இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப் போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள். சங்கீதம்: 12:1.
எனக்கு அன்பானவர்களே!
உண்மையுள்ளவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு நாள் அயல் நாட்டில் இருந்து வந்த இரண்டு கல்விமான்கள் முல்லாவைச் சந்தித்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது வந்தக் கல்விமான்களில் ஒருவர் முல்லாவை நோக்கி ” முல்லா அவர்களே! உலகத்தில் பொய்யைக் காட்டிலும் உண்மையின் மதிப்பு அதிகமாக இருக்கிறது, அது ஏன்?” என ஒரு சந்தேகத்தைக் கேட்டார்.
நானும் உம்மை ஒரு கேள்வி கேட்கிறேன் உலகத்தில் இரும்பை விடத் தங்கத்துக்கு அதிக மதிப்பு இருக்கிறதே. அது ஏன்? என்று பதில் கேள்வி கேட்டார் முல்லா.
உலகத்தில் இரும்பு தாராளமாக எங்கும் கிடைக்கிறது. அதனால் இரும்பின் மதிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. தங்கமோ உலகத்தில் மிகவும் அரிதாகத் தான் எங்காவது ஒரிடத்தில் கிடைக்கிறது.
அதனால் தான் தங்கத்தின் மதிப்பு அதிகமாக இருக்கிறது என்றார் கல்விமான்.
பொய்க்கும் உண்மைக்கும் இந்த உதாரணமும் பொருந்தும். பொய் உலகத்தில் யாரிடமும் தாராளமாக கிடைக்கிறது.
ஆனால் உண்மை பேசுபவர்களைக் கண்டுபிடிப்பது தான் அரிதாக இருக்கிறது.
இவ்வாறு உண்மை எளிதில் கிடைக்காத பொருளாக இருப்பதால் தான் அதற்கு அதிகமான மதிப்பு இருக்கிறது என்று முல்லா பதில் சொன்னார்.
அந்த விளக்கத்தைக் கேட்டு கல்விமான்கள் இருவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
நம்முடைய ஆண்டவருடைய கண்கள் உண்மையுள்ளவர்களையே தேடுகிறது. அவர் சிறந்த கல்விமான்களையோ சாதுரியமான பிரசங்கிகளையோ அதிகமாய் படித்தவர்களையோ நோக்கிப் பார்ப்பதில்லை. உண்மையாய் நடக்கிறவர்களோ நமது ஆண்டவருக்கு பிரியம்.
வேதத்தில் பார்ப்போம்,
கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது.
சங்கீதம் 19:9.
எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.
லூக்கா: 19 :17.
ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்.
எபேசியர்: 5 :9.
பிரியமானவர்களே,
கர்த்தருடைய கண்கள் உண்மையுள்ளவர்களையே தேடுகிறது. உண்மையுள்ளவர்களின் கரங்களில் உத்தரவாதங்களை கொடுக்கிறார்.
உண்மையுள்ளவர்களை வல்லமையாக பயன்படுத்துகிறார். உண்மையாயிருத்தல் என்பது ஒருநாள் சம்பவிக்கின்ற காரியம் அல்ல.
அது அனுதின ஜீவியமாய் இருக்கிறது.
அநீதியான உலகப் பொருளைப் பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்? (லூக்கா 16:11)
வேதத்தில் அநேக பரிசுத்தவான்களை குறித்து நாம் வாசிக்கும் போது அவர்கள் உண்மையுள்ளவர்களாய் இருந்தார்கள் என்பதை நாம் அறியலாம்.
மோசேயைக் குறித்து வேதம் சாட்சி கொடுத்து “மோசே கர்த்தருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான்” என்று சொல்லுகிறது.
(எபி 3:5) தாவீதை குறித்து சொல்லும் போது உம்முடைய வீட்டிலே கனமுள்ளவனுமாயிருக்கிற உண்மையுள்ளவன்
(1 சாமு 2:14) என்று குறிப்பிடுகிறது.
தானியேலைக் குறித்தும் அப்படியே வாசிக்கிறோம். அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன் மேல் சுமத்த யாதொரு குறையும் காணப்படவில்லை. ( தானி 6:4.) என்று கூறுவதாக பார்க்கிறோம்.
ஆம், அது மாத்திரமல்ல, நம் அருமை ஆண்டவர் எத்தனை உண்மையுள்ளவர் என்பதை வேதத்தில் அநேக இடங்களில் பார்க்கிறோம்.
நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவர்
(1 தெச 5:24).
நம்மை ஸ்திரப்படுத்துகிறவர் உண்மையுள்ளவர்
(2 தெச 3:3). வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர் (எபி 10:2).
கர்த்தர் உண்மையும் நீதியுமுள்ளவர்
(1 யோவான் 1:9).
தேவபிள்ளையே ,
நீ உண்மையுள்ளவனாயிரு,சிறு சிறு காரியமானாலும் பெரிய காரியமானாலும் நீ உண்மையுள்ளவனாயிருப்பாய் என்றால் கர்த்தர் உன்னை அதிகமாய் உயர்த்துவார்.
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான். (நீதிமொழிகள் 28:20)
இந்நாட்களில் எங்கும் ஆண்டவரைக் குறித்த பயமும் பக்தியும் ஜனங்கள் நடுவில் குறைந்து கொண்டு வருகிறது.
பரிசுத்தத்தைக் குறித்த பயம் ஜனங்கள் நடுவில் இல்லை. இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப் போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள் என்று
சங்கீதம் 12:1-ல் எழுதப்பட்டிருக்கிறது
உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப் போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப் போலவும் ஒழிந்து போகிறது என்றும் வேதம் கூறுகிறது.
நம்முடைய பக்தி உண்மையுள்ளதாய் இருக்க வேண்டும். நம் வேலை ஸ்தலத்திலும், வீட்டிலும், வெளியிலும், நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளிலும், ஊழியத்திலும் உண்மையுள்ளவர்களாய் வாழ வேண்டும் என்று உண்மையுள்ள தேவன் எதிர்பார்க்கிறார்.
உண்மையுள்ள தேவனின் வழியில் நாம் நடந்து, அவர் தருகிற மேலான ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார்.
ஆமென்