மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன். நீதிமொழிகள்: 12:15.
எனக்கு அன்பானவர்களே!
ஆலோசனை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு மருத்துவர் இருந்தார். அவர் மிகவும் குறைந்த வயதிலே டாக்டர் பட்டம் பெற்றார். மிகவும் உற்சாகமாகவும் இருந்தார்.
ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆவல் எப்பொழுதும் அவர் உள்ளத்தில் பொங்கிக் கொண்டே இருந்தது. எனவே வெறும் மருத்துவ பணியில் மட்டும் வாழ்க்கைத் தேங்கி விடாமல் மலை ஏறும் செயலிலும் மிகவும் ஈடுபாடுடன் காணப்பட்டார்.
மிகவும் உயரமான, பனிகள் நிறைந்த மலைகளில் ஏறி திரும்புவது என்பது மிகப் பெரிய சாகசம். எனவே அந்த பகுதியிலுள்ள மக்கள் இவ்வாறாக சாதித்தவர்களுக்கு சிறந்த வரவேற்பை நடத்தி அவர்கள் உள்ளத்தைக் குளிர வைப்பார்கள்.
அப்படிப்பட்ட சாகச செயலுக்கு தயாரானானார் இளம் மருத்துவர். மிகவும் உயரமான இடத்திற்கு ஏறுவதற்கு நல்ல ஒரு வழிகாட்டியும் உதவியாக இருந்தார்.
மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய உடலுடன் கயிறையும் இணைத்திருந்தார்.
மற்றொரு புறத்தில் வழிகாட்டி மிக சிறப்பாக ஆலோசனைகளை கொடுத்து மலையின் உச்சத்தை அடையும் படிச் செய்தார்.
மருத்துவர் மிகவும் பெருமிதம் கொண்டார்.
மலையிலிருந்து திரும்பும் போது மிகவும் சாகசம் செய்த உணர்வு அவர் தலைக்கு ஏறியது. கீழே வேகமாக இறங்கிக் கொண்டிருந்தார். மிக அருகில் வந்த போது அவர் உள்ளத்தில் தன்னால் இந்த கயிறு இல்லாமலே என்னால் இறங்க முடியும்.
கயறு எனக்குத் தேவையில்லை என்று தூக்கி எறிந்து விட்டு இறங்க ஆரம்பித்தார்.
வழிகாட்டி இளம் மருத்துவரை எச்சரித்தார்.
தயவு செய்து அப்படிச் செய்யாதிருங்கள் என்று பலமுறை கூறியும் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் தன் திறமை மீது நம்பிக்கை உடையவராக இறங்கினார்.
திடீரென்று பனிப்பாறை அவரை வழுக்கி விட்டது. உதவிக்கு கயிறை பிடிக்கத் தேடினார். ஆனால் அது அருகில் இல்லை.
அதற்குள்ளாக தடுமாறிய அவர் பனிபாறையில் முட்டி மோதி கீழே விழ பனிப்பாறை அவரை மறைத்துப் போட்டது.
வழிகாட்டியோ ஒன்றும் செய்ய இயலாமல் கதறினார்.
வேதம் கூறுகின்றது.
என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்து கொள்ளுதலையெல்லாம் அசட்டை பண்ணினார்கள்.
நீதிமொழிகள்: 1:30 என்று பார்க்கிறோம்.
இன்றைய இளைஞர்களுக்கு பிடிக்காத ஒரு காரியம் உண்டு என்றால்,அது பெரியவர்கள் ஆலோசனைச் சொல்வது தான்.
Teen age வந்த உடன் தங்களுக்கு எல்லாம் தெரிகிறது, யாரும் நமக்குச் சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்லை என்ற மனநிலை வந்து விடுகிறது.
வேதத்தில் பார்ப்போம்,
ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்து போவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.
நீதிமொழிகள்: 11:14
ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்; நல் யோசனை செய்து யுத்தம் பண்ணு.
நீதிமொழிகள்: 20:18
கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.
சங்கீதம்: 33:11
பிரியமானவர்களே,
மனிதனுடைய யோசனை நம்மை சரியான வழியில் நடத்தும் என்று சொல்ல முடியாது. அவனுடைய யோசனை அநேக சமயங்களில் இந்த உலக அறிவைக் கொண்டு கொடுக்கப்படும் யோசனையாகவே இருக்கும்.
அது நமக்கு நீண்டகால வாழ்க்கைக்கு உதவாமல் போகலாம். ஆனால் நாம் தேவனுடைய யோசனையைத் தேடுவோமானால் அது எல்லா காலத்திலும் நன்மை பயக்கும்.
தேவன் அவ்விதம் தனிப்பட்ட மனிதனுக்கும் தமது ஆலோசனையைத் தந்து நடத்துகிறாரா? ஆம்! எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்.”
(சங்கீதம் 16:7)
நம்முடைய அறிவு எல்லைக்குட்பட்டது.
நாளை என்ன நடக்கும் என்பதை நாம் அறியோம். தேவ ஆலோசனை நாம் தப்பிப் போகாதபடி காத்துக்கொள்ளும்.
இன்றைக்கு அநேகர் தங்களுடைய வாழ்க்கையில் தேவ ஆலோசனையை தேடாததாலும், வாஞ்சிக்காததாலும் தங்களுடைய சொந்த வழியில் நடந்து, பிறகு அநேக சமயங்களில் வேதனைக்குள்ளாக நுழைந்து விடுகிறார்கள்.
இந்த தேவன் நமக்கு கொஞ்ச காலம் மட்டும் ஆலோசனைக் கொடுத்து, பின்பு கொடுக்காமல் போகிறவர் அல்ல. சங்கீதகாரனாகிய ஆசாப் எவ்வளவு நம்பிக்கையை தெரிவிக்கிறார் பாருங்கள்.
உம்முடைய ஆலோசனையின்படி என்னை நடத்தி முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுகொள்வீர்.”
(சங்கீதம் 73:24) அவருடைய ஆலோசனை நமக்கு , நம்முடைய கடைசி வேளை வரைக்கும் உண்டு.
அது மாத்திரமல்ல அந்த ஆலோசனை நித்திய மகிமைக்குள் பிரவேசிக்கும் வரை, நாம் தவறாமல் செல்ல வழி நடத்துகிறதாயிருக்கிறது.
அன்பானவர்களே!
இந்த சங்கீதக்காரன் தெரிவிக்கும் நம்பிக்கையைப் பாருங்கள். “நான் பெலவீனன், நான் அறிவீனன். ஆனால் என்னைத் தெரிந்துக் கொண்ட தேவன் என்னைக் கைவிடாமல் நித்திய மட்டுமாக வழிநடத்துவார்.”
எப்போதும் எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தருடைய ஆலோசனையைத் தேடுங்கள். அவர் ஆலோசனையில் பெரியவர், மகத்துவமானவர், உன்னதமானவர். அப்படி அவருடைய ஆலோசனையைத் தேடும் பொழுது, அவரை மகிமைப்படுத்துகிறாய்.
அது நமக்கு மேன்மையையும் கனத்தையும் கொண்டு வரும்.
ஜெபித்து வேதம் நேசித்து வாசித்தால் ஆலோசனைக் குரலை அங்கே கேட்க முடியும்! அவர் சொல்லும் வழியில் நடந்தால் சகலமும் நேர்த்தியாக நடக்கும்!
ஆகவே நாம் கர்த்தருடைய வழியில் நடந்து, அவர் தருகிற ஆலோசனைகளை பெற்று வளமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.