கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். சங்கீதம் :126:5
அன்பானவர்களே!
வாழ்வை வளமாக்குகிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
தள்ளாடுகிற வயதிலே கை நடுக்கத்தோடு முதியவர் ஒருவர் மரக்கன்று ஒன்றை நட்டுக் கொண்டிருந்தார்.
அச்சமயம் அவ்வழியாக வந்த ஊர்த் தலைவர், தாத்தா உங்களுக்கோ வயதாகி விட்டது.இந்தச் செடி வளர்ந்து மரமாகி பழம் தரும் காலம் வரை நீங்கள் உயிருடன் இருக்கப் போவதில்லை. பின் ஏன் வீணாக கஷ்டப்படுகிறீர்? என்றார் .
அதற்கு அம்முதியவர் என்னை சுற்றியுள்ள மரங்களெல்லாம் என் முற்பிதாக்களால் நடப்பட்டவை.அதன் கனியைப் புசிக்கிற நான் என் வருங்கால சந்ததிக்காக இச்செடிகளை நட வேண்டாமா? என்றார்.
ஆம், நாம் நமது எதிர்கால சந்ததிக்கு என்ன கொடுக்க போகிறோம் என்பது மிக முக்கியமானது.
வேதத்திலே வசனம் என்பது விதைக்கு ஒப்பிடப்படுகிறது. இந்த உலகம் எனும் நிலத்தில் விதை விதைக்கிறவர்களாக ஆண்டவர் நம்மை தெரிந்தெடுத்து வைத்திருக்கிறார்.
இன்று நாம் ஆண்டவரை சுதந்திரமாக ஆராதிக்க காரணம் என்ன
இன்னல்களையும், உபத்திரவங்களையும் சகித்து வேத வசனத்தை விதைத்தவர்கள் நம் முற்பிதாக்கள் அல்லவா? அது போலவே நாமும் இன்று விசுவாசத்தோடு வேத வசனத்தை விதைக்க வேண்டாமா?
அப்போஸ்தலர் பவுல் கூறுகின்றார்.
அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.
1 கொரிந்தியர்: 9:16.
என்று வேதம் தெளிவாக கூறுகின்றது.
எனவே சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் கர்த்தருடைய வசனம் என்னும் விதையை கவனமாய் விதைப்போம். பின்வரும் சந்ததிகளுக்கு வாழ்வு கொடுக்க முயற்சிப்போம்.
வேதத்தில் பார்ப்போம்,
மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக் கொண்டு போய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதை விதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.
ஏசாயா: 32:20
மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச் செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது
ஏசாயா: 55:10
பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.
2 கொரிந்தியர்: 9:6
பிரியமானவர்களே,
இன்று நாம் எத்தனையோ விதமான முயற்சிகள் எடுத்து விதைத்தும் எந்த ஒரு மாற்றத்தையும் காணவில்லையே என்று நாம் கலங்கலாம்.
விதையை விதைக்க வேண்டியது மட்டுமே நமது பொறுப்பு.விளைய செய்கிறவர் தேவன்.
ஆனால் விதைக்க ஒரு காலமுண்டு அறுக்க ஒரு காலம் உண்டு என்று வேத வசனம் கூறுவது போல் என்றாவது ஒருநாள் நாம் விதைத்த விதை பலன் கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு வேத வசனங்களை விதைப்போம்.
உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச் செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்.
அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல் அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டு போகப்படுவீர்கள்;
பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்.
ஆம், ஆண்டவருடைய வார்த்தை எப்பொழுதும் அற்புதத்தையே கொண்டு வருகிறது.
இன்றைக்கு நீங்கள் பிரச்சனைகளின் மத்தியில் இருக்கிறீர்களா? ஆண்டவர் உங்கள் மீது அக்கறையுள்ளவராயிருக்கிறார். அவர் ஏற்ற நேரத்தில் உங்களுக்கு நல்ல பதிலை கொடுப்பார். அவர் பொய்யுரையாத தேவன்!
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஏற்ற நேரத்தில் தமது வார்த்தையை அனுப்பி உங்களை தேற்றுவார்.
அதுமட்டுமல்ல,
அவருடைய வார்த்தை
மகிழ்ச்சி என்ற கனியைத் தரும். நீங்கள் மிகுதியாய் செழித்து பூரிப்பீர்கள்.
ஆகவே நாம் நம்முடைய தலைமுறைக்கென்று கர்த்தருடைய வார்த்தைகளை போதிப்போம்.ஏற்ற நேரத்தில் அதற்கான பிரதிபலனையும் பெற்றுக் கொள்வோம்.
கர்த்தர் தாமே இத்தகைய பெரிதான நன்மைகளை நம் வாழ்வில் தந்து காத்து வழிநடத்துவாராக.
ஆமென்