Daily Manna 234

நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். 2 தீமோத்தேயு: 4:6

எனக்கு அன்பானவர்களே!

விசுவாச ஓட்டத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு கௌரவமான கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து நல்ல முறையில் வளர்க்கப்பட்ட அவர்,
தன் நண்பர்களோடு சேர்ந்து, எல்லா விதமான தீய பழக்க வழக்கங்களை கற்றுக் கொண்டார்.

ஊரில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மிகவும் தொல்லை கொடுக்கிற மனிதனாக மாறினார்.

அது மட்டுமல்ல குடித்து விட்டு வந்து மனைவியையும், மக்களையும் அடித்து உதைப்பார். அவர் வீட்டில் அழுகையும் கூக்குரல் சத்தமும் அக்கம் பக்கத்தினருக்கு தொல்லையாக இருந்தது.

அவர் வசிக்கும் தெருவில் பலரோடு பேசுவதில்லை, அவரைப் பற்றி நல்ல சாட்சி கிடையாது, அவருடைய தீய நடக்கையினால் சின்ன வயதிலே மரணம் அடைந்தார். கிறிஸ்தவ முறைப்படி அவருக்கு நல்லடக்கம் செய்யப்பட்டன.

ஆனால், அவர் மரணமடைந்த பிறகு அவருடைய கல்லறையில் நல்ல போராட்டத்தைப் போராடினேன் ஓட்டத்தை முடித்தேன் விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன் என்று எழுதப்பட்டு இருக்கிறது.

இந்த வசனத்துக்கும் அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கும் துளியளவும் சம்பந்தமே கிடையாது. அவர் கல்லறையில் எழுதப்பட்ட வார்த்தையை படிக்கிற பலர் இவர் மனைவியோடும் உறவினரோடும் நல்ல போராட்டத்தை போராடினார் என்று கேலி செய்தனர்.

மேலும், பல ஊழியக்காரர்களின் கல்லறையில் கூட இந்த வசனம் பொறிக்கப்பட்டிருக்கிறது. பவுல் சொன்ன இந்த வார்த்தையை தங்களுக்கு பயன்படுத்த முதலாவது தாங்கள் தகுதியுள்ளவர்களாக இருக்கிறோமா என்று யோசித்து பார்க்க வேண்டும்.

​பவுலுடைய ஊழியம் எப்படிபட்டது என்பதை இவர்கள் சரியாக அறிந்து கொள்ளவில்லை. மேலும், பவுல் கிறிஸ்துவினிமித்தம் அடைந்த உபத்திரவமும், துன்பங்களுக்கும் அளவில்லை. கடைசியாக இரத்த சாட்சியாக மரணமடைந்தார்.

இப்படிபட்ட ஊழியத்தை செய்து விட்டு தன் ஜீவனையே கிறிஸ்துக்கு அற்பணித்த பவுல் சொன்ன நல்ல போராட்டத்தை போராடினேன் என்று, தான் செய்ததாக பொய் சொல்லி வசனத்தை வீணாய் பயன்படுத்துகிறார்கள்.

இன்றைக்கு அநேக காரியங்களில் தேவ வசனத்தை பயன்படுத்துவதால் தேவன் நம்மை ஆசீர்வதிப்பார் என்று நம்புகிறோம். ஆனால், தேவ வசனத்துக்கு கீழ்படிவதில் தான் ஆசீர்வாதம் இருக்கிறது…

வேதத்தில் பார்ப்போம்,

உமது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப் போல எண்ணப்படுகிறோம்
ரோமர்: 8:35

எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது;
ரோமர்: 9:1

ஆகிலும் அவைகளில் ஒன்றையுங் குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணும் படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.
அப்போஸ்தலர்:20 :24.

பிரியமானவர்களே,

ஒரு ஓட்டப் பந்தய வீரன் அதின் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் அவன் அந்த பந்தயத்திலிருந்து நீக்கப்படுவான்.

அது போல நாமும் நம்முடைய ஓட்டத்தில் வெற்றி பெற வேண்டுமானால் தாழ்மையுடன் பிதாவின் சித்தத்திற்கு கீழ்படிந்து ஓட வேண்டும்.

வேதம் கூறுகிறது என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல்,என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை [மத்தேயு:7:31]. அவர் நமக்கு காண்பித்த வழிகளில் ஒன்று அவருடைய சிலுவையை சுமந்து கொண்டு அவருக்கு பின் செல்லுவது.

ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக் கடவன் என்று வேதம் தெளிவாக கூறுகிறது [மாற்கு:8:34]

அதாவது நம்முடைய சித்தத்தை(விருப்பத்தை) சிலுவையில் அறைந்து விட்டு பரலோக பிதாவின் சித்தத்தை செய்கிறவர்களாய் அவருக்கு பின்செல்ல வேண்டும்.

கிறிஸ்துவின் சிலுவையை சுமந்து கொண்டு பொறுமையாய் நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தை ஓடுவோம்.
அப்போஸ்தலராகிய பவுல் கூறுகிறார் ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம் பண்ணேன்[1கொரிந்தியர்:9:26].

விசுவாச ஓட்டத்தின் நாயகர் இயேசு கிறிஸ்து.நம்மில் ஓட்டத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவரும் அவரே.

எனவே நம்மில் விசுவாச ஓட்டத்தை ஆரம்பித்தவர் முடிவுபரியந்தம் நம்மோடு கூட இருந்து ஓட்டத்தை முடிக்க உதவி செய்வார் என்ற விசுவாசத்தோடு நாம் ஓட வேண்டும். ஓட்டப் பந்தயத்தில் ஓடும் வீரன் நான் பரிசை வென்று வருவேன் என்ற துணிச்சலோடும் நம்பிக்கையோடும் ஓடுவான்.

தேவனிடமிருந்து பரம அழைப்பை ஏற்றுக் கொண்ட நாமும் பந்தய பொருளை நிச்சயமாய் பெற்றுக் கொள்ளுவேன் என்ற நம்பிக்கையோடு ஓட வேண்டும் .

பவுல் கூறுகிறார் நான் ஒன்றையுங் குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன் [அப்போஸ்தலர்:20:24]. என்ன அருமையான சாட்சி பாருங்கள்.

இப்படி தேவனுக்கு சாட்சியாய் வாழ்ந்த அப்போஸ்தலனாகிய பவுல் தான் தேகத்தை விட்டு பிரியும் காலம் வந்த போது சொன்ன வார்த்தைகள் நம்மை மெய்சிலிர்க்க செய்கிறது அல்லவா!

நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்;
எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார் திமோத்தேயு:4:6- என்று கூறுகின்றார்.

பிரியமானவர்களே இந்த நிச்சயம் இன்று நமக்கு இருக்கிறதா? சற்று சிந்தித்துப் பார்ப்போம்

அன்பானவர்களே.
அவர் பிரசன்னமாகுதலை விரும்புகிற யாவருக்கும் நீதியின் கிரீடத்தை தருவார் என்ற நம்பிக்கையை பவுலடியார் நமக்கு ஊட்டுகிறார்.

நம்மில் ஓட்டத்தை துவக்கினவராகிய இயேசு கிறிஸ்து வழுவாதபடி நம்மை காத்து தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மாசற்றவர்களாய் நம்மை நிறுத்தவும் வல்லவர் என்று விசுவாசிப்போம்.

நீதியின் கிரீடத்தை நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தரின் கையிலிருந்து பெற்றுக் கொள்ளவோம் என்ற நிச்சயத்தோடு நம்முடைய ஓட்டத்தை தொடருவோம்.

நம்முடைய பாவங்களை உதறி தள்ளிவிட்டு இச்சையடக்கத்தோடு, பின்னிட்டு பாராமல், இயேசுவை நோக்கி பார்த்து, நிச்சயத்தோடு ஓடுவோம்.

கர்த்தர் தாமே நமக்கென்று வைத்திருக்கும் பந்தயபொருளை சுதந்தரித்துக் கொள்ள நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *