Daily Manna 263

ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள்: நான் என் நாச்சியாராகிய சாராயை விட்டு ஓடிப்போகிறேன் என்றாள். ஆதியாகமம்: 16:8

எனக்கு அன்பானவர்களே!
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

அண்மையிலே செய்தித்தாளிலே ஒரு செய்தியை நான் பார்த்தேன். ஒரு தாயாருக்கு அநேக பிள்ளைகள் இருந்தார்கள்.

தன் கணவன் மரித்தப் பின்பு,அந்தக் பிள்ளைகளை மிகவும் சிரமப்பட்டு வளர்த்து ஆளாக்கினார்.

எல்லோரையும் நல்ல படிக்க வைத்து, வேலை எடுத்துக் கொடுத்து, திருமணம் முடிந்த பின்பு பெண் பிள்ளைகளும், ஆண் பிள்ளைகளும் அந்த தாயாரை தன்னோடு வைத்துக் கொள்ள யாரும் விரும்பவில்லை.

தன்னை யாரும் சேர்த்துக் கொள்ளவில்லையே என்று மிகுந்த மன துக்கத்தோடு காணப்பட்ட அவர்கள் மூன்றாம் மாடியில் இருந்து கீழே குதித்து, தன் ஜீவனை விட்டாள் அந்த தியாகத் தாய்.

அவள் எழுதி வைத்த கடிதத்திலே என்னுடைய வாழ்க்கையிலே எனக்கு ஆதரவாய் ஒருவரும் இல்லை.நான் ஆதரவற்ற கைவிடப்பட்ட ஒரு நிலைமையில் இருக்கிறேன். என்னை விசாரிப்பதற்கும் என்னில் அன்பு கூர்ந்து என் நிலைகளை உணர்ந்து கொள்வதற்கும் ஒருவரும் எனக்கு இல்லை.

எனவே நான் என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்று எழுதியிருந்தார்.

இன்றும் மனிதனால் கைவிடப்படுகின்ற மக்கள் அனேகர் உண்டு. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தன் தாய் தகப்பன் வீட்டிற்குச் செல்ல முடியாதபடி தடுமாறிக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலைமையின் நிமித்தமாக
கண்ணீரோடும்,
வேதனையோடும் வாழ்கின்ற மக்கள் இன்று ஏராளம் ஏராளம்.
அவர்கள் வாழ்வில் மாற்றங்கள் வருமா?

ஆம், இந்த மாற்றத்தை இயேசு கிறிஸ்துவால் மட்டுமே தர இயலும். வறண்டு போன வாழ்வை செழிப்பாக மாற்ற இயேசுவால் மட்டுமே கூடும்.

வேதத்தில் பார்ப்போம்,

கைவிடப்பட்டு மனம் நொந்தவளான ஸ்திரீயைப் போலவும், இளம் பிராயத்தில் விவாகஞ் செய்து தள்ளப்பட்ட மனைவியைப் போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார்.
ஏசாயா :54:6.

மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
ஏசாயா: 35 :4

நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்.
ஏசாயா: 62 :4.

பிரியமானவர்களே,

ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின் மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக் கொடுத்து, அவளை அனுப்பி விட்டான்.

அவள் புறப்பட்டுப் போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்.” ஆதி: 21:14 என்று பார்க்கிறோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, அநேகருடைய வாழ்க்கை அன்று மட்டுமல்ல, இன்றும் அதே கைவிடப்பட்ட நிலைமையில் இருப்பதை பார்க்கிறோம்.

மனிதர்கள் கைவிடுவதினாலே பலவிதமான பாடுகள், வேதனைகளை அனுபவிக்கிறார்கள். பிள்ளைகளால் கைவிடப்பட்ட அநேக பெற்றோர்கள் கலங்கித் தவிக்கிறார்கள்.

இன்றைக்கு கைவிடப்பட்டு வனாந்தரத்தைப் போல் வாழுகின்ற உங்களுடைய வாழ்க்கையிலே ஆண்டவர் ஒரு வழியை உண்டு பண்ணுகிற தேவன் இன்றும் இருக்கிறார்.

மனிதர்களால் கைவிடப்பட்டு இருக்கலாம். ஆனால் என்றுமே கைவிடாத தேவன் நமக்கு இருக்கிறார். தம்மைத் தேடுகிறவர்களைக் கைவிடாத தேவன் என்று தாவீது சங்கீதம் 9:10-ல் சொல்லிருப்பதைப் பார்க்கிறோம்.

நான் குருடரை வழிநடத்தி எல்லா நிலைகளிலும் அவர்களைக் கைவிடாதிருப்பேன் என்று
ஏசாயா: 42:16-ல் பார்க்கிறோம். அந்த அன்பு நிறைந்த இயேசு கிறிஸ்து, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார்.

அவரது வல்லமையான செயலினாலே, உங்களுடைய வியாதியிலும், பெலவீனத்திலும், உங்களுடைய குறைவிலும், கஷ்டத்திலும், உன்னைக் கைவிடாதபடி பாதுகாத்த தேவன் உங்களருகிலிருக்கிறார்.

நன்மையான காரியங்களை நீங்கள் பெற்றுக் கொள்ளுகிற வழியிலே உன்னை நிதானமாய் நடத்துகிற தேவனாய் இருக்கிறார்.

அந்த அன்பு நிறைந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உன் வனாந்தர வாழ்க்கையை, காண்கிறவராயும், அதை மாற்றுகிறவராயும், வனாந்தரத்திலே உனக்கு ஒரு வழியை உண்டாக்குகிற தேவனுமாய் இருக்கிறார்.

ஆகவே கலங்காதீர்கள், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வனாந்தரத்திலே உங்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்தி இருப்பதைக் காண்பீர்கள்.

உடைந்து போன வாழ்வை சீர்மைத்து, வனாந்தரமான வாழ்வை செழிப்பாக மாற்றுகிற இறைவன் நம்மோடு இருக்கிறார் என்ற விசுவாச உறுதியில் ஒவ்வொரு நாளும் வளர கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *