Daily Manna 241

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். எபிரேயர்: 11:6

எனக்கு அன்பானவர்களே!

விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு குடும்பத்தினர் நாய் ஒன்றை ஆசையாய் வளர்த்தார்கள். அந்த நாய்க்கு ‘கேப்டன்’ என்று பெயர் சூட்டினார்கள். குடும்பத்தில் ஒருவர் போல அந்த நாயும் இருந்தது.

மிகவும் செல்லமாக வளர்த்தார்கள். திடீரென்று அந்தக் குடும்பத் தலைவருக்கு வியாதி வந்து மரித்துப் போனார். எல்லாரும் அழுது புலம்பினார்கள். இந்த நாயை யாரும் கவனிக்கவில்லை. இறந்தவரின் உடலை அடக்கம் செய்து விட்டு வீட்டிற்கு வந்த பொழுது, நாயை காணோம்.

எல்லா இடங்களிலும் தேடினார்கள்; கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு ஞாயிற்றுக்கிழமை அக்குடும்பத்தினர் ஆலயத்திற்கு சென்று ஆராதனை முடித்தபின் கல்லறைக்குச் சென்றார்கள். அந்த நாய், குடும்ப தலைவரின் கல்லறையின் மேலே உட்கார்ந்திருந்தது.

எல்லாரும் அதைக் கட்டிப்பிடித்து அழுதார்கள், “இந்த நாயை நாங்கள் கல்லறைக்கு கூட்டி வரவில்லையே. அதனுடைய எஜமான் இங்கு தான் இருக்கிறார் என்று எப்படி தெரிந்தது?” என்று அழுதார்கள். பின்பு வீட்டிற்குப் புறப்பட்டார்கள்.

ஆனால் நாய் அவர்களோடு கூட வரவேயில்லை. எத்தனையோ முயற்சித்தும் நாய் வரவில்லை. கல்லறையிலேயே இருந்தது. அந்தக் கல்லறையைப் பராமரிக்கிறவர்களிடத்தில், “இந்த நாய் எங்கள் வீட்டிற்கு வருவதாக தெரியவேயில்லை.

நாங்கள் உங்களுக்கு பணம் கொடுக்கிறோம். நீங்கள் அதற்கு சாப்பாடு போட்டு பராமரிக்க வேண்டும்” என்று சொல்லிப் போனார்கள். அப்படியே ஆறு வருடங்கள் கழிந்தது. அந்த நாய் அந்தக் கல்லறையிலேயே இருந்தது. அர்ஜென்டினா என்ற நாட்டில் இது உண்மையாய் நடந்த சம்பவம்.

அந்தக் கல்லறையை பார்த்துக் கொள்ளுகிற காவலாளர்கள், “இந்த நாய், நாள் முழுவதும் இந்த கல்லறை தோட்டத்தைச் சுற்றி சுற்றி நடக்கிறது. சாயங்காலம் சரியாக ஆறு மணிக்கு ஓடி வந்து தன் எஜமானரின் கல்லறையின் மேல் உட்கார்ந்து கொள்ளுகிறது. முழு இரவும் அந்தக் கல்லறையின் மேலேயே இருக்கிறது” என்று சொன்னார்கள்.

தன் எஜமானர் திரும்பி வருவார் என்ற விசுவாசத்துடன் அந்த பிராணி காத்திருந்தது போல, நாமும் ஜீவனுள்ள தேவனுடைய காலடியில் ஏன் நாம் நம்பிக்கையுடன் காத்திருக்கக் கூடாது?

வேதத்தில் பார்ப்போம்,

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.
எபிரேயர்: 11 :6.

அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.
யாக்கோபு :2 :26.

இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
ரோமர்: 5 :1.

பிரியமானவர்களே,

“நாய் மனிதனின் சிறந்த நண்பன்” என்ற சொற்றொடரை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருப்பீர்கள். விசுவாசம் விலங்குகளிலும் ஏற்படலாம்!

அதனால் தான், எல்லாவற்றிற்கும் மேலாக, நாய்கள், பூனைகள் அல்லது குதிரைகள் பொதுவாக ஒரு நபர் அவைகளை அன்பாக நடத்தும் போது, விசுவாசத்தையும், அன்பையும், பாசத்தையும் நன்றியையும் காட்டுகின்றன.

உங்கள் மீது விசுவாசமுள்ள ஒருவர் உங்களை ஒரு போதும் புறக்கணிக்க மாட்டார். அல்லது உங்கள் நேர்மை அல்லது ஆசைகளை மீறமாட்டார்.

நம் வாழ்க்கையில் ஆயிரம் புண்ணிய காரியங்கள் செய்யலாம். நல்ல காரியங்கள் செய்யலாம். அவை எல்லாவற்றையும் தேவன் அங்கிகரிக்கிறார் என்று தான் நமக்குப் போதிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் விசுவாசமில்லாமல் அவைகளைச் செய்யும் போது, கர்த்தர் அதில் பிரியப்பட மாட்டார். காயீனும் காணிக்கைகளைக் கொண்டு வந்தான்.

ஆபேலும் கர்த்தருக்குக் காணிக்கைகளைக் கொண்டு வந்தான். ஆனால் கர்த்தர் ஆபேலின் காணிக்கைகளை மட்டுமே அங்கிகரித்தார். காயீனுடைய காணிக்கைகளை அங்கிகரிக்கவில்லை

அதற்கு வேத வல்லுனர்களும், பிரசங்கியார்களும், ஊழியக்காரர்களும் ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். ஆனால் வேதம் ஒரு காரியம் சொல்கிறது.
விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான். – எபிரேயர் 11:4. என்று உறுதியாக கூறப்படுகின்றன.

நாம் கர்த்தருக்குச் செய்யும் எந்த காரியமாகட்டும், அதில் விசுவாசம் இருந்தால் மாத்திரமே அது மேன்மையான பலியாக, கர்த்தர் ஏற்றுக் கொள்கிற பலியாக, கர்த்தருக்குப் பிரியமானதாய் இருக்கும்.

ஆனால் இது வெறும் ஞாயிற்றுக்கிழமை நாம் செய்கிற சில ஆவிக்குரிய காரியங்களை அடுத்தது அல்ல.

விசுவாசம் என்பது தினந்தோறும் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு இருக்க வேண்டிய உயிர் மூச்சு. நம்மை இயங்க வைக்கிற இதயத்துடிப்பாக
நம்முடைய இரத்த நாளங்களில் பாய்கின்ற இரத்தம் போன்று நமது
விசுவாசம் இருக்க வேண்டும்.

யோசித்துப் பாருங்கள். விசுவாசத்தினால் மாத்திரமே தேவனுக்குப் பிரியமாயிருக்க முடியும். அந்த விசுவாசமே நம்முடைய உயிர்த் துடிப்பாய் இருந்தால், நம் வாழ்க்கையே தேவனுக்குப் பிரியமாகும்.

ஆவிக்குரிய வாழ்க்கை மாத்திரம் அல்ல, நம்முடைய ஜெப ஜீவியம் மட்டும் அல்ல, நம்முடைய தினந்தோறும் வாழ்க்கையே தேவனுக்குப் பிரியமான வாழ்க்கையாக மாறும்.

ஆகவே நாம் விசுவாச வார்த்தைகளையே பேசி விசுவாச ஜீவியத்தில் இன்னும் அதிகமாய் வளர கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே இந்த ஓய்வு நாளில் நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *