ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்: கடன்வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை. நீதி22:7
எனக்கு அன்பானவர்களே!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
“கடன் அன்பை முறிக்கும்” என்ற வாசகத்தை அநேக இடங்களில் பார்க்கிறோம்.
இன்றும் அநேக ஜனங்கள் தங்களை அறியாமலேயே, கடனுக்குள் போய் விடுகிறார்கள். “தவணை முறையில் வாங்குகிறேன். இன்ஸ்டால்மென்டில் கிடைக்கிறது,” என்று அதில் சிக்கி விடுகிறார்கள்.
சிலர், “வீடு கட்ட பேங்கில் கடன் வாங்குகிறேன். கொஞ்சம் கொஞ்சமாய் நீண்ட வருடங்கள் கொடுத்து விட்டால், வீடு சொந்தமாகி விடும். வாடகை கொடுக்க வேண்டியதில்லை” என்று சொல்லுகிறார்கள்.
இன்றைக்கு, கடன் கொடுக்க, “கிரெடிட் கார்டு” வந்துவிட்டது. இப்படி நம்மையும் அறியாமல் கடன் என்பது பல்வேறு பெயர்களில் மக்களிடம் புழங்குகிறது.
ஆடம்பர வாழ்க்கை வாழுவதற்கு, அநேகர் கடன் வாங்கி விடுகிறார்கள். என் அந்தஸ்தை காத்துக் கொள்வதற்கு கடன் வாங்கித் தான் ஆக வேண்டியிருக்கிறது, என்று சமாதானம் சொல்லுகிறார்கள்.
ஆனால் கடன் வாங்கும் போது, “எவ்வளவு வட்டியைக் கட்டுகிறோம். அதற்காக எவ்வளவு உழைக்க வேண்டியதிருக்கிறது. அடிமைப்பட்டு போகிறோமே” என்று யாரும் எண்ணுவதே இல்லை.
ஏன் மனிதன் கடனுக்குள் போகிறான்? “பணத்தை எப்படி செலவழிக்க வேண்டுமென்று, அவன் திட்டமிட்டு தீர்மானிக்கவே முடிவதில்லை.
எது அவசியம்? எது அனாவசியம்? எது ஆடம்பரம்? என்று அவனால் வேறு பிரிக்க முடியவில்லை.”
எத்தனை வீடுகளில் இந்த மாத வரவு, செலவு குறித்தும், சிக்கனத்தை குறித்தும் குடும்பத்தில் பேசுகின்றனர் என்ற கேள்வியை முன் வைத்தால் கேள்விக்குறி( ? ) தான் மிஞ்சும்.
ஆகவே தேவபிள்ளைகளே, கர்த்தரை விசுவாசித்து ஞானமாய் குடும்பத்தை நடத்துங்கள். கர்த்தர் கடன் வாங்காதிருக்கிற, நல்ல செழிப்பை உங்களுக்குத் தந்தருளுவார்.
வேதத்தில் பார்ப்போம்,
கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ள தெல்லாவற்றையும் அபகரித்துக் கொள்வானாக, அவன் பிரயாசத்தின் பலனை அந்நியர் பறித்துக் கொள்ளக்கடவர்கள்.
சங்கீதம்:109:11
ஒரு ஸ்திரீ எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய என் புருஷன் இறந்து போனான், உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர், கடன் கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக்கொள்ள வந்தான் என்றாள்.
2 இராஜாக்கள்:4:1
தரித்திரன் கெஞ்சிக் கேட்கிறான்; ஐசுவரியவான் கடினமாய் உத்தரவு கொடுக்கிறான்.
நீதிமொழிகள்: 18:23
பிரியமானவர்களே,
கர்த்தருடைய வாக்குத்தத்தம் நமக்கு என்ன கூறுகிறது ? என்பதை பாருங்கள்.
“கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷ சாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய். நீயோ, கடன் வாங்காதிருப்பாய்” என்று
(உபாகமம்:. 28:12)-ல் வாசிக்கிறோம்.
“கடன் வாங்கித் தான் தீருவேன்,” என்று மார்வாடிகளையும், கடன் கொடுக்கிறவர்களையும், பேங்குகளையும் நோக்கியிருந்தால், கர்த்தர் உங்களை கைவிட்டு விடுவார்.
உங்கள் கடன் சுமை, ஏறுமே தவிர குறையாது. எல்லா சூழ்நிலைகளிலும், கர்த்தரையே சார்ந்து வாழ பழகி வேண்டும்.
ஆண்டவருக்கு கொடுக்க வேண்டியதில் கஞ்சத்தனம் மனமுவந்து
கொடுத்துப் பாருங்கள்.
கர்த்தர் வானத்தின் பலகணிகளைத் திறப்பதை, ஆவலோடு எதிர்பாருங்கள். கர்த்தர் ஒருபோதும் பொய்யுரைக்கவே மாட்டார். வாக்குமாறாதவர், அற்புதவிதமாய் உங்களுடைய தேவைகள் அனைத்தையும் சந்திப்பார்.
ஆபிரகாமோ, ஈசாக்கோ, யாக்கோபோ ஒருநாளும் கடன் வாங்கினது இல்லை. அவர்களுடைய ஐசுவரியத்தை பூமி தாங்கக் கூடாததாயிருந்தது.
அப்படி அவர்களை மேன்மையாய் நடத்தின ஆண்டவர், உங்களை நடத்தமாட்டாரா? ஆகாயத்துப் பறவைகள் கடன் வாங்குகின்றனவா? இல்லையே! கர்த்தர் அவைகளை அருமையாய் போஷிக்கிறாரே.
காட்டுப் புஷ்பங்களை மேன்மையாய் உடுத்துவிக்கிறாரே. அப்படியே உங்களையும் உடுத்துவிப்பார். கர்த்தரை கனம் பண்ணி, அவரையே சார்ந்து கொள்ளுங்கள்.
கர்த்தருடைய பிள்ளைகள் தங்களுடைய வருமானங்களில் ஜீவிக்க பழகிக் கொள்ளுங்கள்.
வருமானத்திற்காக ஒவ்வொரு நாளும் ஜெபியுங்கள். வங்கிக் கடன்களினாலும் (loan, கடன் அட்டைகளினாலும் (credit card) உங்களைப் பாரப்படுத்திக் கொள்ளாதிருங்கள்.
பூமியில் கடனை வைத்துக் கொண்டு, மற்றவர்களுக்குரியதைத் திருப்பிச் செலுத்தாத படிக்கு, கர்த்தருடைய வருகையில் கூட பரலோகத்திற்குச் செல்ல முடியாது. ஆகையால் மற்றவர்களிடத்தில் அன்பு கூறுகிற கடனேயன்றி வேறொன்றிலும் ஒருபோதும் கடன்படாதிருங்கள். அன்பு கூறுகிற கடன் ஒன்று மாத்திரம் நம்முடைய வாழ்க்கையின் கடைசி வரைக்கும் கடனாகவே இருக்கட்டும்.
அப்படிப்பட்ட தேவனுக்கு உகந்த ஜீவியம் செய்ய கர்த்தர் உங்கள் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் சமாதானமும் உங்கள் அனைவரோடும் கூட இருப்பதாக.
ஆமென்.