ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார். ஆதியாகமம் :4:4
ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார்.
ஆதியாகமம் :4:4
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
எனக்கு அன்பானவர்களே!
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
“காணிக்கை” என்றதுமே அநேகருடைய இருதயத்தில் குழப்பமும், முகத்தில் மாறுதலும் ஏற்படுகின்றது; சபைகளிலும் இது பல கேள்விகளை எழுப்புகிறது.
ஆதியிலிருந்தே தேவனுக்குக் காணிக்கை கொடுப்பது என்பது மனிதனுக்குக் குழப்பத்தை ஏற்படுத்திய விஷயமாகவே இருந்து வருகிறது.
முதன் முதல் தேவனுக்குக் காணிக்கை கொடுத்தவர்கள் ஆதாமின் பிள்ளைகளாகிய காயீனும் ஆபேலுமே. இவர்கள் தமது தொழில்களின் பலனில் இருந்து, தாமாகவே காணிக்கையைக் கொண்டு சென்றார்கள்.
காயீன் தன் நிலத்தின் கனிகளையும், ஆபேல் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டு சென்றனர்.
ஆபேலையும் அவனது காணிக்கையையும் அங்கிகரித்த கர்த்தர் காயீனின் காணிக்கையை அங்கிகரிக்கவில்லை என்றதுமே, காயீனுக்கு எரிச்சல் உண்டாகி, முகநாடி வேறுபட்டது என்று வாசிக்கிறோம்.
ஆனாலும், கர்த்தர் காயீனுடன் பேசினார்; அவனுக்கு உணர்த்தினார்.அதன் பின்னரே, காயீன் திட்டமிட்டு ஆபேலைக் கொலை செய்தான்.
கர்த்தர் எதற்காகக் காயீனின் காணிக்கையை அங்கிகரிக்கவில்லை என்ற கேள்வி எழும்பலாம். கர்த்தர் யாவையும் அறிந்திருக்கிறவர். அவருக்குக் காணிக்கையையும் தெரியும்; அதைக் கொண்டு வந்தவர்களின் உள் மனதும் தெரியும்.
கர்த்தர் இருதயத்தைக் காண்கிறவர். நாம் என்ன காணிக்கை கொடுக்கிறோம் என்பதை விட அவர் நமது இருதய சுத்தத்தையே விரும்புகிறார்.
கர்த்தர் காணிக்கை கேட்டாரா? இல்லை அவர்கள் தாமாகவே கொடுத்தார்கள். அது தேவனிடம் மனிதனுக்கிருந்த வாஞ்சையின் ஒரு வெளிப்பாடு; அது இயல்பானது. ஆனால், தேவன் நமது குணாதிசயம், நமது இருதயம் போன்றவற்றையே
பார்க்கிறார்.
இரண்டு காசை காணிக்கைப் பெட்டியிலே போட்ட அந்த ஏழை விதவையின் இருதயத்தை ஆண்டவர் கண்டார்.
உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறையிருந்தால், முதலில் அதனைச் சரிப்படுத்தி விட்டு வந்து காணிக்கையைச் செலுத்து என்று சொன்னவர் நம் ஆண்டவர்.
நமது காணிக்கையின் அளவையல்ல, நமது இருதயத்தையே காண்கிறவர். காணிக்கை கொடுப்பது என்பது நன்றியின் அடையாளம்.
அதனை சுத்த மனதோடும், மனப்பூர்வமாயும் கொடுப்போம். குறைவானாலும் கர்த்தர் அதனை நிச்சயம் அங்கிகரிப்பார்.
வேதத்தில் பார்ப்போம்,
பீறுண்டதையும் கால் ஊனமானதையும் நசல் கொண்டதையும் கொண்டு வந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக் கொள்வேனா என்று கர்த்தர் கேட்கிறார்.
மல்கியா:1 :13
ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டு வந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார்.
ஆதியாகமம்: 4:4.
விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்து தேவனே சாட்சி கொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.
எபிரேயர்:11 :4.
பிரியமானவர்களே,
அன்று ஆதாம், பாவம் செய்த போது கடவுளை விட்டு விலகி பயந்து ஓடி ஒளிந்தான்.
ஆனால் காயீனோ கொஞ்சமும் பயம் இல்லாமல், கடவுள் முன்னால் நின்று, “என் சகோதரனுக்கு நான் என்ன காவலாளியா?” என பதில் கொடுக்கிறான்.
இது துணிகரமான பாவமாகிறது.
பாவம் இன்னொரு நிலை அதிகரிக்கிறது. சாத்தான் ஏவாளிடம் பொய் சொன்னான், காயீனோ, கடவுளிடமே பொய் சொல்கிறான்.
பாவம் கடவுளையும் மனிதனையும் பிரிக்கிறது.
நாம் செய்கின்ற பாவம் எல்லாம் நம்மைச் சுற்றி இருக்கிறது. அது நமக்கு எதிராக குரலெழுப்பிக் கொண்டே இருக்கிறது.
“காயீனைப் போல் நீங்கள் இராதீர்கள்; அவன் தீயோனைச் சார்ந்தவன்; ஏனெனில் தன் சகோதரரைக் கொலை செய்தான். எதற்காக அவனைக் கொலை செய்தான்? .
வேதத்தில் எழுதியிருப்பதை தெளிவாய்க் கவனியுங்கள், ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரித்தார்.
காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கீகரிக்கவில்லை ஆதியாகமம்: 4:4,5
நம் தேவன் ஆபேலை அங்கீகரித்த பின்னரே (ஆபேலையும்) அவன் காணிக்கையை அங்கீகரித்தார்.
காயீனை அங்கீகரிக்காததினால் தான் (காயீனையும்) அவன் காணிக்கையை அங்கீகரிக்கவில்லை.
எனவே உண்மையான காரணம் என்னவென்றால் காணிக்கை செலுத்துபவரை தேவன் ஏற்றுக் கொண்டால் தான் அவன் காணிக்கையையும் ஏற்றுக் கொள்வார்.
இன்று ஏனோ தானோ, என்று காணிக்கைப் பெட்டியிலோ, அல்லது காசோலையிலோ, நாம் செலுத்தும் காணிக்கை ஏற்று கொள்ளப்பட்டதா, என சிந்திப்பவர் அநேகரில்லை.
“அள்ளி அள்ளிக் கொடுத்தாலும்
ஆண்டவர் தள்ளி விட்டால்
அதனால் எந்த பயனும் இல்லை.
ஆபேல் முதல் தரமானவைகளை கொண்டு வந்தான். எனவே தான் தேவன் ஆபேலின் காணிக்கையை அங்கீகரித்தார்.
கெட்டுப் போன காய்கறிகளோ, பழங்களோ, பயன்படுத்த முடியாத கிழிந்த ரூபாய் நோட்டுகளையும்,
பீறுண்டதையும்,கால் ஊனமானதையும், நசல் கொண்டதையும், கொண்டு வந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக் கொள்வேனோ என்று கர்த்தர் கேட்கிறார்.
தன் மந்தையில் கடா இருக்கையில் கெட்டுப் போனதை ஆண்டவருக்கு நேர்ந்து கொண்டு பலியிடுகிற கபடஸ்தன் சபிக்கப்பட்டவன் அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக் கொள்வேனோ என்று கர்த்தர் கேட்கிறார் (மல்கியா: 1:13 14)
எனக்கு அன்பானவர்களே,
நம்மையும் நம் காணிக்கையையும் தேவன் ஏற்றுக் கொள்ளும் பொருட்டு நம் குறைகளை சரி செய்து
நேர்த்தியானதை மனமுவந்து கர்த்தருக்கென்று கொடுக்கும் போது கர்த்தர் நம்மையும் நம் காணிக்கையையும் அங்கிகரிப்பார்.
கைகளில் சுத்தமும், இருதயத்தில் மாசில்லாமலும் தேவனுக்கு முன்பாக உண்மையாய் இருப்பதையே தேவன் விரும்புகிறார் என்பதை உணர்ந்து வாழுவோம்.
கர்த்தர் தாமே இத்தகைய பரிசுத்த வாழ்வு வாழ நம் யாவருக்கும் அருள் புரிவாராக.
ஆமென்.