Daily Manna 271

என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. சங்கீதம்: 51:3.

எனக்கு அன்பானவர்களே!

‌பரிசுத்தமாக்குகிற பரமன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு மனிதர் ஒரு குதிரையை பாசமாக வளர்த்து வந்தார். அந்த குதிரை தன் எஜமான் சொல்வதை கேட்டு அவருக்கு உதவியாக இருந்து வந்தது. ஒரு நாள் அது பின்னால் இருந்த வேலியை எட்டி உதைத்ததினால் அதன் கால்களில் புண் உண்டானது.

அதைக் கண்ட அந்த மனிதர் அதற்கு மருந்து போட்டு, காயத்தை கட்டி விட்டார். ஆனால் அந்த குதிரையால் சரியாக நடக்க முடியவில்லை. ஆகையால் ஒரு மிருக மருத்துவரிடம் போய் அந்த குதிரையை காட்டினார்.

அவர் அந்த குதிரையை பரிசோதித்து விட்டு, அதற்கு புண் ஆறுவதற்கான மருந்தை கொடுத்தார். அதை சாப்பிடும் நேரத்தில் அந்த குதிரைக்கு நன்றாக நடந்தது.

ஆனால் மருந்தை நிறுத்தினால், பின் திரும்பவும் நடக்க முடியாமல் போனது. அந்த மனிதர் திரும்பவும் அந்த மருந்தை கொடுத்தார். அதை சாப்பிட்ட குதிரை நடந்தது, பின் திரும்ப பழையபடி நொண்டி நொண்டி நடக்க ஆரம்பித்தது.

அந்த மனிதர் அந்த குதிரையை நேசித்ததால் மீண்டும் அதை மருத்துவரிடம் கொண்டு போய் காண்பித்தார். அந்த வைத்தியர் மயக்க மருந்து கொடுத்து அந்த காலை சரியாக பரிசோதித்து பார்த்த போது, அந்த காலுக்குள், ஒரு இரும்பு கம்பி உள்ளே இருப்பதைக் கண்டார்.

அந்த குதிரை ஆண்டிபயாடிக் (Antibiotic) என்னும் கிருமி தடுப்பு மருந்தை சாப்பிடும் நேரம் மட்டுமே சுகமாக இருந்தது. பின் அது மீண்டும் பழைய நிலைப்படி நொண்டி நொண்டி நடந்தது.

அந்த இரும்பு கம்பியை எடுத்து பின்பு, சரியான மருந்து இட்டபோது, அந்த குதிரை குணமாகி, நன்கு நடக்க ஆரம்பித்தது.

ஆம், பாருங்கள் நம்முடைய இருதயத்திற்குள்ளும் பாவ சுபாவத்தின் வேர் உள்ளே ஆழமாக பதிந்திருப்பதால் தான்,
நாம் பரிசுத்தமுள்ள வாழ்வு வாழ்வது மிகவும் கடினமாக உள்ளது.

ஏதோ ஒரு பாவத்தில் விழுந்தவர்களாகவே காணப்படுகிறோம்.
அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகின்றார்.
நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?

ரோமர்: 8:13 மாம்சத்தின் படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள் என்று பவுல் கூறுகின்றார்.

வேதத்தில் பார்ப்போம்,

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ் செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யோவான் :8 :34.

உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே, அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே,
பிரசங்கி :5 :6.

இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
2 பேதுரு :1:4.

பிரியமானவர்களே,

இந்த உலக வாழ்க்கையிலே பலவிதமான அடிமைத்தனத்தில் வாழ்கின்ற மக்கள் பெருகி இருக்கிறார்கள். இந்த அடிமைத்தனம் ஏன்? எப்படி வந்தது? எதினால் ஏற்பட்டது என்றுச் சொல்லிப் பலவிதமான கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கிற மக்களாய் இருக்கின்றோம்.

இன்று பாவத்திற்கு அடிமைகளாய் வாழ்கிற நிலைகளை சர்வ சாதாரணமாக எங்கும் பார்க்க முடிகிறது . ஏனென்றால் பாவமானது மனிதனுடைய வாழ்க்கையிலே ஒரு பங்காக மாறி விட்டது.

பாவமானது மரணத்தை விளைவிக்கக் கூடியது. இந்தப் பாவமானது மனிதருக்குள் வருவதற்கு காரணம் அவனுக்குள் உண்டாகிற இச்சைகளும்,தீராத ஆசைகளும் என்று சொன்னால் மிகையாகாது.

குடித்து, வெறித்து, வாழ்கிற மக்களை தினமும் பல பட்டணங்களிலும், கிராமங்களிலும்,
நடை பாதையிலும் பார்க்க முடிகிறது. காரணம் என்ன? அவர்களுடைய வாழ்க்கையில் தெய்வ பயம் சற்றும் இல்லாத காரணமே.

அப்போஸ்தலனாகிய பவுலும் ‘என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை.

ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்’
ரோமர்: 7:18-19 என்று சொல்கிறார். நாம் செய்யக் கூடாது என்று நினைத்தாலும் நம் மாம்சம் செய்யும்படி தூண்டுகிறதாகவே இருக்கிறது.

அதிலிருந்து நாம் எப்படி வெளிவருவது? கிறிஸ்துவுக்குள் வளருவதே. ‘கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்’
ரோமர் :8:10.

கர்த்தருடைய வருகையிலே நாம் மறுரூபமாக்கப்படும்போது, நமது பாவ சுபாவமும், பாவ சரீரமும் அழிந்து போகும். நாம் முற்றிலும் மறுரூபமாக்கப்படுவோம். அதுவரை நாம் பாவத்திற்கு விரோதமாக போராடி அதிலே வெற்றி காண்பவர்களாக காணப்பட வேண்டும்.

நமக்கு உதவியாக பரிசுத்த ஆவியானவர் எப்பொழுதும் துணையாக இருப்பதால் அவர் மூலமாக நாம் பாவத்தின் மேல் வெற்றி பெற்றவர்களாக வாழ முடியும்.

1 கொரிந்தியர் 10:13 என்ற வசனத்தின்படி, தேவன் தாமே பாவத்திலிருந்தும், சோதனைகளிலிருந்தும் தப்பும்படியான போக்கை உண்டாக்கி நம்மை அதிலிருந்து வெளியேற்றுவார்.

நம் தேவன் பரிசுத்தராய் இருக்கிறது போல நாமும் பரிசுத்தமாய் வாழ்ந்து, ‘அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்’ பிலிப்பியர்: 2:12 என்ற வார்த்தையின் படி பரலோக ராஜ்யத்திற்கு பாத்திரவான்களாக பரிசுத்தமாய் வாழ பிரயாசப்படுவோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே நம் யாவரையும் பரிசுத்த வாழ்வுக்கு நேராக நம்மை வழிநடத்தி காப்பாராக.
ஆமென்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *