எனக்குச் செவி கொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம் பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான். நீதிமொழிகள்:1:33.
எனக்கு அன்பானவர்களே!
கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
எரிக் வீஹென்மாயர் என்னும் மனிதர் கண் தெரியாதவர். சிறு வயதில் அவருக்கு ஏற்பட்ட ஒருவித கண் வியாதியினால் அவருக்கு கண் தெரியாமல் போய் விட்டது.
ஆதனால் அவர் மனம் தளர்ந்து போய் விடாமல், 2001 மே மாதம் 25ம் தேதி அவர் எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக சென்றடைந்தார்.
தொண்ணூறு சதவிகிதத்திற்கு மேல் அநேகருக்கு அந்த சிகரத்தை சென்றடைய முடியாமல் போயிருக்கும் போது, 1953 லிருந்து 163 பேர் அந்த சிகரத்தை அடைய வேண்டும் என்று முயற்சித்த அனேகர் மரித்தும் போயிருக்கும் போது இந்த கண்ணிழந்த மனிதருக்கு எப்படி அது சாத்தியமாயிற்று?
அவன் தன் செவிகள் அக்கம் பக்கம் நடப்பவைகளை நன்கு கூர்ந்து கவனித்து கொண்டிருந்தன.
அவருக்கு முன்னால் சென்றுக் கொண்டிருக்கும் மலை ஏறுபவர்கள் கட்டப்பட்டிருக்கும் சிறு சிறு மணியின் சத்தத்தை கூர்மையாக கவனித்து, அதன்படி ஏறினார்.
தன்னோடு கூட வந்திருந்த மற்றவர்களின் எச்சரிக்கை சத்தத்தைக் கவனமாய் கேட்டு, அதன்படி அவர் நடந்துக் கொண்டார்.
பனியில் கால் வைக்க சரியானது தானா என்று பார்த்து ஜாக்கிரதையாக தன் கால்களை வைத்தார்.
இப்படி தன்னைச் சுற்றி இருக்கும் காரியங்கள் என்ன என்பதை அறிந்து, அதன்படி தன்னை காத்துக் கொண்டும், முன்னேறியும் சிகரத்தை சென்றடைந்தார்.
வேதம் சொல்லுகிறது. ‘எனக்குச் செவி கொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம் பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்’ என்று தேவன் கூறுகிறார்.
நாம் அவருடைய வார்த்தைகளுக்கு உண்மையாய் செவிக்கொடுக்கும் போது அவரும் நம்முடைய ஜெபத்திற்கு செவிக் கொடுக்கிறார்.
வேதத்தில் பார்ப்போம்,
வேதத்தைக் கேளாத படி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.
நீதிமொழிகள்:28 :9.
உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.
ஏசாயா: 55 :3.
என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத் திறந்து, எங்கள் பாழிடங்களையும், உமது நாமம் தரிக்கப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும்; நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம்.
தானியேல் :9 :18.
பிரியமானவர்களே,
இந்த நாளில் மனிதர்கள் யார் யாரோ சொல்வதை காதுக் கொடுத்து கேட்க ஆவலாய் உள்ளார்கள்.
ஆனால் தேவன் சொல்வதை கேட்பதற்கு மனிதர்களுக்கு விருப்பம் இல்லை. வேதத்தின் மூலம், மனிதர்கள் மூலம், ஊழியர்கள் மூலம் அருமையான கிறிஸ்தவ பாடல்கள் மூலம் கர்த்தர் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்.
ஆனால் அவர் பேசுவதை கேட்க மக்களுக்கு மனதில்லாதிருக்கிறார்கள். அல்லது அவர்கள் செவிகள் அவற்றை கேட்பதற்கு மந்தமாக இருக்கின்றன.
செவிக் கொடுப்பதைக் குறித்து வேதத்தில் ஏராளமாய் கூறப்பட்டிருக்கிறது. கர்த்தருக்கு செவிக் கொடுத்து அவருடைய சத்தத்திற்கு கீழ்ப்படிந்தால் ஏராளமான ஆசீர்வாதங்கள் நமக்கு உண்டு.
செவி கொடாமல் போனால் ஏராளமான சாபங்களும் உண்டு என்று வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது உபாகமம் 28:14-15.
மட்டுமல்ல, தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களும், சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக் கதைகளுக்குச் சாய்ந்து போகுங்காலம் வரும் (2தீமோ-4:4) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது.
நாம் கேட்பதைக் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் . தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான் யோவான்: 8:47 என்று இயேசு கிறிஸ்து கூறினார்.
தேவனுடைய வார்த்தைகளை கேட்டு, அதன்படி நடக்கிறவனை புத்தியுள்ள மனிதனுக்கு கிறிஸ்து ஒப்பிடுகிறார். எனவே நாம் கர்த்தருடைய வார்த்தைகளுக்கு உண்மையாய் செவி சாய்ப்போம்.
கர்த்தருடைய வார்த்தைகளை கேட்டு, அவர் காட்டுகிற வழியில் நடந்து,பரலோக வாழ்வுக்காக நம்மை தகுதிப்படுத்தி அவருக்கு சாட்சியாக வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.