உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார். உபாகமம்: 20:1
அன்பானவர்களே!
என்றென்றும் நம்மோடு கூடவே இருந்து வழிநடத்துகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
உலக மகா யுத்தத்தின் போது, அமெரிக்க படைத் தளபதிகள் யாவரும் ஒரேயிடத்தில் கூடி, ஜெர்மனியைத் தாக்க தயாராக இருந்தனர். ஜெர்மானியப் படைகள் மிகவும் வலிமை பெற்றவை. ஆகையால் அமெரிக்க தளபதிகள் நடு நடுங்கினார்கள்.
அவர்களில் ஜெனரல் ஐசனோவர் என்ற தேவ மனிதர் இருந்தார். அவர் குறிப்பிட்ட அந்த நாளின் காலைப் பொழுதிலே, பிரகாசமான முகத்துடன் மிகவும் உற்சாகமாக வந்து அவர்களிடம், “எல்லாம் தயாராக உள்ளனவா? நாம் தாக்குதலைத் துவங்கலாமா?” என்று கேட்டவாறே, மற்ற தளபதிகளின் முகமெல்லாம் பயத்தால் உறைந்து போயிருப்பதை கவனித்தார்.
அப்பொழுது அவர், அன்று காலையில் தான் வாசித்த வேத பகுதியான
யோசுவா: 1:5 -9 ல்
“நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்தது போல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை.
பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” என்ற தேவனுடைய வார்த்தையை சொல்லி, நீங்கள் எழுந்து தங்கள் கச்சைகளை கட்டிக்கொண்டு உலகத்தை ஜெயிக்க புறப்படுங்கள் என்று உற்சாகமூட்டும் வார்த்தைகளை பேசினார்.
இவ்விதமான உற்சாகமூட்டும் வார்த்தைகளால் அவர்கள் அந்த நாளிலே, எதிரிகளை வென்றனர்.
நாமும் நம்முடைய ஆண்டவருடைய வார்த்தையை கொண்டு இவ்வுலகில் ஜெயமுள்ள வாழ்க்கையை வாழ முடியும்.
ஒருவேளை
தேவைகளும், கவலைகளும் உங்களை அழுத்திக் கொண்டிருக்கிறதா? அதை இழுத்துச் செல்ல வலிமை இல்லாமல் சோர்வடைந்து காணப்படுகிறீர்களா?
ஆனால், உங்கள் கவலைகளையும், பாரங்களையும் சுமக்கிற ஒரு நல்ல ஆண்டவர் உங்களுக்கிருக்கிறார்.
அவரே உங்கள் ஒவ்வொரு தேவைகளையும் சந்திக்கிறவர். உங்களை பாதுகாப்பவர். உங்களுக்கு விரோதமாக எழும்புகிற எல்லா தீங்கிற்கும் அவர் உங்களை விலக்கி பாதுகாப்பவராய் இருக்கிறார்.
தமது வார்த்தைகளால் நமக்கு புதுபெலனை தருகிற தேவன் நம்மோடு இருக்கிறார்.
வேதத்தில் பார்ப்போம்,
மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள், இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார், அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
ஏசாயா: 35:4
நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு. திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.
யோசுவா: 1:9
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்.
1 கொரிந்தியர்: 16:13
பிரியமானவர்களே,
தன் அலுவல்கள் மத்தியில் சுறுசுறுப்பாயிருந்த படைத் தளபதியே, தனது பாரமான பணிச்சுமையின் மத்தியிலும் ஆண்டவருடைய வார்த்தையை தினமும் வாசித்தார்.தாவீது அரசன் தனக்கு மிகப் பெரிய பொறுப்பு இருந்த போதிலும் அவர் தேவனோடு சஞ்சரித்துக் கொண்டு தேவாலயத்தின் மீது பற்றுறுதியாய் இருந்ததை நாம் பார்க்கிறோம்.
ஆனால் நாமோ நமது சிறு காரியங்கள் இருந்த போதிலும் நாம் வேதம் வாசிக்க தவறி விடுகிறோம். நாம் ஒவ்வொரு நாளும் ஆண்டவருடைய வார்த்தையை வாசிக்கும் போது தேவன் நம்மோடு பேசுவதை உணர்ந்து கொள்ள முடியும் என்பதை மறந்து வாழ்ந்து வருகிறோம்.
ஆனால் நாம் வேத வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது ஆண்டவருடைய வார்த்தை உங்களுக்கு புதிய நம்பிக்கையும், உற்சாகத்தையும் கொடுக்கும்.
நீங்கள் செல்கிற இடமெங்கிலும் தேவ பாதுகாப்பை பெறுவீர்கள்.
ஆவிக்குரிய தடைகளோ, சரீரப்பிரகாரமான தடைகளோ உங்களை ஒன்றும் செய்ய முடியாது. ஆண்டவருடைய வார்த்தையே எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு ஆகும்.
நமக்கு தேவ ஆலோசனையையும், எச்சரிப்பையும், அன்பையும், சமாதானத்தையும், ஆசீர்வாதத்தையும்,
மன மகிழ்வையும் ஒவ்வொரு நாளும் தேவ வசனம் தந்து நம்மை வழிநடத்தும்.
இத்தகைய ஆசீர்வாதங்களை தரும் வேதத்தை நாம் தினமும் வாசிப்போம். மன நிறைவாய் வாழ்வோம்.
கர்த்தர் தாமே இத்தகைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்து, வேதவசனம் காட்டுகிற வழியில் நடந்து பரலோக வாழ்வுக்கு தகுதிபட கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.