ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்” ஆதியாகமம்:. 18:12
எனக்கு அன்பானவர்களே!
வாழ்வை வழங்குகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு விதையை விதைக்கிறோம். அது மண்ணுக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறது. அதற்கு நீர் ஊற்றுகிறோம். காத்திருக்கிறோம். அது மெல்ல முளைக்கிறது.
இலை விடுகிறது. தண்டு பெரிதாகிறது. கிளைகள் உருவாகின்றன. பூக்கள் உருவாகின்றன. கடைசியில் கனி தருகிறது !
இந்த பயணம் நீளமானது. ஒரு விதை விதைக்கப்படுவதற்கும், அது மீண்டும் கனிக்குள் விதையாய் நம் கையில் தவழ்வதற்கும் இடைப்பட்ட காலம் பெரியது !
ஒவ்வொரு மனிதனும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது ரொம்பவே அவசியம். “பொறுமை கசப்பானது தான். ஆனால் அது தருகின்ற கனியோ ரொம்ப ரொம்ப இனிப்பானது” என்பார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில்.
ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் மனிதனுக்கு உடனடியாக வெற்றி சாத்தியம் ஆவதில்லை.
நீடிய பொறுமை உறுதியான வெற்றிகளை உருவாக்குகிறது.
வேதத்தில் பார்ப்போம்,
அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை {ஆபிரகாமுக்கு}அவனுக்கு உண்டாகி: இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப் பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் என்று சொல்லி,
ஆதியாகமம்: 15:4
அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.
ஆதியாகமம் :15:5
சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளை பெறாத படிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப் பெண்ணோடே சேரும், ஒரு வேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான்.
ஆதியாகமம்: 16 :2.
பிரியமானவர்களே,
வேதாகமத்தில் ஆண்டவரின் வழிநடத்துதல்களை நோக்கிப் பார்த்தால் எல்லாமே விசுவாசத்தின் அடிப்படையிலேயே நடந்துள்ளதை அறியலாம். .
இங்கே ஆபிரகாமின் சந்ததியைப் பெருகச் செய்வதாக கர்த்தர் சொல்லியிருந்தும், தனக்கு ஒரு பிள்ளையும் பிறக்காததைக் கண்ட சாராள் தன் சுய புத்தியில் சார்ந்து நின்று தனது அடிமைப் பெண்ணாகிய ஆகாரை ஆபிரகாமுக்குக் கொடுத்ததைக் காண்கிறோம்.
பின்னர், ஆபிரகாமுக்குப் புத்திர பாக்கியம் வாக்குப் பண்ணப்பட்ட போதும், அதை நம்ப முடியாத சாராள் நகைத்தாள் என்று காண்கிறோம்.
அவள் தனது வயதையும், தனது கணவனின் வயதையும் கருத்திற்கொண்டாளே தவிர, வாக்குப் பண்ணினவருடைய வல்லமையை அவள் எண்ணிப் பார்க்கத் தவறி விட்டாள்.
வாக்களித்தவருக்காகக் காத்திராமல், அவரைக் கேட்காமல், அவர் வழி நடத்துதலைப் பெறாமல், தனது மனம்போன போக்கில் தானே தீர்மானம் பண்ணி செயற்பட்டாள் சாராள்.
சாராளுடன் உடன்படுகின்ற நமது காரியம் எப்படிப்பட்டது?
கர்த்தரை நம்பி அவரது வார்த்தைகளுக்கு நம் வாழ்வில் முக்கியத்துவம் கொடுத்து வாழ்கிறோமா?
அல்லது நமது புத்தியைச் சார்ந்து நின்று, மனிதரை நம்பி, நமது இஷ்டம் போல தீர்மானங்களை எடுத்து விட்டு, பின்னர் அங்கலாய்க்கிறோமா?
நம்மை மீட்ட ஆண்டவர் நம்மைத் திக்கற்றவர்களாக விடவில்லை. நம்மை வழி நடத்தவென்று சத்திய ஆவியானவரை நமக்குத் தந்துள்ளார். அவர் நம்மைச் சகல சத்தியத்துக்குள்ளும் வழிநடத்துவார் என்றும் நமக்கு வாக்குக் கொடுத்துள்ளார்.
அப்படியிருக்க, நாம் அந்த உன்னதமான வழிநடத்துதலை உதாசீனம் செய்து விட்டு நம் இஷ்டம் போலவே வாழுவோம் என்று அடம்பிடித்தால் அதன் விளைவை நாமே தான் சந்தித்தாக வேண்டும்.
“உன் சுயபுத்தியின் மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக் கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்”
(நீதிமொழிகள். 3:5-6). என்று வாசிக்கிறோம்.
ஆம், நம் வாழ்வை செவ்வையாக்கி, வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுகிற கர்த்தர் தாமே நம்மோடு கூட இருந்து வழிநடத்துவாராக.
ஆமென்.