உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம். சங்கீதம்:65:4
எனக்கு அன்பானவர்களே,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு முறை, ஒரு சகோதரியினுடைய சரீரத்திலும், உள்ளத்திலும் சோர்வுகளும், பெலவீனங்களும் வந்தது. வாழ்க்கை மிகவும் கசந்து விடவே அவள் ஒரு மனோ தத்துவ டாக்டரிடம் சென்றாள்.
அந்த டாக்டர் அவளைப் பார்த்து: “நான் சொல்லுகிற படி செய். நீ நிச்சயமாக சுகமடைவாய். நீ அருகிலிருக்கும் ஆலய ஆராதனைக்கு போ. உன்னால் ஜெபிக்க முடிந்தாலும், முடியாவிட்டாலும், பாட முடிந்தாலும், பாட முடியாவிட்டாலும் ஆலயத்திற்குப் போ. ஆராதனைக்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பாகவே சென்று அமைதியாக “அமர்ந்திரு” என்றார். அவள் “சரி” என்று தலையாட்டி விட்டு, வீடு சென்றாள்.
ஒரு மாதம் கழித்து, மீண்டும் டாக்டரிடம் வந்து, “நான் சுகம் பெறவில்லையே” என்றாள். அதற்கு அவர்: “நான் சொன்னபடி செய்தீர்களா? கடந்த நான்கு வாரங்களும் ஆலயத்திற்கு சென்றீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவள் “இல்லை” என்று பதில் கொடுத்தாள். அதற்கு அவர்: “நான் சொன்ன படி செய். அதன் பின்பு வா” என்று, சொல்லி அனுப்பி விட்டார்.
இந்த முறை, அவள் ஆலயத்திற்கு சென்றாள். ஒவ்வொரு வாரமும் தேவனுடைய பிரசன்னத்தை உணர்ந்தாள். கர்த்தருடைய வல்லமை அவளைத் தொட்டது. தேவ ஆராதனை, அவளுடைய உள்ளத்திற்கு மகிழ்ச்சியைத் தந்தது. சரீரத்தில், பரிபூரண சுகத்தை பெற்றுக் கொண்டாள்.
ஆம், உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரத்திற்கு ஒரே பரிகாரம் கர்த்தருடைய பிரசன்னம் தான். அவருடைய சமுகத்தில் உண்மையாய் உங்களுடைய நேரங்களை செலவழிக்கும் போது, உங்களுடைய உள்ளம் புத்துணர்ச்சியினாலும், தெய்வீக சமாதானத்தினாலும், சந்தோஷத்தினாலும் நிரம்புகிறது.
வேதத்தில் பார்ப்போம்,
கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்ன போது மகிழ்ச்சியாயிருந்தேன்.
சங்கீதம்:122:1
நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவ மரத்தைப் போலிருக்கிறேன், தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.
சங்கீதம்: 52:8
அப்படியே கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக் களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பி வருவார்கள், நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின் மேல் இருக்கும், சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள், சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.
ஏசாயா: 51:11
பிரியமானவர்களே,
சபை கூடி வருதல், தேவனுடைய பிள்ளைகளுக்கு எத்தனை பெரிய ஆசீர்வாதத்தைக் கொண்டு வருகிறது. சபை கூடி வரும் போது, ஒருவருக்கொருவர் ஜெபிக்கிறார்கள். ஒருவருடைய பாரத்தை ஒருவர் சுமக்கிறார்கள். ஒருவருடைய சாட்சியின் அனுபவங்கள், மற்றவர்களுக்கு பயனுள்ளதாய் மாறுகிறது.
கர்த்தர் தம்முடைய ஊழியர்களைக் கொண்டு, உங்களோடு பேசுகிறார்.
ஆலயத்தின் சம்பூரண ஆசீர்வாதத்தால் நிரப்பப்படும்படி, ஆலயத்திற்கு செல்லுங்கள்.
ஆலயத்திற்கு வருவது உங்களுக்கு மகிழ்ச்சியின் அனுபவமாயிருக்கட்டும்.ஆலயத்தின் சம்பூரணத்தினால் நிரப்பப்பட வேண்டுமென்று ஆவலோடு கடந்து வாருங்கள். உங்கள் தேவைகளை சந்திக்க தேவனுடைய ஆலயத்திற்கு மகிழ்ச்சியோடு வாருங்கள்
ஆண்டவரை ஆராதிப்பது என்றாலே தாவீதினுடைய உள்ளத்தில் பெரிய சந்தோஷம்.
ஆம், அங்கே நான் திருப்தியாக போஷிக்கப்பட போகிறேன். தேவனை ஆடிப் பாடி துதிக்கப் போகிறேன். அவருக்கு ஆராதனைச் செய்யப் போகிறேன். கன்மலையின் தேன் அங்கே உண்டு. பேரின்ப நதியினால் தாகம் தீர்க்கப்படுவேன் என்று சொல்லி, அவர் ஆனந்த பரவசமடைந்தார்.
தேவபிள்ளைகளே, ஆலயத்திற்கு செல்லும் போதெல்லாம் கர்த்தர் நன்மைகளை அளவில்லாமல் உங்களுக்கு அள்ளித் தருவார் என்பதை மறந்து போகாதீர்கள். நிரம்பி வழிய செய்கிற ஆசீர்வாதங்களால் உங்களை ஆசீர்வதிப்பார். பரலோகத்தின் உச்சிதங்களால் உங்களை போஷிப்பார்.
இத்தகைய ஆசீர்வாதங்களை இந்த பரிசுத்த ஓய்வு நாளில் பெற்று வளமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.