Daily Manna 237

போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப் போடாதே. ரோமர் :14 :20.

எனக்கு அன்பானவர்களே!

இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

இன்றைய உலகம் உணவு மோகத்தில் சிக்கித் தவிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஒரு குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள், பிள்ளைகள் இணைந்து வீட்டில் சாப்பிடும் போது எல்லா விதங்களிலும் நன்மை அடைகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அவர்கள் கல்வியிலும், குடும்ப உறவுகளிலும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

அப்படி குடும்பத்தினர் இணைந்து உணவு உண்ணும் பழக்கமுடைய வீடுகளில் குழந்தைகள் நன்னடத்தை உடையவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட வீடுகளிலுள்ள குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிடுகையில் 40 சதவீதத்திற்கு குறைவாகவே புகை பிடிக்கும் பழக்கத்துக்கும், 50 சதவீதத்திற்கு குறைவாக மதுப் பழக்கத்துக்கும் செல்கிறார்கள் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் இன்று பல வீடுகளில் எல்லோருமாய் அமர்ந்து உண்ணும் கலாச்சாரம், இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருவது கவலையளிக்கிறது.

குழந்தை அழுதால் குர்குரே, லேஸ் என ஏதோ ஒரு பாக்கெட்டை கையில் திணிப்பதும். வார இறுதியில் பீட்ஸாவோ, பர்கரோ சாப்பிடுவதும். அடிக்கடி வெளியே போய் பிரியாணியை ஒரு கட்டு கட்டுவதும் பழக்கமாகி விட்டது.

சமையல் செய்வதை விட “சமையல்” நிகழ்ச்சிகளை டிவியில் பார்ப்பதே பலருக்குப் பிரியமானதாய் இருக்கிறது. இன்றைய மக்கள் நாவுக்கு சுவையான உணவு என நாம் அள்ளித் திணிக்கும் ஃபாஸ்ட் ஃபுட் வ‌கைக‌ளினால் பிற்கால‌த்தில் நாம் ஏக‌ப்ப‌ட்ட‌ நேர‌த்தை ம‌ருத்துவ‌னையில் செல‌வ‌ழிக்க‌ வேண்டியிருக்கும் என்ப‌தை நாம் தான் புரிந்து கொள்ள‌ வேண்டிய ய‌தார்த்த‌மாகும்.

குறிப்பாக‌ இன்றைய‌ குழ‌ந்தைக‌ளுக்கு நாம் ‘செல்ல‌மாக‌’ வாங்கிக் கொடுக்கும் உண‌வுப் பொருட்க‌ள் பிற்கால‌த்தில் ந‌ம‌க்கும், அவ‌ர்க‌ளுக்கும் அதிக‌ப்ப‌டியான‌ அவ‌ஸ்தையையே கொடுக்கும்.

அதீத‌ எடை எனும் ஒபிஸிடி பிர‌ச்சினையின் மூல‌ கார‌ண‌ம் ஃபாஸ்ட் ஃபுட் வ‌கைய‌றாக்க‌ள் தான். ப‌ள்ளிக்கூட‌ வாச‌ல்க‌ளிலும், மால்க‌ளின் ஓர‌ங்க‌ளிலும் இத்த‌கைய‌ குழ‌ந்தைக‌ளைப் பார்க்கும் போது ந‌ம்மைய‌றியாம‌லேயே ஒரு க‌வ‌லை வ‌ந்து தொற்றிக் கொள்கிற‌து.

அள‌வுக்கு அதிக‌மான‌ கொழுப்பு உட‌லில் தேங்குவது தான் அதீத‌ எடையின் முக்கிய‌ கார‌ண‌ம். இத்த‌கைய‌ குழ‌ந்தைக‌ளுக்கு ச‌ர்க்க‌ரை நோய் ம‌ற்றும் இத‌ய‌ம் சார்ந்த‌ நோய்க‌ள் எளிதில் வ‌ந்து விடுகின்ற‌ன‌.

துரித‌ உண‌வ‌க‌ங்க‌ளில் அதிக‌ கொழுப்பு, அதிக‌ கார்போஹைட்ரேட், அதிக‌ ச‌ர்க்க‌ரை க‌ல‌ந்த‌ உண‌வுக‌ளே வினியோகிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. இவை உட‌லிலுள்ள‌ இன்சுலின் சுர‌ப்பிக‌ளின் ப‌ணியை அலைக்க‌ழிக்க‌ வைத்து டைப் 2 எனும் ச‌ர்க்க‌ரை நோய் உட‌லில் வேரூன்ற‌ வ‌ழிசெய்து விடுகிற‌து.

வார‌த்துக்கு ரெண்டு,முன்று நாள் துரித‌ உண‌வ‌க‌ங்க‌ளில் சாப்பிடுப‌வ‌ர்க‌ளுக்கு ச‌ர்க்க‌ரை நோய் வ‌ரும் வாய்ப்பு இர‌ண்டு ம‌ட‌ங்கு அதிக‌ம் என்ப‌து ஒரு ஒப்பீட்டுத் த‌க‌வ‌ல்.

வ‌லிப்பு நோய் இன்னொரு அச்சுறுத்த‌ல். அத‌ன் மூல‌ கார‌ண‌ம் இத்த‌கைய‌ ஃபாஸ்ட் புட் உண‌வ‌க‌ங்க‌ள். இர‌த்த‌க் குழாய்க‌ளில் கொழுப்பு ப‌டிவ‌தால் உருவாகும் சிக்க‌ல் தான் வ‌லிப்பு நோயை த‌ருகிற‌து. இர‌த்த‌க் குழாய்க‌ளில் கொழுப்பு சேர்வ‌தால் வ‌ருகின்ற‌ இன்னொரு மிக‌ப்பெரிய‌ அச்சுறுத்த‌ல் இத‌ய‌ நோய்க‌ள்.

ம‌ர‌ண‌த்தை விலைக்கு வாங்கும் வ‌ழி தான் கொழுப்புக‌ளை அள்ளி உட‌லில் சேர்க்கும் இத்த‌கைய‌ உண‌வுக‌ள்.
துரித‌ உண‌வுக‌ள் உட‌லில் அள‌வுக்கு அதிக‌மான‌ சோடிய‌த்தையும் சேர்க்கின்ற‌ன‌. கொஞ்ச‌ம் ஃப்ர‌ஞ்ச் ஃப்ரை நீங்க‌ள் சாப்பிட்டாலே க‌ணிச‌மான‌ அள‌வு சோடிய‌த்தை உட‌லில் சேர்க்கிறீர்க‌ள் என்று அர்த்த‌ம்.

இப்ப‌டி சேரும் சோடிய‌ம் ம‌ன‌ அழுத்த‌ம், உய‌ர் இரத்த அழுத்த‌ம் ம‌ற்றும் இத‌ய‌ நோய்க‌ளை வ‌ர‌விக்கும் .

இவ்வ‌ள‌வு சிக்க‌ல்க‌ள் த‌ருகின்ற‌ இந்த‌ உண‌வுக‌ளில் வைட்ட‌மின்க‌ளோ, தேவையான புர‌த‌ச் ச‌த்துக‌ளோ, க‌னிம‌ச் ச‌த்துக‌ளோ இருப்ப‌தில்லை. நரம்புகள், எலும்புகள், தோல், மூளை, குடல், நுரையீரல் என அனைத்து பாகங்களுக்கும் துரித உணவுகள் ஆபத்தையே உருவாக்குகின்றன.

ப‌ண‌த்தைக் க‌ரைத்து வாங்கும் இந்த‌ உண‌வுக‌ளில் கெடுத‌ல்க‌ள் ம‌ட்டுமே இருக்கின்ற‌ன‌ என்ப‌து அதிர்ச்சிய‌ளிக்கிற‌து.
இத‌ற்கு என்ன‌ தீர்வு என‌ ம‌ருத்துவ‌ர்க‌ளிட‌ம் சென்றால் அவ‌ர்க‌ள் சொல்வ‌து என்ன‌ தெரியுமா ?

ந‌ம்ம‌ தாத்தா பாட்டி கால‌த்தில் என்ன‌ சாப்பிட்டார்க‌ளோ, எப்ப‌டி சாப்பிட்டார்க‌ளோ அப்ப‌டிச் சாப்பிட‌ வேண்டுமாம். தானிய‌ங்க‌ள், ப‌ழ‌ங்க‌ள், காய்க‌றிக‌ள், சுத்த‌மான‌ த‌ண்ணீர் என‌ அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வாழ்க்கை முறையை இய‌ற்கையோடும், ஆரோக்கிய‌த்தோடும் இணைத்துக் கொண்டிருந்தார்க‌ள்.

நாம் தான் தொலைக்காட்சி வெளிச்ச‌த்தில், தொழில் நுட்ப‌ பாதையில், நாக்கிற்கு அடிமைக‌ளாகி உட‌லை நோய்க‌ளின் கூடார‌மாக்கி விட்டோம்.

வேதத்தில் பார்ப்போம்,

பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள். போஜனபதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப் படுகிறது நல்லது; போஜனபதார்த்தங்களில் முயற்சிசெய்கிற வர்கள் பலனடையவில்லையே.
எபிரேயர்: 13:9

போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒருமேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை.
1 கொரிந்தியர்: 8:8

அழிந்து போகிற போஜனத்திற்காக அல்ல, நித்திய ஜீவன் வரைக்கும் நிலை நிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.
யோவான்: 6 :27.

பிரியமானவர்களே,

“குடிகாரரும் பெருந்தீனியரும் முடிவில் ஏழைகளாவர்: உண்டு குடித்த மயக்கம் கந்தையை உடுத்தும்” என்கிற‌து நீதிமொழிக‌ள்: 23:21. உண‌வு என்ப‌து தேவையான‌ அள‌வும், ஆரோக்கிய‌மான‌ வ‌கையுமாக‌ இருக்க‌ வேண்டும் என்ப‌தையே நீதிமொழிக‌ள் விள‌க்குகிற‌து.

“கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போருடைய தெய்வம் அவர்களுடைய வயிறு” என்கிறது பிலிப்பியர் 3 :18,19 வசனங்களின் சாராம்சம். வ‌யிறுக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌வ‌ர்க‌ள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் ப‌கைவ‌ர்க‌ள் என்று மிக‌வும் வ‌லிமையான‌ வார்த்தைக‌ளை தூய‌ ஆவியான‌வ‌ர் விவிலிய‌த்தில் ப‌திவு செய்து வைத்திருப்ப‌து விய‌ப்ப‌ளிக்கிற‌து.

“உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல.

கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள். ” என்கிற‌து
1 கொரி 6 : 19, 20 வ‌ச‌ன‌ங்க‌ள். அந்த‌ உட‌லை நாம் ஆரோக்கிய‌மாக‌ வைத்திருப்ப‌து ந‌ம‌து விருப்ப‌ம் ம‌ட்டும‌ல்ல‌, க‌ட‌மையும் கூட‌. க‌ட‌வுள் கொடுத்த‌ க‌ட்ட‌ளைக‌ளில் ஒன்றாக‌ நாம் அதை எடுத்துக் கொள்ள‌ வேண்டியிருக்கிற‌து.

ஆரோக்கிய‌ம‌ற்ற‌ உண‌வுக‌ளை உட்கொண்டு உட‌லினைப் பாழாக்குவ‌து என்ப‌து க‌ட‌வுளின் கோயிலை அசுத்த‌மாக்குவ‌து போல‌.

” சிகரெட் புகைப்பது உடலுக்கு எவ்வளவு தீங்கோ, அதை விட அதிகமாய் ஃபாஸ் புட் உணவுகள் உடலுக்கு தீங்கு இழைக்கின்றன” என்கிறது க‌ட‌ந்த‌ ஆண்டின் உல‌க‌ ந‌ல‌வாழ்வு நிறுவ‌ன‌ அறிக்கை.

ம‌துவினாலும், புகையினாலும் உட‌லை அசுத்த‌மாக்குவ‌து எப்ப‌டி பாவ‌மோ,அப்படியே ஃபாஸ்ட் புட் போன்ற‌ ஆரோக்கிய‌ம‌ற்ற‌ உண‌வுக‌ளால் உட‌லை அழிப்ப‌தும் பாவ‌மே

உண‌வு என்ப‌து வாழ்க்கையை ந‌ட‌த்திச் செல்வ‌த‌ற்கான‌ தேவை ம‌ட்டுமே. அதை முத‌ன்மைப்ப‌டுத்தி ஓடுவ‌து மிகவும் த‌வ‌று. ந‌ம் உட‌லெனும் ஆல‌ய‌த்தை த‌வ‌றான‌ உண‌வுக‌ளால் அழிப்ப‌து நமது உட‌லின் ஆரோக்கிய‌த்தைப் நாமே பாழாக்கி அத‌ன் மூல‌ம் ம‌ன‌தின் ஆரோக்கிய‌த்துக்கும் கெடுத்து விடுகிறோம். .

எனவே, முடிந்த‌வ‌ரை துரித‌ உண‌வுக‌ளைத் த‌விர்ப்போம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து,நாம் நோயில்லா வாழ்வு வாழ நம் அனைவருக்கும் உதவி செய்வாராக…

ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *