கர்த்தர் காயினை நோக்கி; உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது. ஆதியாகமம்: 4:9-10
எனக்கு அன்பானவர்களே!
சொந்த இரத்தத்தால் நம்மை மீட்டெடுத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
உலகத்தில் இது வரை எத்தனையோ மகாத்துமாக்கள், அறிஞர்கள் மற்றும் தலைவர்களின் இரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது.
அதினாலே, ஜனங்களுக்குப் பாவ நிவிர்த்தியோ, எந்த விதமான புண்ணியமோ ஏற்பட்டதில்லை.
அதற்குப் பதிலாக பகையும், கலகமும், விரோதங்களும், பிரிவினைகளும் தான் ஜனங்கள் மத்தியில் உண்டாயிருக்கிறது.
வேதாகமத்தின் அடிப்படையில் இந்த பூமியில் முதலாவது இரத்தம் சிந்தின மனிதன் ஆபேல். “விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்;
அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்துத் தேவனே சாட்சி கொடுத்தார் (எபி.11:4). ஆனால், காயீனையும் அவன் காணிக்கையையும் தேவன் அங்கீகரிக்கவில்லை.
“அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது. … காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலை செய்தான்” (ஆதி.4:5,8)
இவ்வாறு பொறாமையினிமித்தம் காயீனினால் பூமியில் சிந்தப்பட்ட நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் பரலோகத்திலுள்ள தேவனை நோக்கித் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எடுத்துக் கூறியது.
காயீன் செய்த கொலை பாதகத்தினிமித்தம் தேவன் காயீனை சபித்துப் போட்டார். “இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக் கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்த பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்,
நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியிலே நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்”
(ஆதி.4: 11,12).
இவ்வாறு ஆபேலின் இரத்த பலி காயீனுக்கு சாபத்தையும், தேவ தண்டனையையும் பெற்று தந்ததோடு அவன் பூமியிலே நிலையற்றவனாய்த் திரிந்தான்.
வேதத்தில் பார்ப்போம்,
பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலை செய்த காயீனைப் போலிருக்க வேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலை செய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.
1 யோவான் :3:12.
கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்.
ஆதியாகமம் :4:9
அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.
ஆதியாகமம் :4:10
பிரியமானவர்களே,
நம் இரட்சகரும் மீட்பருமாகிய அருமை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் குற்றமில்லாத திரு இரத்தமும் இந்தப் பூமியில் சிந்தப்பட்டது.
அவர் பாவஞ் செய்யவில்லை, அவர் வாயிலே வஞ்சனை காணப்படவும் இல்லை. அவர் இரத்தத்தைச் சிந்த வைத்த அவருடைய சொந்த ஜனங்களுக்கு அவர் எந்தவொரு தீங்கும் செய்யவில்லை.
இஸ்ரவேல் தேசம் எங்கும் அவர் நன்மை செய்கிறவராய்ச் சுற்றித் திரிந்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் போதித்தார். ஜனங்களின் சகல நோய்களையும், வியாதிகளையும் குணமாக்கி, பிசாசின் கட்டிலிருந்து அவர்களை விடுதலையாக்கினார்
பரலோகத்திலிருக்கிற பிதாவாகிய தேவனை வெளிப்படுத்திக் காட்டினார். ஆனாலும், அவர் மேல் பிடிவாதமாய்க் குற்றஞ் சாட்டினார்கள்.
அவருடைய அற்புதக் கிரியைகளையும், அவரது சத்திய வார்த்தைகளுக்கு ஜனங்கள் செவி கொடுப்பதையும், கீழ்ப்படிவதையும் கண்டு பொறாமையடைந்த மார்க்க வைராக்கியம் கொண்ட யூதத் தலைவர்கள், ஜனங்களின் மனதைத் திருப்பி, அவர் தேவ தூஷணம் சொன்னதாகக் குற்றப்படுத்தி அவரை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்தார்கள்
(மத்.26:65, 66).
“அடிக்கப்படும் படி கொண்டு போகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப் போலவும், தன்னை மயிர் கத்தரிக்கிறவனுக்கு… திறவாதிருந்தார்”
இயேசு கிறிஸ்துவோ தன்னுடைய உரிமையையும் வல்லமையையும் கையில் எடுக்கவில்லை.
முன்னறிவித்த வேதவாக்கியம் நிறைவேற, தன்னை ஜீவ பலியாக ஒப்புக் கொடுத்தார்.
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மனுக் குலத்திற்கு சாபத்தையும், தண்டனைகளையும் பிதாவினிடத்தினின்று பெற்றுத் தரவில்லை.
மாறாக, இன்றைக்கும் மாசற்ற அந்த இரத்தம் நமக்காகவும், உலகத்து ஜனங்களுக்காகவும் நன்மைகளையே அதாவது இரக்கத்தையும், மன்னிப்பையும் குறித்துப் பேசுகிறது.
ஆம்! இது நமக்காகச் சிந்தப்பட்ட புதிய உடன்படிக்கையின் இரத்தம், இரத்தஞ் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்புண்டாகாது என்ற வேதப் பிரமாணத்தைத் தம்முடைய சொந்த இரத்தத்தையே சிந்தி, நிறைவேற்றி மனுக்குலத்தை விடுவித்தார்.
ஆபேலின் இரத்தம் சாபத்தையும், தண்டனையையும் கொண்டு வந்ததைப் போலல்லாமல் இயேசு கிறிஸ்துவின் இரத்தமோ எண்ணிலடங்கா நன்மைகளைக் கொண்டு வந்ததை அறிந்து தேவனை மகிமைப்படுத்தக் கடமைப்பட்டுள்ளோம்
சகல பாவங்களையும் போக்கும் இயேசுவின் இரத்தமே நம்மை இவ்வுலகத்திலிருந்து மீட்டெடுத்து பாதுகாக்க வல்லது என்பதை உணர்ந்து வாழுவோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே இத்தகைய மீட்பை நம் யாவருக்கும் தந்து வழிநடத்துவாராக.
ஆமென்.