என் வார்த்தை அக்கினியைப் போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப் போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா: 23:29
எனக்கு அன்பானவர்களே!
இந்த புதிய மாதத்தின் முதலாவது பரிசுத்த ஓய்வு நாளை காணச் செய்த இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஜார்ஜ் மத்தேசன் என்ற ஆங்கிலேயர் தமது 18-ஆம் வயதில் பார்வைக் குறைவுக்கு ஆளானார். சிறிது சிறிதாக அவரது பார்வை மங்கிக் கொண்டே வந்தது.
ஒருநாள் தனது பார்வை முற்றிலும் இழந்து விடும் என்பதை அவர் தெளிவாக அறிந்து கொண்டார். இதனால் அவர் மணக்க இருந்த பெண், அவரைத் திருமணம் செய்ய விருப்பமில்லாமல், அவருடன் செய்திருந்த தனது திருமண நிச்சயத்தை முறித்துக் கொண்டார்.
1882-ஆம் ஆண்டு ஜுன் மாதம் தனது சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்ள, ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரிலுள்ள ஒரு திருச்சபையின் குருமனையில் மத்தேசன் காத்துக் கொண்டிருந்தார்.
அவரது நினைவலைகள் பின்னோக்கி ஓடின; தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண், தன்னுடன் எத்தனை அன்பு,பாசம், நேசத்தை காட்டினாளே, எனக்கே தெரியாமல் எனக்கு வந்த குறைபாடு எண்ணி இப்போது தன்னை விட்டுப் பிரிந்து போனதையும், தன்னுடைய இதயத்தை சம்மட்டியால் சுக்குநூறாக நொறுக்கி விட்டதையும் எண்ணிப் பார்த்தார்.
ஆனால் தன்னை விட்டு என்றுமே நீங்காத அக்கினி மயமான தேவனின், அன்பு, தனது இதயத்தை அவர் என்றுமே நொறுக்கமாட்டார் என்பதையும் நினைத்து,ஓர் அழகிய கவிதையை அங்கே எழுதினார்.
அது புகழ்பெற்று இன்றும் திருச்சபைகளில் பாடப்படுகிறது.
“அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்
சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்;
தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர் பிரவாக அன்பில் பாய்ந்தென்றும் ஜீவாறாய்ப் பெருகும்”
இந்த தேவனின் அன்புக்கு ஈடான அன்பு இவ்வுலகில் வேறேதும் உண்டோ??? என்று கேள்வி எழுப்புகின்றார்.
வேதத்தில் பார்ப்போம்,
பூமியின் மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.
லூக்கா: 12:49
என் வார்த்தை அக்கினியைப் போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப் போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா: 23:29
நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சகரியா :2 :5.
பிரியமானவர்களே,
நம் வாழ்க்கையில் எத்தனை எத்தனை துன்பங்கள் வந்தாலும், எண்ணற்ற துயரங்கள் நம்மை நேரிட்டாலும், தேவனை நாம் முழுமையாக நம்பும் பொழுது,
எருசலேமைச் சுற்றிலும் அக்கினி மதிலாய் இருப்பேன் என்றவர், உங்களைச் சுற்றிலும், உங்கள் பிள்ளைகளைச் சுற்றிலும், உங்கள் குடும்பங்களைச் சுற்றிலும், மதிலாய் இருப்பார்.
அக்கினி ஸ்தம்பம் பார்வோனையும் அவன் சேனையையும் இஸ்ரவேல் ஜனங்களை நெருங்க விடாமல் காத்தது போல, சத்துருவின் கிரியைகள் உங்களைத் தொடாதபடி கர்த்தருடைய அக்கினி உங்களைக் காக்கும்.
நம்முடைய தேவன் அக்கினமயமானவர். அவருடைய கண்கள் அக்கினி ஜீவாலை (வெளி. 1:14, 2:18), அவருடைய முகம் வல்லமையாய் பிரகாசிக்கிற சூரியனைப் போன்றது
(வெளி. 1:16),
அவருடைய முழுச்சரீரம் அக்கினி (எசேக்கியேல்:1:27), அவருடைய சிங்காசனம் அக்கினியாய் காணப்படுகிறது, அக்கினி நதி அதிலிருந்து புறப்பட்டு வருகிறது (தானி:7:9).
அக்கினி மயமான தேவனின் பிள்ளைகள் அக்கினியாகக் காணப்பட வேண்டும் என்பது தான் அவருடைய விருப்பம்.
பழைய ஏற்பாட்டில் பலி செலுத்தப்பட்ட இடங்களில் அக்கினியாக இறங்கி வந்தவர், பெந்தெகோஸ்தே நாளிலிருந்து நம்முடைய இருதயமாகிய பலிபீடங்களில் அக்கினியாய் இறங்குகிறார், அக்கினி மயமான நாவுகளாய் வந்து அமருகிறார்.
கர்த்தருடைய அக்கினி உங்களுடைய பாவத்தின் அழுக்கைச் சுட்டெரிக்க வல்லமையுள்ளது, ஏசாயா பரிசுத்தமுள்ள சேனைகளின் கர்த்தரைக் கண்ட உடனே, நான் அசுத்த உதடுகள் உடையவன், அசுத்த உதடுகள் உள்ள ஜனங்களின் நடுவில் வாசம் பண்ணுகிறேன், ஐயோ அதமானேன், சேனைகளின் கர்த்தரை என் கண்கள் கண்டதே என்று கதறினான்.
உடனே பலிபீடத்திலிருந்து ஒரு நெருப்புத்தழலை எடுத்து வந்து தேவ தூதன், அக்கினி உன் நாவைத் தொட்டதினால் உன் அசுத்தங்கள் விலகினது என்றான். அது போல, அக்கினி சத்துருவின் கிரியைகளை அழிக்க வல்லமையுள்ளது.
இதை வாசிக்கும் அருமையான சகோதரனே, சகோதரியே, கர்த்தரின் வார்த்தை உன் வாழ்வில் வரும் அனைத்து விதமான சோதனைகளிலிருந்தும் உன்னை தூக்கி நிறுத்த வல்லமை உள்ளது.
எனவே ஒரு போதும் தேவனுடைய வார்த்தையை அலட்சியப்படுத்தி, அசட்டை செய்து விடாதேயுங்கள். அவருடைய வார்த்தைகள் மிகுதியான ஆற்றல் உடையது.
அவருடைய வார்த்தைகள் அக்கினியைப் போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப் போலும் இருக்கிறது. இந்த வார்த்தைகள் நம்மைக் குணமாக்கி அழிவின் குழிக்கு விலக்கும் ஆற்றல் உடையது.
கர்த்தர் தருகிற வார்த்தைகளை விசுவாசித்து, அவருக்கு பிரியமுள்ளவர்களாய் வாழ கர்த்தர் தாமே இந்த ஓய்வு நாளில் நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.