நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். ஆதியாகமம்: 12:2
எனக்கு அன்பானவர்களே!
நம்மை ஆசீர்வதித்து உயர்த்துகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
இன்று, ஒரு மனிதன் தன் பெயரைப் பெருமிதப்படுத்த, எத்தனையோ வழிகளை கையாளுகிறார்கள். அதற்காக, தங்கள் ஜீவனையும் இழக்கத் தயாராக இருக்கிறார்கள்.
ஆச்சரியப்படுகிறீர்களா? பாருங்கள். சாகச சாதனைகளை செய்வோர், உயரமான மலையில் ஏறுவது, ஆபத்தான இடங்களில் கயிற்றின் மேல் நடப்பது போன்ற செயல்களை செய்பவரை பார்க்கும் போதே நமக்கு பயமும் திகிலும் தோன்றும்.
நம் முன்னோர்கள் ஒரு பழமொழி சொல்வார்கள் “கரணம் தப்பினால் மரணம்” என்று. அப்படிப்பட்ட பயங்கரமான சூழ்ச்சி நிறைந்த செயல்களில் ஈடுபடுவதன் நோக்கம் என்ன?
எப்படியாகிலும், சாதனை வீரன் அல்லது வீராங்கனை என்ற பெயருக்கு சொந்தக்காரனாக வேண்டும் என்பதே.
ஆனால், அந்தப் பெயரை வெல்லும் வண்ணமாக மற்றொரு வீரர் எழும்புவார். அப்பொழுது இவர் பெயர் மங்கி விடும்.
ஆனால்,தங்கள் பெயரை பெருமையாகவும் மகிமை நிறைந்ததாகவும் காட்ட, எப்படிப்பட்ட தீய செயல்களையும் செய்ய தயங்காமல் வாழுகின்ற மக்கள் இன்று ஏராளம் ஏராளம்.
ஆனால், கர்த்தர் ஒரு மனிதனுடைய பெயரை பெருமிதப்படுத்தினால், யாரும் அதை மேற்கொள்ள ஒரு போதும் முடியாது!
வேதத்தில், ஆண்டவர் ஆபிரகாமை பார்த்து சொன்னார் உன் பெயரை பெருமைப் படுத்துவேன் என்றார்.
அதைப் போன்று சாலமோன் ராஜாவின் பெயரை, கர்த்தர் எவ்விதமாக பெருமைப்படுத்தினார் பாருங்கள் – உனக்கு முன்னும் உனக்கு பின்னும் உனக்கு சரியாக ஒருவனும் எழும்புவதில்லை என்றார்.
அதே தேவன், உங்களையும், உங்கள் பிள்ளைகளின் பெயரையும் பெருமைப்படுத்தும்போது, யாரும் அதற்கு தடை போடவும், அல்லது அதற்கு சரியாக எழும்பவும் முடியாது.ஆகவே கர்த்தரை விசுவாசியுங்கள்; நீங்கள் ஆசீர்வாதமாய் இருப்பீர்கள்.
வேதத்தில் பார்ப்போம்,
விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப் போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்ட போது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப் போனான்.
எபிரேயர் :11 :8.
இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.
ஆதியாகமம்: 17 :5.
அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.
யாக்கோபு: 2:23.
பிரியமானவர்களே,
ஆபிரகாம் தனக்கு வசதியான மற்றும் பழக்கமான அனைத்தையும் விட்டு விட்டு தான் அறியப்படாத இலக்கை நோக்கி செல்ல வேண்டியிருந்தது.
வேதம் கூறுகின்றன எபிரெயர்: 11:8 -ல் “விசுவாசத்தினால் ஆபிரகாம் அழைக்கப்பட்ட போது, கீழ்ப்படிந்து, தனக்குச் சுதந்தரமாகப் பெற வேண்டிய இடத்திற்குப் போனான்;
அவர் எங்கு செல்ல வேண்டும் என்பது பற்றி அவருக்குத் தெரியாமல் இருந்தாலும் அல்லது அது கடினமாக இருந்தாலும் அவர் சென்றார்.” ஆபிரகாமின் கீழ்படிதலை கண்ட ஆண்டவர்.
நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்’ என்று ஆபிராமின் வாழ்வில் ஒரு பெரிய திட்டத்தையே வைத்திருந்தார்.
அப்படியே, நம் ஒவ்வொருவருடைய வாழ்விற்கும் தேவன் ஒரு உன்னதமான அழைப்பை, திட்டத்தை வைத்திருக்கிறார். அதை நாம் உணர்ந்து வாழும் போது அது நமக்கும், நம்மை சார்ந்த பிறருக்கும் மிகுந்த ஆசீர்வாதமாய் அமையும்.
நம் மூலமாக தேவன் ஏதோ ஒரு திட்டத்தை நடப்பிக்கச் சித்தங் கொண்டுள்ளாரோ, அதற்கு நம்மை முழுவதும் விட்டுக்கொடுக்க வேண்டும்.
மாறாக, நமது இஷ்டம் போல வாழ்ந்து, காலம் கழித்து விட்டு, இறுதி மூச்சுப் போகும் வேளையில், ‘ஆண்டவரே, உமது சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்கிறேன்’ என்று கூறினால் அதனால் எந்த பயனும் இல்லை.
அவர் நமது வாழ்வில் வைத்திருக்கும் நோக்கம் என்ன? அதை நாம் நிறைவேற்றியிருக்கிறோமா? ஆண்டவரிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெற்ற நாம், நமக்கும் பிறருக்கும் ஆசீர்வாதமாய் இருக்கிறோமா?
பிரியமானவர்களே
காலங்கள் போனால் திரும்பி வராது. நாம் வீணடித்த காலங்கள் நமக்குத் திரும்பவும் கிடைக்காது. எனவே, இன்றே காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்வோம்.
ஆண்டவரிடத்தில் நாம் பெற்றுக் கொண்ட நன்மைகளை வீணாக்காமல், பிரயோஜனப்படுத்தி பிறருக்கும் ஆசீர்வாதமாய் வாழுவோம்.
ஆபிராமை அழைத்து ஆசீர்வதித்த தேவன் இன்று , நம்மையும் அன்பாய் அழைத்து ஆசீர்வதிக்க ஆவலாயுள்ளார்.
தேவன் தருகிற இத்தகைய ஆசீர்வாதங்களை பெற்று வளமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார்.
ஆமென்.