இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். மத்தேயு :5:7.
எனக்கு அன்பானவர்களே!
இரக்கத்தில் ஐஸ்வரியமுள்ளவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு இரக்ககுணமுள்ள பெண்மணி தினம்தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள் யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று வைப்பாள்…
அவ்வழி திரியும் ஒரு முதுகு கூனல் கிழவன் அதை எடுத்துக் கொண்டு,
ஏதோ முனகிக் கொண்டே போவான்.
இது அன்றாட வழக்கமாயிற்று!.
ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று,
கிழவன் என்ன முனகுகிறான் என்று
செவிமடுத்து கேட்டாள்.
அவன் முனகியது, இதுதான்:
” நீ செஞ்ச பாவம் உங்கிட்டேயே இருக்கும்;
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்” என்று தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான்.
“தினமும் இட்லி வைக்கிறேன்; எடுத்துட்டு போறான்;
“நீ மவராசி நல்லா இருக்கணும் ” ன்னு
கையெடுத்துக் கும்பிட்டு கை, கால்ல விழலனாலும்,”இட்லி நல்லா இருக்கு “ன்னு பாராட்டலனாலும்;
” ரொம்ப நன்றி தாயே” ன்னு சொல்லக் கூடவா தோணல ;
ஏதோ,… “செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்;
செஞ்ச புண்ணியம் ஓனக்கே திரும்பும்” ன்னு
தினம் தினம் உளறிட்டுப் போறானே’
என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள்.
‘நன்றி கெட்ட கூனனை’ நினைத்து
மன உளைச்சலுக்கு ஆளானாள்!
நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி,
கொலை வெறியாக மாறியது!
ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என
மதில் மேல் வைக்கப் போனாள்….
அவளது மனம் ஏனோ கலங்கியது;
கை நடுங்கியது. அவன் அப்படி இருந்தாலும், சே…நாம் ஏன் இப்படியாகணும்னு
அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள்.
வழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்;
இட்லியை எடுத்துக் கொண்டு,
வழக்கம் போல,
சொல்லிக் கொண்டே சென்றான்!அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது, அவளுக்கு !.
அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள்;
வாசலில் வாலிபன் ஒருவன்
கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான்.
வேலையோடு தான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன் தான் அவன்!.
அவன் “அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது
என் பர்ஸ் காணாம போச்சு; கையில காசு இல்ல;
தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல;
மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்;
நல்ல வெய்யில்; அகோரப் பசி வேறு;
மயங்கி விழுந்துட்டேன்;
கண் முழிச்சு பாத்தப்போ…
யாரோ ஒரு கூனமுதுகு கிழவன்
என்னை தூக்கி உட்கார வச்சு
ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னான்.
இட்லி சாப்பிட்ட பிறகு தான் எனக்கு உசுரே வந்தது!
இதைக் கேட்டதும்,பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்! ‘விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்…
அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே, ஆண்டவா!’
என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது; கண் கலங்கியது.
“நீ செஞ்ச பாவம் உங்கிட்டேயே இருக்கும்
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்” கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது!
உன்மை தான் …
எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை…
புரியும் வேளையில் வாழ யாரும் இருப்பதும் இல்லை….
செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து காக்கும்.
வேதத்தில் பார்ப்போம்,
ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.
லூக்கா :6:36.
மேலும், நீங்களெல்லாரும் ஒரு மனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களும் மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து,
1 பேதுரு: 3 :8.
மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.
மீகா: 6 :8.
பிரியமானவர்களே,
“இரக்கம்”- என்பதை கிறிஸ்து இயேசு பேசி, செயல்படுத்தி, வெளிப்படுத்திக் காட்டின தேவ குணாதிசயம். வாழ்வின் அனைத்துக் காரியங்களிலும், கர்த்தரின் இரக்கங்களைத் தேடும் அனேகர் பூமியில் உண்டு.
ஆனால், அவரது இரக்கத்தைப் பெற நிபந்தனை, முதலாவதாக, நாம் இரக்க சிந்தையால் நிரம்ப வேண்டும். இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்.. அவர்களே இரக்கம் பெறுவார்கள்.
நாம் நம்மைச் சுற்றியுள்ள மனிதரிடம் இரக்கம் காட்டாமல், தேவனிடம் இரக்கத்துக்காக கெஞ்சுவது பிரயோஜனமில்லை.. “நான் உனக்கு இரங்கினது போல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்க வேண்டாமோ என்று சொல்லி,”
(மத்தேயு 18:33) என்று வாசிக்கிறோம்.
மேலும், இரக்கஞ் செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மை பாராட்டும்.”
(யாக்கோபு 2:13) என்றும் வேதம் எச்சரித்தும் சொல்கிறது.
இரக்கத்தோடு கூடிய மனத்தாழ்மையே தேவனாகிய கர்த்தர் நம்மில் எதிர்பார்ப்பது…
“மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ் செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.”
(மீகா 6:8)
நாம் ஏற்கனவே இரக்கம் பெற்றவர்கள். ஆகையால், நாமும் இரக்கமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.
“முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள், இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்.”
(1 பேதுரு 2:10)
நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்த பின்னர், அவரைப் போலவே மாறுவதே கிறிஸ்தவ வாழ்வின் முக்கிய காரியம்..
“சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்கு நாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.”
(சங்கீதம் 41:1)
“வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.”
(சங்கீதம் 112:9)
“உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மை செய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே.”
(லூக்கா 6:35) என்ற வேத வார்த்தையின் படி நடக்கும் போதே நாம் அவரின் பிள்ளைகளாய் மாறுவோம்.
நம் தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர்.. நாமோ இரக்கத்தில் தரித்திரர். அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. நாம் நம் தேவைகள் நிறைவேறினால், எல்லாவற்றையும் மறந்து போகிறோம். கிறிஸ்தவ வாழ்வு, இரட்சிக்கப்பட்ட அன்று பெறும் மகிழ்ச்சியோடு முடிவது அல்ல.. அது இரக்கத்தின் தேவன் இயேசுவின் கரம் பிடித்து அனுதினமும் நடப்பது.. நாமும் நடந்து பாக்கியவான்களாவோமா?
ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை ஒவ்வொரு நாளும் வளர்த்துக் கொண்டு இரக்கமுள்ளவர்களாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.