அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்து போம். மத்தேயு: 24:12
எனக்கு அன்பானவர்களே!
அன்பின் இறைவன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
“அன்பின் வழியது உயர்நிலை அஃதில்லார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு” என்கிறது திருக்குறள்.
இங்கிலாந்து நாட்டின் டார்லிங்டன் நகரில் வாழ்ந்த ஒரு திருடன் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு வீடு திரும்பினான்.
வீட்டுக்கு வந்த அவனை யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் அவன் மனம் நொந்து வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்தான்.
ஒருநாள் அவன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, எதிரிலே அந்நகரின் மேயர் ஜான் மோர்சல் வந்து கொண்டிருந்தார்.
அவருக்கு இவனை நன்றாகவே தெரியும்.
உடனே அவன், அவரிடமிருந்து எப்படியாவது தன்னை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒளிந்து ஒளிந்து சென்றான். அப்போது திடீரென்று ஒரு கை அவன் தோள் மேல் பட்டது.
அவன் திரும்பிப் பார்த்து அதிர்ந்து போனான். ஏனென்றால் அவன் எதிரே ஜான் மோர்சல் நின்று கொண்டிருந்தார். அவர் அவன் தோள் மேல் கைபோட்டு, “என்ன சகோதரா! நன்றாக இருக்கிறீர்களா? என்று நலம் விசாரித்தார்.
இது அவனுக்கு இன்னும் அதிர்ச்சியைத் தந்தது. சிறிது நேரம் அவர் அவனிடம் பேசிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
வருடங்கள் பல சென்றன. ஒரு நாள், வேறொரு நகரில் அவன் ஜான் மோர்சலைப் பார்த்து, மிகுந்த சந்தோசத்தோடு அவரிடம் சென்று, “ஐயா! என்னை ஞாபகம் இருக்கிறதா?” என்றான்.
ஒரு நிமிடம் அவனை அமைதியாகப் பார்த்து விட்டு அவர் ஞாபகம் இருக்கிறது என்பது போல் தலையாட்டினார். அப்போது அவன் அவரிடம் “ஐயா! அன்றைக்கு மட்டும் நீங்கள் என் தோள் மேல் கை போட்டு, அன்பாகப் பேசி இருக்கா விட்டால், இன்றைக்கு நான் எப்படியோ இருந்திருப்பேன் என் வாழ்க்கையே முற்றிலும் சீரழிந்து போயிருக்கும்.
எல்லாரும் என்னை வெறுத்து ஒதுக்கி தள்ளினார்கள்.
நீங்கள் தான் திருடனாகிய என்னிடம் அன்பொழுகப் பேசினீர்கள்;
நீங்கள் தான் என் குற்றங்களை எல்லாம் மன்னித்து ஏற்றுக் கொண்டீர்கள்”
என்றான்.
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் அன்பிற்காக ஏங்குகின்றனர். நாம் பிறரை நேசிப்பதற்கும், பிறரால் நேசிக்கப்படுவதற்கும் பிறந்தவர்கள்.
ஆனால், அன்பற்ற சூழ்நிலையை பிசாசு நம் மத்தியில் உருவாக்குகிறான். இதைத் தான் நாம் வேதத்தில் வாசிக்கிறோம், “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது என்று.
வேதத்தில் பார்ப்போம்,
எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள். அன்பு திரளான பாவங்களை மூடும்.
1 பேதுரு: 4:8
நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள் என்றார்.
யோவான்: 13:35
அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது, ஆதலால் அன்பு நியாயப் பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.
ரோமர்:13:10
பிரியமானவர்களே,
இன்றைக்கு அநேகர் நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன் என்று பெருமையாக சொல்கிறார்கள், ஆனால் இவர்கள் அடுத்தவர்களிடம் பகையையும் வெறுப்பையும் காண்பிக்கிறார்கள்,
இவர்கள் பேசும் வார்த்தைகள் மிகவும் மோசமான வார்த்தைகளாக இருக்கிறது, இவர்கள் தன் நாவை அடக்காமல் தங்கள் இருதயத்தை வஞ்சிக்கிறவர்கள்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறுகின்றார் “உங்களை பகைக்கிறவர்களை நேசியுங்கள்” என்றார். ஆனால் இவர்களோ குடும்பத்திலும் சபைகளிலும் சண்டை போட்டுக் கொண்டு
மறுபக்கம் ஆலயத்தின் முதன்மையான இடத்தில் இருக்க
விரும்புகிறார்கள்.
இவர்கள் இருளிலே இருக்கிறார்கள் என்று வேதம் தெளிவாக சொல்கிறது. ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.
தன் சகோதரனிடத்தில் அன்பு கூருகிறவன் ஒளியிலே நிலை கொண்டிருக்கிறான். அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை.
1 யோவான்:2:10.
வசனத்துக்கு கீழ்படிகிறவனிடத்தில் தேவ அன்பு பூரணப்பட்டிருக்கும் என்ற வார்த்தையின்படி ஆவிகளை பகுத்தறியுங்கள். ஒருவனிடம் தேவ அன்பு இருந்தால் அவன் தன்னை போல பிறனை நேசிப்பான்.
தன்னை பகைக்கிறவனை சிநேகிப்பான், தன்னை நிந்திக்கிறவனுக்கு எதிர்த்து பேசாமல் அவனுக்காக ஜெபம் பண்ணுவான். தன்னை சபிக்கிறவர்களை ஆசீர்வதிப்பான், இது தான் இயேசு காட்டிய சிலுவையின் பாதை.
அவர் காட்டிய அடிசுவடுகளின் மேல் நடக்கிறவன் மாத்திரமே உண்மையான சீஷன்.
கிறிஸ்துவின் அன்பு நம்மில் நிலைக் கொண்டிருந்தால், எப்படிப்பட்ட குற்றவாளியும், நம்முடைய செயல்களை பார்த்து மனந்திரும்புவான் என்பதை மேலேயுள்ள இக்கதையானது சுட்டிக் காட்டுகிறது.
எனவே, நாம் அன்புள்ளவர்களாய் இருப்போம். கிறிஸ்துவின் சாயலை தரித்துக் கொள்ளுவோம்.
இத்தகைய அன்பு நிறைந்த வாழ்வு வாழ ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு துணை செய்வாராக.
ஆமென்.