Daily Manna 249

அவர் ஜெபம் பண்ணுகையில், அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது. லூக்கா :9 :29.

எனக்கு அன்பானவர்களே!

ஜெபத்திற்கு பதில் தருபவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஹேமில்ட்டர் என்ற வேத கலாசாலையிலிருந்த மூத்த ஊழியரான பாக்கஸ் என்பவர் மரிக்கும் தருவாயில் இருந்தார்.

மருத்துவர் பாக்கஸை சோதித்து விட்டு, அறையின் வாசலில் நின்று கொண்டிருந்த அவரது நண்பர்களிடத்தில் ஏதோவொன்றை மிக அமைதியாக சொல்லி விட்டு சென்றார்.

டாக்டர் சென்றவுடன் படுக்கையிலிருந்து பாக்கஸ், தன்னுடைய நண்பர்களை கையசைத்து கூப்பிட்டு, ‘டாக்டர் சொன்னதை என்னிடம் மறைக்காமல் கூறுங்கள்’ என்று அன்புடன் கேட்டார்.

அவர்கள் தயக்கத்துடன் இன்னும் அரைமணி நேரத்திற்கு மேல் உயிருடன் இருக்க முடியாது என்று டாக்டர் சொன்னதை கண்ணீர் மல்க கூறினர்கள்.

பாக்கஸ், ‘அப்படியானால் என்னை உடனே படுக்கையிலிருந்து எடுத்து முழங்காலில் நிறுத்துங்கள்.

என் வாழ்வின் கடைசி நிமிடங்களில் இந்த உலகிற்காக இயேசுவை நோக்கி ஜெபிப்பதில் என் நேரத்தை செலவிட விரும்புகிறேன்’ என்றார்.

ஒரு சில நிமிடங்களில் முழங்காலில் நின்றபடியே அவரது உயிர் பிரிந்தது. பல வருடங்களாக தான் கடைபிடித்து வந்த ஜெப பழக்கத்தை உயிர் பிரிகிற கடைசி மணித்துளிகளிலும் தவறாமல் கடைபிடித்தார்.

உண்மையாய் கிறிஸ்துவை நேசிக்கும் ஒரு விசுவாசிக்கு ஜெபம் என்பது வெறும் தேடுதலோ வேண்டுதலோ அல்ல; ஜெபம் அவனது மூச்சு; இதயத்துடிப்பு!

வேதத்தில் பார்ப்போம்,

எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.
1 பேதுரு: 4:7.

சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
லூக்கா: 18:1

அப்பொழுது அன்னாள் ஜெபம் பண்ணி: என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என் பகைஞரின் மேல் என் வாய் திறந்திருக்கிறது; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்.
1 சாமுவேல்: 2:1.

பிரியமானவர்களே,

ஒரு கிறிஸ்தவன் ஜெபிக்காமல் இருக்க மாட்டான். சிறியதோ பெரியதோ, அவசரமோ ஆழமோ நாம் எல்லோருமே ஜெபிக்கிறோம்.

ஜெபம் நம்முடைய வாழ்க்கையில் என்ன செய்கிறது என்றால், நம்மை ஒவ்வொரு நாளும்
மறுரூபப்படுத்துகிறது. கர்த்தருக்குள்ளாக இருந்து, கர்த்தரை
அறிந்து கொள்ளச் செய்கிறது.

நம்முடைய வாழ்க்கையைக் குறித்த தேவனுடைய சித்தத்தை தெரிந்து கொள்ளச் செய்கிறது. தேவன் எவ்விதமாக நமது வாழ்வில் செயல்படுகிறார் என்பதை விளங்கிக் கொள்ள
செய்கிறது.

கர்த்தர் நம்முடைய வாழ்வில் செயல்படுவதற்கு நம்மைக்
காத்திருக்கச் செய்கிறது.ஜெபம் நமது வாழ்வில் நம்மை புதுப்பித்துக்
கொண்டே இருக்கிறது.
ஜெபம் நம்மை சோர்விலிருந்து உடனடியாக விடுவிக்கிறது.

பழைய ஏற்பாட்டில் யோசுவா தன்னுடைய வேண்டுதலால், சூரியனை கிபியோன் மீதும், சந்திரனை அய்யலோன் பள்ளத்தாக்கிலும் நிற்கும்படி கூறினார்.

அவருடைய குரலைக் கேட்டு சூரியன் அஸ்தமிக்க நினைக்காமல், ஏறக்குறைய ஒரு பகல் முழுவதும் நடுவானத்தில் நின்றதாக வேதத்தில் எழுதப்பட்டுள்ளது.
அன்று யோசுவாவின் குரல் இயற்கையை நிறுத்தியது.

ஆனால் வேதத்தில் பார்வையற்றவரின் குரலோ அனைத்தையும் படைத்தவரையே நிற்க வைத்தது. அவர் கூக்குரலிட்ட போது இயேசு அதனை கடந்து செல்லாமல், அவருடைய குரலை கேட்டு நின்று அவருக்கு விடுதலையை கொடுத்தார்.

அதே இயேசு கிறிஸ்து இன்றும் நம் மத்தியில் உலாவி கொண்டு தான் இருக்கிறார். அவர் நம்முடைய வேதனைகளையும், துன்பங்களையும் காண்கிறார்.

இப்போதும் அவர், அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச் செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.
என்றார்.

இந்த வாக்குத்தத்தத்தின் படி நம்முடைய குரலை கடந்து செல்பவராய் அல்ல, அதற்கு பதில் அளிப்பவராகவே இருக்கிறார். அந்த உறுதியுடனும், நம்பிக்கையுடனும் நாமும் ஒவ்வொரு நாளும் ஜெபிப்போம். நம்முடைய ஜெபம் நம் வாழ்வில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும்.

வேதத்தில் அநேகர் ஜெபத்தின் மூலம் வெற்றியைப் பெற்றது போல நாமும் நமது வாழ்வில் ஜெபத்தின் மூலம் வெற்றியைப் பெற்றுக் கொள்வோம்.

கர்த்தரின் ஆசீர்வாதம் நம் யாவரோடும் கூட இருந்து வழிநடத்துவதாக.

ஆமென்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *