{இயேசு} நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். லூக்கா :18 :41
எனக்கு அன்பானவர்களே!
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு நாட்டை சேர்ந்த மன்னர் தன் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறியும்படி அடிக்கடி வேஷம் மாறி, மக்களோடு மக்களாக கலந்து என்ன சொல்கிறார்கள் என்று கேட்பது வழக்கம்.
ஒரு முறை அவர் அப்படி சென்ற போது, பொது குளியலறையில், அங்கு தண்ணீரை சூடுபடுத்தும் தொழிலாளி இருப்பதை கண்டார். முன்பு இப்போதிருப்பது போல் ஹீட்டர் போன்ற சாதனங்கள் அன்று இல்லாமலிருந்த நிலைமை.
அப்போது அந்த மனிதனிடம் மன்னர் பேசினார். அப்போது அவன் பேசிய விதம், அந்த மன்னருக்கு பிடித்து போயிற்று. எனவே தினமும் அவர் அவனுடன் வந்து பேசி போவது வழக்கானது.
ஒரு நாள் அவர் அந்த மனிதனிடம் ‘நான் தான் இந்த நாட்டு மன்னர்’ என்று கூறினார். அதை கேட்ட அந்த மனிதன் மிகவும் ஆச்சரியப்பட்டான்.
மன்னர் அவன் தன்னிடமிருந்து ஏதாவது பொருள்களையோ, அல்லது உதவிகளையோ கேட்க போகிறான் என்று நினைத்தார். ஆனால் அவனோ அவரிடம் ஒன்றுமே கேட்கவில்லை.
அப்போது மன்னர், ‘நான் மன்னர், நீ எது வேண்டுமானாலும் கேள், உனக்கு நான் தருகிறேன்’ என்று கூறினார்.
அதற்கு அந்த மனிதன், ‘மன்னரே, நான் ஒரு மிகவும் தாழ்மையுள்ள நிலையில் உள்ளவன் என்றும், எனக்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லாதவன் என்றும் நீர் அறிந்தும் என்னிடம் தினமும் வந்து, உங்களையே என்னிடம் தந்து விட்டீர்களே, அதை விட எனக்கு என்ன வேண்டும்?’ என்று கண்ணீர் மல்க கேட்டான்.
அவனின் இந்தத் தாழ்மையான நல்ல குணத்தை கண்ட மன்னர். அவனுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, தன் அரண்மனையிலேயே ஒரு நல்ல பணியை கொடுத்து கூடவே வைத்திருந்தார்.
வேதத்தில் பார்ப்போம்,
நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடைய வேண்டும் என்றான்.
லூக்கா :18:41
இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
லூக்கா :18:42
இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாதது தான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
மத்தேயு :19:26
பிரியமானவர்களே,
எரிகோவை நினைக்கும் பொழுது நம் எண்ணத்தில் தோன்றுவது யோசுவாவின் புகழ்பெற்ற யுத்தமே. ஆனால், எருசலேமுக்குச் சென்று கொண்டிருந்த இயேசுவை சந்தித்த இன்னொரு மனிதரையும் நாம் அவசியமாய் நினைக்க வேண்டும்.
பின்பு அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவை விட்டுப் புறப்படுகிற போது, திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான்
மாற்கு :10:46.என்று பார்க்கிறோம்.
அவன் விழியிழந்தவனாதலால் எந்த வேலையும் அவனால் செய்ய முடியாது. ஆகவே அவ்வழியே சென்ற மனிதர்களிடம் அவன் பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய வாழ்வே அந்த வழியருகே தான் .
அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான். அவன் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள்.
அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று, முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான். இயேசு நின்று, அவனை அழைத்து வரச் சொன்னார். அவர்கள் அந்தக் குருடனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள்.
உடனே அவன் தன் மேல் வஸ்திரத்தை எறிந்து விட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான்”
(மாற்கு 10: 47-50).
அநேக வேளைகளில் நாம் வேதாகமத்தை மேலோட்டமாக வாசித்து விடுகிறோம்.
ஆனால் இயேசு அவனைக் கவனித்து “அவனை என்னிடத்தில்; அழைத்து வாருங்கள்” என்றார். உடனடியாக அவன் எழுந்து இயேசுவிடம் ஓடி வந்தான். அவன் விழியற்றவன், அவனால் இயேசுவைப் பார்க்க இயலவில்லை; ஆனால் அவர் சத்தத்தை கேட்டான்.
அத்திரளான ஜனங்களால் செய்ய முடியாததை தனக்கு இயேசு மாத்திரமே செய்ய முடியும் என்று நம்பினான். இதையே நாம் விசுவாசம் என்று அழைக்கிறோம்.
ஆண்டவர் அவனை பார்த்து, ‘நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று இருக்கிறாய்’ என்று கேட்டார். அதற்கு அவன், ‘நான் பார்வையடைய வேண்டும் ஆண்டவரே’ என்றான்.
எனக்கு அருமையானவர்களே
பார்வை இழந்தவனைப் பார்த்து ‘நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்’ என்று அருள் நாதர் இயேசு கேட்டத்தைப் போல, உங்களை பார்த்துக் கேட்டு உங்கள் குறைவுகளை நிறைவாக்க அவர் விரும்புகிறார்.
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். அந்த பார்வை இழந்தவன் செய்தது போல் ஆண்டவரை நோக்கி கூப்பிடுங்கள்.
நிச்சயமாய் அவர் உங்களுக்கு உதவி செய்வார்.
அவரை நோக்கி கூப்பிட்டு அற்புதங்களைப் பெற்றுக் கொண்டவர்கள் ஏராளம் ஏராளம். இன்றைக்கே இப்பொழுதே உங்கள் தேவைகளை தெய்வத்திடம் தெரிவியுங்கள்.
தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு உதவ காத்திருக்கிறார். உங்களை தடை செய்யும் மனிதர்களின் வார்த்தைகளைத் தள்ளி விட்டு நம்பிக்கையோடு கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்.
நிச்சயமாய் அவர் உங்கள் வேண்டுதலைக் கேட்டு உங்களுக்கு நன்மை செய்வார். ‘என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ’ என்று ஆண்டவர் நம்மை பார்த்து கேட்கிறார்.
அவர் உங்களுக்காக அற்புதங்களை செய்ய காத்திருக்கிறார். ‘கேளுங்கள் தரப்படும்’ என்று வாக்குரைத்த தேவன், இந்த செய்தியை வாசித்து, விசுவாசத்தோடு நீங்கள் கேட்கிறவைகளை கட்டாயம் அருளி செய்வார்.
நீங்களும், அந்த பார்வையிழந்தவன் இயேசுவிடம் கேட்டு பெற்றுக் கொண்டது போல் அற்புதங்களைப் பெற்று தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.
கர்த்தர் தாமே இத்தகைய ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள நம்மை தகுதிபடுத்துவாராக.
ஆமென்.