப்பார்கள். அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்’ என்று இயேசு கிறிஸ்து கூறினார்.
நாமோ நான் இன்னும் தயாராகவில்லை, நான் சொன்னால் யார் கேட்பார்கள் என்று நம்மை குறித்தே தாழ்வாக நினைத்து ஒளி வீசாமல் மரக்காலால் மூடி வைத்து கொண்டிருக்கிறோம். நாம் தயாராவதற்குள் கர்த்தரின் வருகையும் நடந்து விடும்.
நம்மால் இயன்ற அளவு கர்த்தருக்கென்று ஒளி வீசுவோம். இருளான உலகத்திற்கு ஒளியாக இருப்போம்.
கர்த்தரின் வருகைக்கென்று ஆயத்தமாவோம்.
கர்த்தர் தாமே இத்தகைய ஒளி மிகுந்த ஆசீர்வாதமான வாழ்வை வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்