கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள். என்று எனக்கு அவர்கள் சொன்ன போது மகிழ்ச்சியாயிருந்தேன். சங்: 122:1
அன்பானவர்களே!
ஒருவர், “என்னம்மா இன்றைக்கு மகள் ஆலயம் வந்திருக்கிறாள்?” என்று கேட்டார்.
“ஆமாம் நாளை பரீட்சை, அதுதான் வந்தாள்” என்ற பதில் அம்மாவிடமிருந்து வந்தது.
“என்ன குடும்பமாய் இன்று ஆலயம் வந்திருக்கிறீர்கள்?” என்றால், “மகனுக்கு “பெண் பார்க்க போகவேண்டும். அதுதான் ஆலயம் வந்து ஜெபம் செய்து விட்டு போகலாம் என்று வந்தோம்” என்ற பதில்.
இப்படியாக ஆலயம் செல்லுவதற்கு எத்தனை எத்தனையோ காரணங்கள் வைத்திருக்கிறார்கள்.
வாழ்க்கையின் அழுத்தங்களினால் ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருக்கும் மனிதன் ஓய்வெடுக்க விரும்பும்போது, ஓய்வு நாளில் ஆலயத்திற்கு செல்லுவதென்பது விருப்பமற்ற காரியமாகவே தோன்றுகிறது.
திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பள்ளிக்கூடம் செல்லவும், சனிக்கிழமை டியூஷன் செல்லவும் ஞாயிறு என்றாலும், நிம்மதியாகத் தூங்க முடியாமல் ஆலயம் செல்லுவதற்காக விடியற்காலையில் எழும்பவேண்டுமே என்பது பிள்ளைகளின் விசனக்குரல். இன்றைக்கு மக்கள் இருக்கும் இந்த மனநிலையில், தாவீதின் மனநிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நம்பமுடியாததாகவே இருக்கிறது.
தாவீது ஆண்டவரோடு மிக நெருக்கமான உறவினைக் கொண்டிருந்ததால் அவரை ஆராதிக்கவும் சேவிக்கவும் அவர் பின் வாங்கினதில்லை. ஆதலால், கர்த்தருடைய ஆலயத்திற்குச் செல்லுவதென்பது அவருக்குச் சந்தோஷமான அனுபவமாகவே இருந்தது.
நாம் கர்த்தருடைய ஆலயத்திற்கு செல்லுவதற்கும், அவரை ஆராதிப்பதற்கும் விருப்பமற்றுப் போவதற்குக் காரணம் என்ன? நாம் கர்த்தரை விட்டுத் தூரம் போய் விட்டோம். நம்மை நேசித்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்த ஆண்டவரை நாம் நேசிக்கத் தவறிவிட்டோம்.
ஆண்டவருக்குக் கொடுக்கவேண்டிய கனத்தையும், மகிமையையும், முக்கியத்துவத்தையும் நாம் நமக்காகவும் நமது தேவைகளுக்காகவும் கொள்ளையாடி விட்டோம். இதுதான் உண்மை.
வேதத்தில் பார்போம்,
கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.
சங்: 122:1
நீ தேவாலயத்துக்குப் போகும் போது உன் நடையைக் காத்துக்கொள், மூடர் பலியிடுவது போலப் பலியிடுவதைப் பார்க்கிலும் செவி கொடுக்கச் சேர்வதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள்.
பிரச: 5:1
நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன், தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.
சங் :52:8
தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
சங்:145:18
பிரியமானவர்களே,
ஆலயம் செல்லுவதையும், ஆண்டவரை ஆராதிப்பதையும் நாம் பாரமாக எண்ணாமல் அதை நம் வாழ்வின் பாக்கியமாக எண்ண வேண்டும்.
ஆம், கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம் பாக்கியம் உள்ளது
நமது ஆண்டவரை நாம் நேசித்து அவர் நமக்கு செய்த நன்மைகளை நினைத்து, நன்றி நிறைந்த உள்ளத்தோடு நாம் ஆராதிக்க வேண்டும் . இன்று நாம் உயிரோடு இருப்பது அவருடைய சுத்த கிருபையே.
கர்த்தருடைய ஆலயத்திற்கு செல்லுவது நமக்கு எப்படிப்பட்ட உணர்வை கொடுக்கிறது? என்ன நோக்கத்துக்காக நாம் ஆலயத்திற்குச் செல்லுகிறோம்??
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் ஆராதிக்கப் போகிறோம் என்பது நமக்கு எப்போதும் சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் தருகிற விஷயமாகவே நாம் கருத வேண்டும்.
உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக் கொள்ளுகிறவன் பாக்கியவான், உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.
ஆம், அவரது ஆலயத்தின் நன்மையால் திருப்தியாவதற்கு இந்த நாளில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார்.
ஆமென்