மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். சங்கீதம்:103:12
எனக்கு அன்பானவர்களே!
பரிசுத்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜன் என்பவர் பிரிட்டீஷ் பிரசங்கியார். அந்த காலத்தில் மைக்ரோபோன் எதுவும் கிடையாது. அதனால் கூட்டத்திற்கு முந்தின நாள் அந்த இடத்திற்கு சென்று, எந்த அளவுக்கு பேசினால் அவரது சத்தம் ஜனங்களுக்கு கேட்கும் என்று சோதனை செய்வார்.
அப்படி அவர் பேசி சோதித்து பார்க்கும் பொழுது, ‘உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டியே’ என்று அநேக தடவைகள் சொல்லிப் பார்ப்பார். அதன்பின் வீட்டிற்கு செல்வார்.
அன்றும் அதேபோல் சோதித்து விட்டு வீட்டிற்கு திரும்பினார்.
இரண்டு மணி நேரம் கழித்து வாலிபன் ஒருவன் வந்து, கதவைத் தட்டினான். அவர் கதவைத் திறந்த போது, அவன் கண்ணீரோடு நிற்பதைக் கண்டார்.
அவனைப் பார்த்து என்னப்பா என்று கேட்டார். அவன் நீங்கள் குரல் சோதனை செய்த போது, நான் கட்டிடத்தின் மேல் மாடியில் நின்றேன். அந்த வேத வசனத்தைக் கேட்டதும், தனது மனம் குற்ற உணர்வினால் தவிக்கிறது.
என் பாவங்களை யார் மன்னிப்பார்? யார் என்னை விடுவிப்பார். என கேட்டான். ஸ்பர்ஜன் அவனைப் பார்த்து பயப்படாதே என்று சொல்லி இயேசுவையும் அவருடைய வல்ல செயல்களையும் பற்றி அவனுக்கு எடுத்து சொன்னார்.
அவன் ஆண்டவரிடம் தன் பாவங்கள் அனைத்தையும் அறிக்கையிட்டு மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்று, ஆண்டவருடைய பிள்ளையாய் மன மகிழ்ச்சியாய் தன் வீட்டுக்கு கடந்து சென்றான்.
வேதத்தில் பார்ப்போம்,
என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும், கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.
சங்கீதம்:25:7.
உன் மீறுதல்களை மேகத்தைப் போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப் போலவும் அகற்றி விட்டேன், என்னிடத்தில் திரும்பு, உன்னை நான் மீட்டுக் கொண்டேன்.
ஏசாயா:44:22.
அவர் திரும்ப நம் மேல் இரங்குவார். நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.
மீகா :7:19.
பிரியமானவர்களே,
இன்றைக்கும் நீங்கள் குற்ற உணர்ச்சியில் தவிக்கின்றீர்களா? பயப்படாதீர்கள். சிலுவையண்டையில் உங்கள் தவறுகளை இறக்கி வைத்து விட்டு, அதற்கு பதிலாக அவருடைய நீதியை எடுத்துச் செல்லும் படி அன்பாய் அழைக்கிறார்.
உங்கள் பாவங்களை ஒப்புக்கொள்வதும், தேவ மன்னிப்பை பெற்றுக் கொள்வதையும் தவிர வேறெதையும், நீங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை.
“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” .
மேய்ப்பனுடைய பாதையிலிருந்து தவறிய ஆடுகளைத் தேடி பின் தொடருகிற ஒரேயொரு ஆண்டவர் நம் கிறிஸ்து இயேசு மட்டுமே.
நீங்கள் எங்கிருந்தாலும் அவருக்கு நன்றாக தெரியும். அவர் உங்களை ஒரு போதும் தண்டிக்கிற தேவன் அல்ல. நீங்கள் சரியான வழிகளில் நடக்கும்படிக்கு அவர் உங்களை திரும்ப கொண்டு வந்து தமது மந்தையில் சேர்ப்பார்.
மந்தையில் மட்டுமல்ல, மறுமையிலும் அவரோடு கூட நாம் இருக்க வேண்டும் என வாஞ்சிக்கும் அன்பான தெய்வம் நம் இயேசு கிறிஸ்து மாத்திரமே.
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து காட்டும் வழியில் நாமும் நடப்போம். இம்மையிலும் மறுமையிலும் அவர் தரும் ஆசீர்வாதங்களைப் பெற்று வளமாய் வாழுவோம்.
ஆமென்.