மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயதீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு :12:36
எனக்கு அன்பானவர்களே!
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒருவனுக்கு பல கிணறுகள் இருந்தன. அதில் ஒரு கிணற்றை ஒரு விவசாயிக்கு விலைக்கு விற்றான்.
கிணற்றை விலைக்கு வாங்கிய விவசாயி, அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தார்.
அங்கு கிணற்றை விற்றவன் நின்று கொண்டிருந்தான். அவன் விவசாயியைத் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தான்.
விவசாயிக்குக் கோபம் வந்தது.
“எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே? இது நியாயமா?” என்று கிணறு விற்றவனைப் பார்த்துக் கோபத்துடன் கேட்டான்.
கிணறு விற்றவன், “நான் உனக்குக் கிணற்றை மட்டும் தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை இல்லை. எனவே நீ தண்ணீரை இங்கிருந்து எடுக்கக் கூடாது” என்று வாதம் செய்யத் தொடங்கினான்.
விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் உள்ளூர் நீதிபதியிடம் சென்று முறையிட்டான்.
நீதிபதி இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும் விசாரித்தார்.
பின்னர் கிணற்றை விற்றவனிடம் “நீ கிணற்றை இந்த விவசாயிக்கு விற்று விட்டதால் கிணறு உன்னுடையதல்ல. அதில் உனது தண்ணீரை இன்னமும் வைத்திருப்பது தவறு.
உனக்கு அதில் தான் தண்ணீரைச் சேமித்து வைக்க வேண்டுமென்று விரும்பினால், விவசாயிக்கு அதற்கான வாடகையைத் தினமும் கொடுத்து விடு. இல்லையென்றால் கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே வெளியேற்ற வேண்டும்” என்று தீர்ப்புக் கூறினார்.
கிணறு விற்றவன், தனது தவறுக்கு மன்னிப்புக் கோரியதுடன் கிணற்றின் முழுப் பயனையும் விவசாயி அனுபவிக்கலாம் என்று சொல்லி விட்டு, அங்கிருந்து சென்றான்.
வேதம் கூறுகின்றது
நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்,
நீதிமொழிகள்: 6:2.-ல் பார்க்கிறோம்.
ஆம் பிரியமானவர்களே,
இன்றும் அநேக ஜனங்கள் இப்படித்தான் தங்கள் குதர்க்கமான வார்த்தைகளை பயன்படுத்தி பல சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள்.
வேதத்தில் பார்ப்போம்,
மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயதீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு: 12:36
ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்கப்படுவாய் என்றார்.
மத்தேயு :12:37
நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.
யோவான் :15:7
பிரியமானவர்களே,
நமது அருமை ஆண்டவர் மனிதர்களிடம் பல வழிகளில் பேசுகிறார். ஆனால் மனிதர்களோ அவைகளை கேட்பதும் இல்லை. மனதில் வைப்பதும் இல்லை.
ஆனால் நம் வார்த்தைகள் அனைத்தையும் தேவன் பதிவு செய்கிறார். “மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று சொல்லுகிறார்.
ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய்”
(மத்தேயு 12:36,37) என்று இயேசு கூறியிருக்கிறார்.
நாம் பேசுகிற ஒவ்வொரு வார்த்தைகளையும் கண்காணிக்கிற தேவன், ஒரு நாள் நிச்சயம் அவற்றை நியாயத்தீர்ப்புக்கு கொண்டு வருவார். இதை நீங்கள் நம்புகிறீர்களா?
அர்த்தமற்ற பேச்சுக்களை நாம் பேசுவோமானால், நியாயத் தீர்ப்பிலிருந்து நம்மை நாம் தப்பிக்க முடியாது. எனவே நமது வார்த்தைகளில் மிகவும் கவனமாயிருக்க வேண்டும்.
அன்பானவர்களே,
நியாயத்தீர்ப்பில் நாம் தப்பிக்க வேண்டுமானால் நாம் பேசும் வார்த்தைகள் கிறிஸ்து இயேசுவுக்கு ஏற்றதாய், பிரியமானதாய் இருக்க வேண்டும்.
கர்த்தருடைய வார்த்தை கூறுகின்றது.
நீதிமொழிகள்:10:19-ல் “சொற்களின் மிகுதியில் பாவமில்லாமல் போகாது. தன் உதடுகளை அடக்குகிறவனே புத்திமான்”.
நீங்கள் அதிகமாக பேசும் போது, சில தேவையில்லாத வார்த்தைகளை தவிர்க்க முடியாது. எனவே வார்த்தைகளை அடக்குகிறவனே என்றும் புத்திமான்.
நம் வாயின் வார்த்தைகள் கர்த்தருக்கு ஏற்றதாய்
பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தைகள் உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள். எபேசியர் 4:29 பேசுங்கள். அப்போது கர்த்தருடைய நாமம் நம் மூலமாய் மகிமைப்படும்.
கர்த்தர் நமக்கு தந்த நல் வாழ்வை, அவருக்கு சாட்சியுள்ள வாழ்வு வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.