கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறது போல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது. 2 கொரிந்தியர்:1:5
அன்பானவர்களே!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஜெஸ்வின் என்ற மனிதர் சொல்லுகிறார்.
இந்த உலக வாழ்வு ஒரு நாணயம் போன்றது. நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல இந்த வாழ்விலும் இன்பமும் துன்பமும் கலந்தே இருக்கிறது.
கிறிஸ்தவ வாழ்வும் இதற்கு விதிவிலக்கு அல்ல. நாம் இந்த உலகில் வாழும் வரை நமது வாழ்விலும் இன்பமும் துன்பமும் கலந்தே காணப்படும். அதிலும் கிறிஸ்தவ வாழ்வில் நியாயமான துன்பத்திற்கென்று ஒரு தனி சிறப்பான இடம் இருப்பதை வேதாகமம் உறுதிப்படுத்துகிறது.
எந்த ஒரு உபத்திரவமும் இல்லாத சுமூகமான ஒரு கிறிஸ்தவ வாழ்வு இல்லை. ஆனால் இந்த நாட்களில் பிரச்சனையே இல்லாத கிறிஸ்தவ வாழ்வு என்று பிரசங்கிக்கப்படுகிறது. ஒருவன் உண்மையான கிறிஸ்தவனாக இருப்பானானால் அவனுக்கு எந்த பிரச்சனையுமே இருக்காது என்பது தவறானதும் வேதாகமத்திற்கு முரணானதுமான போதனை.
பிரச்சனையே இல்லாத வாழ்வு என்கிற மாயையான எண்ணத்தை விட்டு நாம் முதலாவது வெளியே வரவேண்டும். எதார்த்தமான கிறிஸ்தவ வாழ்வை எதிர்கொண்டு வாழ பழக வேண்டும்.
எனவே அவசியமான துன்பங்களை நாம் மனமுவந்து ஏற்றுக்கொள்ள பக்குவப்படுவோம். கர்த்தர் கொடுக்கும் சிலுவையை முழுமனதோடு சுமப்போம். அந்த கிருபையை அவரே நமக்கு தருவார்.
வேதத்தில் பார்ப்போம்,
அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.
2 தீமோத்தேயு: 3:12.
நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள்.
அப்போஸ்தலர்: 14:22.
ஆதலால், அவர் தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார்.
எபிரேயர்: 2:18
பிரியமானவர்களே,
விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனான போது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும்,
தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்து கொண்டு, இனி வரும் பலன் மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களை பார்க்கிலும், கிறிஸ்துவினிமித்தம் வரும் பாடுகளை அதிக பாக்கியமென்று எண்ணினான்.
பல வேளைகளில் நாம் அநித்தியமான இன்பங்களை நாம் தேடுகிறோம்.
இந்த உலகில் யாவரும் யதார்த்தமான கிறிஸ்தவ வாழ்வு வாழுகிறோமா?
நித்தியமான இன்பத்தை தெரிந்தெடுப்பது என்பது பல வேளைகளில் அனைவருக்குமே மிகவும் கடினமாகவே உள்ளது. அவசியமான துன்பங்களை நாம் ஏற்க பழகிக் கொள்வோம்.
நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் துன்பங்களை மனமுவந்து ஏற்பதற்கு சிறந்த முன்மாதிரியை வைத்து விட்டு போனார். மனுக்குலத்தினுடைய பாவத்தை தன் மேல் சுமந்து சிலுவையில் பாடுபட்டு மரிப்பதை மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.
அதே சிந்தை நம்மிலும் இருக்க வேண்டும் என்றே வேதாகமம் நமக்கு போதிக்கிறது. பிலிப்பியர் 2:5-8 கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக் கடவது.
ஆகவே நமக்கு வரும் பாடுகளை, கிறிஸ்துவின் நிமித்தம் சகித்தால், பரமனின் வருகையில் கூட சென்றிடுவோம் என்பதை உணர்ந்து ஒவ்வொரு நாளும் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.