Daily Manna 256

ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம். நீதிமொழிகள்: 25:11.

எனக்கு அன்பானவர்களே!

நல்ல வார்த்தைகளால் நம் வாழ்வை மகிழ்ச்சியாக்குகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

தன்னுடைய சரீரத்தில் பலவிதமான குறைபாடுகளுடன் பிறந்த பிள்ளை தான் மேரி. அவள் மூக்கு மற்றும் உதடுகளில் பல குறைபாடுகள் இருந்தன.

அவள் பெற்றோர் அவளை மிகவும் நேசித்து படிக்க வைத்தனர். ஆனால் மேரியுடன் படிக்கும் சக மாணவிகள் அவள் தோற்றத்தைப் பார்த்து, கிண்டல் செய்வது வழக்கமாக இருந்தது.

இதனால் மேரி வகுப்பறையில் மிகவும் சோகத்துடன் காணப்படுவாள். அந்த வகுப்பறையில் அவளுடன் நட்புக் கொள்ள யாருமே இல்லை அவளை நேசிக்கவும் யாரும் இல்லை.

இந்த நிலையில் திருமதி லியோனால் என்பவர் அவளின் வகுப்பு ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இயேசு கிறிஸ்துவை அறிந்திருந்த இந்த ஆசிரியை, சில நாட்களிலேயே மேரியின் பிரச்சனையை நன்கு உணர்ந்துக் கொண்டார்.

மேரிக்கு வேறு யாரும் அறியாத, மற்றொரு பிரச்சனையும் இருந்தது. அதாவது, மேரிக்கு ஒரு காது மட்டுமே கேட்கக் கூடியதாக இருந்தது. இந்த ஆசிரியை அதையும் புரிந்து கொண்டார்.

மாணவர்களிடம் கேள்வி கேட்கும் வேளையில், மேரியை வெட்கப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக இந்த அன்பான ஆசிரியை, மிகவும் பரிவாய் நடந்து கொண்டார்.

ஒருநாள் மேரியை உற்சாகப் படுத்தும் விதமாய், மாணவர்களிடம் நீங்கள் ஒவ்வொருவராக வந்து, உங்கள் கையால் ஒரு காதை மூடிக் கொள்ளுங்கள். நான் மறு காதில் ஒரு இரகசியம் சொல்லுவேன், நீங்கள் திரும்ப அதை என்னிடம் கூற வேண்டும் என்று கூறினார்.

ஒவ்வொரு மாணவிகளாக வரும் போது மேரியும் வந்தாள். மேரியின் கேட்காத காதை மூட சொன்ன ஆசிரியை மற்றொரு காதில், “மேரி நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். நீ என் மகளாக பிறந்து இருக்கக் கூடாதா?” என்றார்.

இதைக் கேட்ட மேரிக்கு அளவில்லாத மகிழ்ச்சி! தேவனுடைய அன்பை ஆசிரியை மூலம் உணர்ந்தாள். புன்னகை முகத்துடன் போய் தன் இருக்கையில் அமர்ந்தாள்.

நாளடைவில் அவளுடைய வாழ்க்கை மிகவும் மாறிற்று. அந்த வகுப்பறையிலேயே மிகச் சிறந்த மாணவியாக அவள் மாறினாள்.

அந்த பக்தியுள்ள ஆசிரியையின் அன்பான ஒரே வார்த்தை, அவள் அனுபவித்த அத்தனை வேதனைகள் அனைத்தையும் அவளை விட்டு அகன்று போனது.

வேதத்தில் பார்ப்போம்,

ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.
நீதிமொழிகள்:25:11

மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!
நீதிமொழிகள்: 15:23

விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கப் பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர்.
யோபு :4:4

பிரியமானவர்களே,

நமது அருமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மற்றவர்கள் சுலபமாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் ஒவ்வொரு வார்த்தையும் பேசினார்.
மத்தேயு: 5-7.இந்த அதிகாரங்களில் அவர் சொன்ன வார்த்தைகள் அதற்கு சிறந்த உதாரணம்.

புரியாத வார்த்தைகளையும் தேவையில்லாத வார்த்தைகளையும் சொல்லி மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்ப வேண்டுமென்று இயேசு ஒரு போதும் நினைக்கவில்லை.
மாறாக மக்கள்
தெளிவாக புரிந்து கொள்ளும் விதத்தில் பேசினார்.

நாம் மற்றவர்களிடம் என்ன சொல்கிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ அதேப் போல் அதை எப்படி சொல்கிறோம் என்பதும் முக்கியம்.

அதைத் தான் இயேசுவும் செய்தார். உதாரணத்துக்கு, அவருடைய பேச்சைக் கேட்ட மக்களின் மனநிலையை
பார்த்த போது ‘அவர்கள் மேல் மனதுருகினார்.’

அது போலவே நாமும் எப்போதும் நல்ல விஷயங்களையும்,
மற்றவர்களை உற்சாகப்படுத்தும் விஷயங்களையும் பேசுவோம்.

அன்பான சகோதரனே, சகோதரியே,
நாம் வாழும் பகுதிகளில் வாழ்க்கையில் தோல்வியுற்று, மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டு, அன்புக்காக ஏங்கும் மக்கள் இருக்கின்றார்கள்.

யாராவது என்னிடம் பரிவாக பேச மாட்டார்களா? என்ற ஏக்கத்துடன், தாழ்வு மனப்பான்மையோடு வாழ்ந்து வருகின்ற மனிதர்கள் உண்டு.

நம் அன்பான பரிவான ஒரு வார்த்தை, நம் நற்செயல்கள் அவர்களின் வாழ்க்கையையே மாற்றி விடும்! மேரியின் வாழ்க்கையை போன்று.

எனவே, நாம் சந்திக்கும் நபர்களிடம் அன்பான,பணிவான, விசுவாச வார்த்தைகளையே பேசி அவர்களை உற்சாகப்படுத்துவோம்.

தேவன் தாமே நாம் நடக்க வேண்டிய வழியையும், ஞானத்தையும், புத்தியையும்,
தந்து வழிநடத்துவாராக

ஆமென்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *