மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். நீதிமொழிகள்:18:21
எனக்கு அன்பானவர்களே!
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
நாம் பேசும் நல்ல வார்த்தையே நம்மை வாழ்வில் மேலோங்க வைக்கும் என்கிறது பேசும் கலை.
நம்மில் அநேகர் இரண்டு வயதுக்குள் பேச கற்றுக் கொள்ளுகிறோம்.
ஆனால் எத்தனை வயதானாலும் எப்படி பேச வேண்டும் என்று கற்றுக் கொள்ள தெரிவதில்லை.
கடுங்காற்று கடலில் பெருங் கொந்தளிப்பை ஏற்படுத்துவது போல நமது வாழ்க்கையையே ஆட்டம் காணச் செய்து விடுகிறது நம்முடைய நாவின் அசைவு.
குடும்பங்களுக்குள்ளும் கூட்டங்களுக்குள்ளும் பிரிவினைகள் ஏற்பட அதிக காரணமாயிருப்பது வாயின் வார்த்தைகள் தான்.
எவ்வளவோ சந்தோஷமாக இருந்த குடும்பம் கூட ஒரேயோரு வார்த்தையினால் பிரிந்து விடும்.
ஒரு பெரிய காட்டையே கொழுத்தி சாம்பலாக்கி விடும் சக்தியுள்ள தீப்பொறி போன்றது தான் நாவு.
பிரசங்கி: 6:5
உன் மாமிசத்தை பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங் கொடாதே, அது புத்தி பிசகினால் செய்தது என்று தூதனுக்கு முன் சொல்லாதே, தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங் கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்? என்று வேதம் கூறுகின்றது.
அனேகருடைய சாட்சி நிறைந்த வாழ்க்கை அவர்களின் அலட்சியம் நிறைந்த வார்த்தையினால், தங்கள் சாட்சி நிறைந்த வாழ்க்கையை அவர்களே அவமாக்கிப் போட காரணமாகி விடுகிறது.
எனவே நாம் எச்சரிக்கையோடிருந்து நாவின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
வாய்க்குள் போகும் உணவில் அறுசுவையை எதிர்பார்க்கும் நாம்…ஏன்? நமது
வாயிலிருந்து வெளிவரும் வார்த்தையின் மேல் கவனமாய் இருப்பது இல்லை.
பேசாதவை (மிருகங்கள், பறவைகள்) பேசினால் எப்படியிருக்கும் என கற்பனை செய்யும் நாம்,
பேசக்கூடாதவை (தகாதவை) பேசினால் என்னவாகும் என கணப் பொழுதாகிலும் யோசிப்பதில்லை.
‘யாகாவாராயினும் நாகாக்க’ என்றார் திருவள்ளுவர். ஆனால்,
”நாவை அடக்காதவனின் தேவபக்தி வீண்’ என்று யாக்கோபு சொல்லுகிறார் .
ஆம். கிறிஸ்தவம் பேச்சில் அல்ல பெலத்தில் (வாழ்க்கையில்) இருக்கிறது.
நீங்கள் பேசித் தான் உங்களை நிரூபிக்க வேண்டுமென்பதில்லை;
பேசாதிருந்தால் மூடனும் ஞானியென்று எண்ணப்படுவான் என்று வேதம் தெளிவாக கூறுகிறதே.
பிறரை வியக்க வைக்கும்படி நீங்கள் பேசாவிட்டாலும் எவரையும் வியர்க்க வைக்கும்படி மட்டும் பேசாதிருங்கள். ஆதலால், நாவை அடக்குங்கள். நலமானதைப் பேசுங்கள்..
வேதத்தில் பார்ப்போம்,
நாவும் நெருப்புத் தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச் சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்தி விடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!
யாக்கோபு:3:6
துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக் கேட்கிறான்: பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்
நீதிமொழிகள் :17:4
அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்ட அம்பு, அது கபடம் பேசுகிறது, அவனவன் தன் தன் அயலானோடே தன் தன் வாயினாலே சமாதானமாய்ப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்திலே அவனுக்குப் பதிவிடை வைக்கிறான்.
எரேமியா: 9:8
பிரியமானவர்களே,
ஒட்டகச் சிவிங்கியின் நாக்கு ஏறத்தாழ 45 சென்டிமீட்டர் நீளமுடையது. மரத்தின் கொப்புகளிலிருந்து இலைகளை லாவகமாக பறிப்பதற்கு ஏற்றதாயும் வலிமையுள்ளதாயும் இருக்கிறது.
நீலத் திமிங்கலத்தின் நாக்கு மட்டுமே ஒரு யானையின் எடைக்குச் சமம். நாக்கை அசைக்கவே அதற்கு எவ்வளவு பலம் தேவைப்படும்!
இதுபோன்ற விலங்குகளின் நாக்கோடு ஒப்பிட மனிதனுடைய நாவு அளவிலும் சரி, எடையிலும் சரி, பலத்திலும் சரி ஒன்றுமே இல்லை. ஆனாலும், அந்த விலங்குகளின் நாக்கைவிட மனிதனுடைய நாவு அதிக வலிமை வாய்ந்தது.
மனிதனின் உடலில் இருக்கும் இந்தச் சிறிய உறுப்பைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்.”
நீதிமொழிகள்: 18:21
உண்மையில், மனிதனுடைய நாவு சாவை விளைவிக்கும் அளவுக்கு வலிமையுடையது என்பதை எத்தனையோ முறை கேட்டிருப்போம், அல்லவா?
பொய் சொல்வதற்கும் தவறான வாக்குமூலங்கள் கொடுப்பதற்கும் பயன்படுத்தப்படும் இந்த நாவு எத்தனை எத்தனை அப்பாவிகளுடைய வாழ்க்கையை சீரழித்திருக்கும்.
எத்தனை பேரை கொன்று குவித்திருக்கும்?யோசித்துப் பாருங்கள்.அது போலவே, புண்படுத்தும் வார்த்தைகள் நீண்டகால நட்புறவுகளையும் கூட முறித்து விடுகின்றன.
கடுகடுப்பான வார்த்தைகள் உணர்ச்சிகளை நொறுக்கியிருக்கின்றன. “நீங்கள் எந்தமட்டும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?” என்று பழிதூற்றப்பட்ட யோபு மனமுடைந்து கேட்டார்.
யோபு 19:2
கட்டுப்படுத்தப்படாத நாவு எவ்வளவு பெரிய அழிவை உண்டாக்கக் கூடும் என்பதை சீஷனாகிய யாக்கோபு பின்வருமாறு விளக்கினார்:
“நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது! நாவும் நெருப்புத் தான்.”
மறுபட்சத்தில், நாவின் வலிமையால் உயிரை காக்கவும் முடியும். கனிவான, ஆறுதலான வார்த்தைகள் சிலரை மனச் சோர்விலிருந்து விடுவித்திருக்கின்றன.
சிலரை தற்கொலை செய்வதிலிருந்து தடுத்திருக்கின்றன. நம்பகமான அறிவுரைகள், போதைப் பொருட்களுக்கு அடிமையாய் இருந்தவர்களையும் பயங்கர குற்றவாளிகளையும் மரணத்தின் கோரப் பிடியிலிருந்து விடுவித்திருக்கின்றன.
நிச்சயமாகவே, நீதிமானுடைய நாவின் பலன் ‘ஜீவவிருட்சமாகும்,’ “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.”
இன்று நம்முடைய வார்த்தைகள் எப்படி இருக்கிறது? யோசித்துப் பார்ப்போம்???
நம்முடைய வார்த்தைகள் பிறரை காயப்படுத்தும் படி இருக்கிறதா? இல்லை இயேசுவைப் போல் பிறரின் காயங்களை ஆற்றும் ஔஷதம் போல இருக்கிறதா?? என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.
கர்த்தர் தாமே இந்த வார்த்தைகள் மூலமாக நம்மை ஆசீர்வதித்து, நலமானவைகளை பேச தமது கிருபையை அளிப்பாராக.
ஆமென்