உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவொட்டாதிருக்கிறது. எரேமியா :5 :25
எனக்கு அன்பானவர்களே!
மன்னிப்பின் மகுடமாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
அமெரிக்க தேச வரலாற்றிலே இது ஒரு விசித்திரமானதாகும்.
ஜார்ஜ் வில்சன் என்பவரைக் குறித்த வழக்கு பிலடெல்பியாவில் உள்ள அமெரிக்க நீதிமன்றம் கி.பி. 1830ல், கொலைக் குற்றத்திற்காக்கவும். தபால்களை திருடியதற்காகவும், அவனுக்கு தூக்குத் தண்டனையை விதித்தது.
அப்பொழுது ஆண்ட்ரு ஜேக்சன் என்பவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தார். தூக்குத் தண்டனை நிறைவேற்ற வேண்டிய நாளுக்கு மூன்று வாரங்களுக்கு முன்.
ஜார்ஜ் வில்சனின் நண்பர்களின் பரிந்துரை கடிதத்திற்கு இணங்கி ஜனாதிபதி, வில்சனுக்கு மன்னிப்பு அளித்தார்.
ஆனால் இந்த உலகை திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சியாக வில்சன் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. மன்னிப்புக்குப் பதிலாக நீதிமன்றத் தீர்ப்பின்படி தன்னை தூக்கிலிடுங்கள் என்று உறுதியாக நின்றார்.
இந்த நிலை முன்பு ஒரு போதும் எழுந்ததில்லை. ஏனெனில் முன்பு எப்பொழுதெல்லாம் மன்னிப்பு வழங்கப்பட்டதோ, அப்பொழுதெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாட்டத்தோடு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இப்பொழுது சிறைசாலைத் தலைவன், நீதிமன்ற தீர்ப்பின்படி தூக்கிலே போட வேண்டுமா? அல்லது ஜனாதிபதி மன்னிப்பின் பேரில் விடுதலையளிக்க வேண்டுமா?
இந்த இடத்திலே சட்டம் அமைதியாக இருந்ததினால், உச்சநீதிமன்றம் இதில் உடனடியாக தலையிட்டு முடிவு காண வேண்டும் என ஜனாதிபதி அழைத்தார்.
முடிவு இப்படியாக எழுதப்பட்டது:
மன்னிப்பு என்பது ஒரு தாளில் உள்ளது; குற்றத்தில் சிக்கியுள்ள மனிதன் இதை ஏற்றுக் கொள்ளுவதை பொறுத்து, இதற்கு மதிப்பு வருகின்றது.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு மனிதன் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள மறுப்பது என்பது கடினமானது;
மறுத்தால் மன்னிப்பு, மன்னிப்பு ஆகாது. எனவே நீதிமன்ற தீர்ப்பின்படி, ஜார்ஜ் வில்சன் தூக்கிலிடப்பட வேண்டும் என்றார்.
அநேக மக்கள் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள மறுத்த வில்சனை முட்டாள் என திட்டி தீர்த்தார்கள்.
ஆனால் அதே மக்கள் தான் கடவுள் அருளும் மன்னிப்பை தினந்தோறும் உதறித் தள்ளுகின்றனர்.
பிரியமானவர்களே,
கர்த்தர் உங்களுக்கு
மன்னிப்பைக் கொடுக்கின்றார்! நீங்கள் பாவத்திலேயே மரிக்கத் தேவையில்லை; ஏனெனில் இயேசு உங்களுக்காக மரித்திருக்கிறார்;
சற்று கடினமாக கூற வேண்டுமானால்,
சரியான மனநிலையில் இருக்கும் ஒருவர், கல்வாரியில் இயேசு கொள்முதல் செய்த அன்பை ஏற்க மறுக்க மாட்டார்கள்.
இந்த வாய்ப்பை நீங்கள் மறுத்தால் உங்களுக்கு மன்னிப்பே இல்லை. நீங்கள் உங்கள் சொந்த தண்டனையை ஏற்க வேண்டும்; உங்கள் பாவத்துக்கான அபராதத்தை நீங்கள் சுமக்க வேண்டும்.
வேதத்தில் பார்ப்போம்,
உங்கள் மீறுதல்கள் மிகுதியென்றும், உங்கள் பாவங்கள் பலத்ததென்றும் அறிவேன்;
ஆமோஸ் :5 :12.
சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக் கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்.
1 தீமோத்தேயு: 5 :24.
உங்கள் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்.
அப்போஸ்தலர்: 3 :20.
பிரியமானவர்களே,
இன்று நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை நிதானிக்க அறிய வேண்டியது மிகவும் அவசியமாய் இருக்கிறது.
யாவரும் வழிவிலகி ஏகமாய் கெட்டுப் போனார்கள் எனும் வேதாகமக் கூற்றுப் படி நாம் அனைவரும் எந்த நிலையில் இருக்கிறோம்.
உலகமானது எத்துணை பயங்கரமான சூழ்நிலைக்குள் இருக்கிறது என்பதை நாம் உணராதிருப்பது எத்துணை மடமை
தேவனுடைய கட்டளைக்கு மாறாக நாம் செயல்படும் போது அதற்கான பிரதி பலன்கள் ஆபத்தானதாகவும் பயங்கரமானதாகவும் இருக்கும் என்பதை மக்கள் உணராதது தான் பரிதாபம்.
” உன் நடக்கையும் உன் கிரியைகளுமே இவைகளை உனக்கு நேரிடப் பண்ணின, இது இத்தனை கசப்பாயிருந்து, உன் இருதயமட்டும் எட்டுகிறதற்குக் காரணம் உன் பொல்லாப்புத் தானே .
எரேமியா : 4 : 18 என்கிறார்.
அதே நேரத்தில், ” என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை. பொல்லாப்புச் செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மை செய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள். எரேமியா : 4 : 22 என்று புலம்புகிறார்.
நம் மனமாற்றத்திற்கான செயல்பாடுகளை தேவன் ஒவ்வொரு நாளும் எதிர் பார்க்கிறார். என்பதை அறிவோம். மனமாற்றம் ஒன்றே மருந்து. பாவத்தை விட்டு விலகும் போது, பாவத்தால் வரவிருந்த மரணமும் அதன் தன்மையும் நம்மை விட்டு விலகும் என்பது திண்ணம்.
இந்த உண்மையை நாம் உணர்ந்து செயல்படுவோமாயின் நம்முன் மையமிட்டிருக்கும் ஆபத்துக்கள் அத்தனையும் பனிபோல் விலகும். அப்போது நாம் வாழ்கையில் ஜெயிப்போம் என்பது உறுதி.
இதற்கு ஒரே வழி இயேசு கிறிஸ்துவே. வழியும், சத்தியமும் ஜீவனுமான அவரையே சேர்வது தான் நாம் செய்யத்தக்க பிராயச்சித்தம்.
ஆகவே கர்த்தர் நமக்கு தருகிற அருட்கொடையாகிய மன்னிப்பை பெற்று வளமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்