Daily Manna 233

உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகை தேடிச் சுற்றித் திரிகிறான். 1 பேதுரு: 5 :8.

எனக்கு அன்பானவர்களே !

நம்மை ஒவ்வொரு நாளும் பாதுகாத்து வருகிற அன்பின் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

தென் ஆப்பிரிக்காவில்…
கடவுள் நம்பிக்கையில்லாத
ஒரு நாத்திக வெள்ளைக்கார நீதிபதியின் குதிரை வண்டியை, கறுப்பர் இனத்தைச் சேர்ந்த “சாம்போ” என்பவர் ஓட்டி வந்தான்.

அவன் அதிகமாக படித்தது கிடையாது.
ஆனால் திடமான கிறிஸ்துவ விசுவாசியாக இருந்தார். வண்டியில் செல்லும் போது அந்த நீதிபதி
அந்த வண்டியோட்டியோடு பேசிக் கொண்டே செல்வது வழக்கம் .

அப்போது சாம்போ,தனது விசுவாச வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும் உண்டாகும் போராட்டங்களைக் குறித்தும் தன் எஜமனாகிய நீதிபதியிடம் சொல்வதுண்டு.

அப்போது நீதிபதி
“பார்த்தாயா ??? கிறிஸ்தவர்களாகிய நீங்கள் எப்போதுமே சாத்தானுடனும் , மனிதர்களிடமும் போராடிக் கொண்டிருகின்றீர்கள்.ஏனென்று புரியவில்லை என்று ஏளனமாய் பேசுவார்.

பின்பு என்னைப் பார்,
எனக்கு எந்த போராட்டமும் இல்லை…
துன்பமும் இல்லை.
நம்பிக்கையில்லாத நாத்திகனாகிய நான் நன்றாகத் தானே இருக்கின்றேன்”. நீ கடவுளே, கடவுளே என்று அழைக்கிற உனக்கு ஏன் இத்தனை கஷ்டம்
என்று அடிக்கடி நீதிபதி அந்த வண்டிக்காரனிடம்சொல்வார்.

இவருக்கு சரியான பதிலை சொல்வதறியாமல்
தவித்து வந்தார் சாம்போ. பதிலளிக்கும் சரியான தருணத்திற்காக
அநேக நாட்களாக ஜெபித்து வந்தார்.
ஒரு நாள் நீதிபதி வேட்டையாடும் படியாக, சாம்போவை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் தனது குதிரை வண்டியில் சென்றார் .

சற்று தூரம் சென்ற போது, சில கொக்குகள் தலைக்கு மேலாக பறந்து சென்றன.
தன்னிடம் இருந்த
துப்பாக்கியை எடுத்த நீதிபதி, கொக்குகளைப் பார்த்து சரியாக குறி வைத்துச் சுட்டார்.
ஒரு கொக்கு காயம்பட்டு விழுந்தது. மற்றொன்று செத்து விழுந்தது.

அதைக் கண்ட நீதிபதி சாம்போவிடம்,
“ உடனடியாக சென்று
காயம் பட்ட கொக்கை
பிடித்துக் கொண்டு வா.
இல்லாவிட்டால்
அது தப்பி பறந்து விடும்”
என்று கூறினார்.

கொக்குடன் திரும்பி வந்த சாம்போ “ஐயா,
கிறிஸ்தவர்களுக்கு ஏன் அதிகமான போராட்டங்கள் வருகின்றது” என்பதை
இப்பொழுது
என்னால் சொல்ல முடியும் என்றார்…!!!
பதிலை கேட்கும்படி ஆர்வமானார்
அந்த நாத்திக நீதிபதி.

“காயம்பட்ட கொக்கை பிடிக்கும் படியாக காட்டிய அவசரத்தை, நீங்கள் ஏன் செத்த கொக்கிடம் காட்டவில்லை? ”
என்று கேட்டார் சாம்போ.

“செத்து விழுந்த கொக்கு நமது கைகளிலிருந்து தப்பிப் போவதில்லை.
ஆனால் காயம்பட்ட கொக்கு நம்மிடமிருந்து தப்பியோடிவிடும்.
ஆகவே தான்
முதலாவது அதைப் பிடிக்கும்படி துரிதப்படுத்தினேன்”
என்றார் நீதிபதி.

அதற்கு சாம்போ,
“ஐயா,
கிறிஸ்தவர்களாகிய நாங்கள் அந்த அடிபட்ட கொக்கைப் போல இருக்கின்றோம். சாத்தானின் பிடியிலிருந்து தப்புவதற்காக போராடுகின்றோம்.

ஆனால் நீங்களோ செத்துப் போன கொக்கைப் போல அவனிடம் இருக்கின்றீர்கள்.
சாத்தான் உங்களைப் பற்றி கவலைப்படுவது இல்லை. ஆகவே
உங்களுக்கு பாடுகளும் போராட்டங்களும் வருவதில்லை”
என்றார்.

ஆம், பிரியமானவர்களே..
நித்திய ஜீவனை சுதந்தரிக்க பிரயாசப்படுகின்ற மெய் கிறிஸ்தவர்களுக்கு பாடுகளும்
போராட்டங்களும் இவ்வுலகில் அதிகம் உண்டு.

கர்த்தருடைய வேதம் சொல்லுகிறது.
யோவான்: 16:33-ல்
உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்று இயேசு கூறுகிறார்.
நான் உன்னுடன் இருக்கும் போது உனக்கு ஏன் கவலை என்று நமது அருமை ஆண்டவர்
இயேசு கிறிஸ்து நம்மை
தேற்றுகின்றார்கள்.

வேதத்தில் பார்ப்போம்,

ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
எபேசியர்: 6 :12.

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள். ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான்.
1 பேதுரு :5 :8.

விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்திய ஜீவனைப் பற்றிக் கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.
1 தீமோத்தேயு: 6 :12.

பிரியமானவர்களே,

இந்த உலகத்தில் நாம் இருக்கும் வரைக்கும் நம் ஒவ்வொருவருக்கும் போராட்டங்களும், துன்பங்களும் உண்டு. ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல…பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்கு போராட்டம் உண்டு”
எபேசியர் 6:12 என்று வேத வசனம் இதை உறுதிப்படுத்துகிறது.

சாத்தான், தேவாதி தேவனிடம், “நீர் யோபுவையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைத்து பாதுகாக்கவில்லையா?” என்று புலம்புகிறான்
யோபு 1:10.
ஆம், கிறிஸ்து தமது ஜனங்களை சுற்றிலும் அக்கினி மதிலாக இருந்து அவர்களை காப்பாற்றுகிறார் சகரியா: 2:5 கூறுகின்றது.

இந்த உலகத்தில் பலவிதமான தீய சக்திகள் உண்டு. என்னிடம் ஜெபிக்கும் படி வருபவர்களில் அநேகர், “எனக்கு யாரோ பில்லிசூனியம், மந்திரம் செய்து வைத்து விட்டார்கள்; எங்கள் குடும்பத்தில் இப்படியெல்லாம் நடக்கிறது” என்று கவலையோடு சொல்லுவதுண்டு.

அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.வேதம் தெளிவாய் சொல்லுகிறது.
எண்ணாகமம்: 23:23. யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறி சொல்லுதலும் இல்லை; என்று

ஆயினும், இவை ஒரு ஆண்டவருடைய பிள்ளைக்கு விரோதமாய் போரிடலாமே தவிர, அவனுக்கு தீங்கு செய்யவே முடியாது. காரணம், இயேசு கிறிஸ்து, அவைகளின் வல்லமைகளையெல்லாம் சிலுவையில் தகர்த்தெறிந்தார் எபிரெயர் :2:14,15.

இந்த உலகத்தில் அசுத்த ஆவிகள் இருப்பதும், அவைகளுக்கும் வல்லமை உண்டு என்பதும் உண்மை தான். ஆனால், இயேசு கிறிஸ்துவை நீங்கள் உங்கள் உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு, உங்கள் பாவங்களுக்காக அவருடைய பாதத்தில் அமர்ந்து மனம் வருந்தி “இனி நான் உம்முடைய பிள்ளையாய், உமக்காகவே நான் வாழ்வேன்” என்று நீங்கள் தீர்மானம் எடுப்பீர்களானால்,

அவைகள் ஒரு நாளும் உங்களை தொடவோ தொடரவோ முடியாது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை எல்லா தீங்கிற்கும் விலக்கி பாதுகாக்கும் படி உங்களைச் சுற்றி அக்கினி மதிலாயிருப்பார்.

ஒன்றும் உங்களை சேதப்படுத்த மாட்டாது. ஆம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கும் போது எதுவும் நம்மை நெருங்கவோ, தொடவோ முடியாது.

ஏனெனில் பகலில் மேக ஸ்தம்பமாகவும், இரவில் அக்கினி ஸ்தம்பமாகவும் இஸ்ரவேல் ஜனங்களை பாதுகாத்த அதே அன்பின் ஆண்டவர் இன்றும் நம்மை பாதுகாக்க வல்லமையுள்ளவராகவே இருக்கிறார்.
விசுவாசியுங்கள் வளமாய் வாழுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சமாதானம் நம் யாவரோடும், இன்றும், என்றும், சதாகாலமும் தங்கி தரித்திருப்பதாக.

ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *