கோபம் நிர்மூடனைக் கொல்லும். பொறாமை புத்தியில்லாதவனை அதம் பண்ணும். யோபு: 5:2
அன்பானவர்களே!
நல் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
கர்வப்படுபவன் கடவுளை இழக்கிறான். பொறாமைப்படுபவன் நண்பனை இழக்கிறான். கோபப்படுபவன் தன்னையே இழக்கிறான். பெரும்பாலானோர் கோபத்தால் தன்னைத் தானே இன்று இழந்து கொண்டிருக்கிற பரிதாப நிலையை பார்க்கிறோம்.
தத்துவ ஞானி பிளேட்டோ, “இறைவன் எப்போதும் நம்மை கண்காணித்துக் கொண்டே இருக்கிறான் என்ற உணர்வு நம்மிடம் இருந்தால் பிறர் மீது கோபம் கொள்ளாமல் இருப்போம்,” என்கிறார்.’
” கோபமும், பொறுமையின்மையும், புரிந்துணர்வின் எதிரிகள்,” என்கிறார் நம் தேசத் தந்தை.–
“கோபம் என்பது மனிதன் தனக்கு தானே அமைத்துக் கொண்ட ஆயுள் குறைப்பு சாதனம்”என்கிறது ஒரு பழமொழி.
நபிகள் நாயகம் தனது தோழர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது தன் நண்பர்களைப் பார்த்து “நீங்கள் யாரை மாவீரன் என்று சொல்வீர்கள்,” என்று கேட்டார். அவர்கள் “எவன் எவராலும் வீழ்த்த முடியாதவனாக, பலசாலியாக திகழ்கிறானோ அவனே மாவீரன்,” என்றனர்.
உடனே நபிகள் நாயகம் “வீரம் என்பது அதுவல்ல, யார் கோபத்தில் தன்னை கட்டுப்படுத்தி அமைதியாக கோபத்துக்கு தன்னை ஆட்படுத்தாமல் இருக்கிறார்களோ அவர்களே மாவீரன்,” என்றார். கோபம் சைத்தானின் ஆயுதம். கோபத்தில் சுரக்கும் ஹார்மோன் இதயத்தை படபடப்பாக்கி வாழ்நாளை குறைத்து விடுகிறது.
குடும்பத்தில் ஒவ்வொருவரும் படிக்கக் கூடிய முதல் பாடம் மற்றும் வெற்றி பாடம், கோபப்படாமல் இருப்பது தான். நம்முடைய தேசத்தின் அச்சாணியாக விளங்குகிற குடும்பம் என்னும் கோட்டையை துளைப்பது கோபம் எனும் குண்டுகள் தான்.
வேதத்தில் பார்ப்போம்,
மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும், இலச்சையை மூடுகிறவனோ விவேகி.
நீதிமொழிகள் :12:16
உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங் கொள்ளாதே, மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.
பிரசங்கி :7:9
மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்க மாட்டாதே.
யாக்கோபு:1:20
எனக்கு அருமையானவர்களே,
புத்தர் தரும் புதுமை விளக்கம் தனி மனித கோபத்தினால் இந்த மண்ணில் எத்தனையோ குடும்பங்கள் அழிந்திருக்கின்றன.
கணவன் கோபம் கொள்ளும் போது மனைவி விட்டுக் கொடுப்பது மேலானது. அவ்வாறு விட்டுக் கொடுப்பதால் அடங்கிப் போய் விட்டேன் என்னும் இழிநிலை அல்ல. மனத்தை அடக்க கற்றுக் கொண்டேன் என்னும் உயர்நிலை அது.வெளியில் சென்ற கணவன், வீட்டுக்குள் நுழையும் போது காலணியை கழற்றி வைப்பது போல் கோபத்தையும் கழற்றி வைக்க வேண்டும். அதே போல் மனைவியும் ‘சந்திரமதியாக’ இருக்க வேண்டும்.
புத்தர் ஒரு கிராமத்திற்கு சென்றார் அங்கிருந்த மக்கள் அவரை வசை பாடினர். அவருக்கு கோபம் வரவில்லை. ஏன் என ஆச்சரியத்துடன் கேட்டனர். அப்போது ‘எனக்கு வேண்டாததை நான் அவர்களிடமே திருப்பி தந்து விடுவேன்.
அது போன்று நீங்கள் வசை பாடியது எனக்கு வேண்டாத ஒன்று. அதை உங்களிடமே திருப்பி தந்துவிட்டேன். நான் ஏற்காத ஒன்றால் எனக்கு எப்படி கோபம் வரும்,’ என சொல்லி சிரித்தார்.
கோபத்தையும் நெறிப்படுத்த பழகியிருக்க வேண்டும். பாரதி கூட ‘ரவுத்திரம் பழகு’ என்று சொன்னாரே தவிர ‘பயன்படுத்து’ என்று சொல்லவில்லை. கோபத்தை நாம் கையாள வேண்டும். அது நம்மை கையாளக் கூடாது.
இதை தான் “ஆறுவது சினம்” என ஔவையும் குறிப்பிடுகிறார்.
எதிர்பாராத சந்தர்ப்பத்தில் கோபம் வந்தால் நமது அணுகுமுறையை மாற்றி அதை ஆக்கப்பூர்வமாக மாற்ற வேண்டும். அவ்வாறு செய்யும் போது உடல்நலம் சீராகிறது. உறவுகள் வலுவடைகிறது. எண்ணம் உயர்வு அடைகிறது.
வெறுப்பு, கோபம், பேராசை, பொறாமை போன்ற குப்பைகளை மனத்தில் இருந்து அகற்றி மனதை துாய்மையாக வைத்திருப்பவனிடம் மட்டுமே இறைவன் இரண்டறக் கலந்து நிற்பான்.
கொதிகலனில் தண்ணீர் கொதிக்கும் போது கீழே உள்ள நெருப்பை அகற்றி விட்டால் அமைதி அடைகிறது. அதே போல் மனதில் வெறுப்பை அகற்றி விட்டால் நெஞ்சம் அமைதி அடைகிறது.’மலர்கள் செடிகளுக்கு அழகு. மலர்ந்த முகம் மனிதனுக்கு அழகு கோபமற்ற புன்னகை இருதயத்துக்கு அழகு. நிலையான இன்பம் வாழ்க்கைக்கு அழகு!’
அந்த நிலையான இன்பத்தை நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு நிறைவாக தந்து நம்மை வழிநடத்துவாராக.
ஆமென்.