Daily Manna 283

ஜீவகாலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும் படிக்கும் அப்படியானார். எபிரேயர்: 2 :15.

எனக்கு அன்பானவர்களே!

விடுதலை தருபவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு சகோதரி இவ்வாறு சாட்சி கூறுகின்றார். “நான் ஆண்டவரை அறியாத குடும்பத்தில் பிறந்து வளர்க்கப்பட்டவள். என் கணவர் பெயர் முத்துக்குமார். நாங்கள் பெங்களூருவில் வசித்து வருகிறோம்.

எங்களுக்குத் திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். என் கணவர் நல்ல குணம் உடையவர். ஆனாலும், மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார்.

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மது அருந்துவார். ஆகவே, அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்வார். ஒரு விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இன்னொரு முறை பலத்த காயமுற்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். தொடர்ந்து மது அருந்தியதால் கண் பார்வையில் பாதிப்பை உணர ஆரம்பித்தார்.

நான் எவ்வளவோ அறிவுரைகள் கூறியும். அவரால் குடிப் பழக்கத்திலிருந்து விடுதலை பெற இயலவில்லை. நான் காலைதோறும் ‘ ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் செய்தியை குறித்து பேசுகின்ற ஒரு குறிப்பிட்ட” தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்து வந்தேன்.

ஒருநாள் என் கணவரும் என்னோடு தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார். நான் ஜெபித்துக் கொண்டிருந்த போது, திடீரென அவரையும் அறியாமல் முழங்கால்படியிட்டு, கண்களை மூடி ஜெபிக்க ஆரம்பித்தார்.

ஆச்சரியப்படும் விதமாக, ஆவியானவரின் தொடுதலினால் அன்று முதல் குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை பெற்றார். தேவனுடைய கிருபையினால் சுகத்துடன் இருக்கிறார். ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்” என்றார்!

என்ன ஒரு அதிசயம்!உலகில் உள்ள அனைத்து ஆத்துமாக்களும் என்னுடையது என்று சொன்னவர். அனைத்து மக்களுக்கும் பாகுபாடு இன்றி மனம் உடைக்கப்பட்ட நிலையில் இருக்கிற அத்தனை பேருக்கும் அற்புதம் செய்ய வல்லவராய் இருக்கிறார்.

“கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு”
2 கொரிந்தியர் 3:17

இன்று நீங்கள் நீண்ட காலமாக பாவ பழக்கவழக்கத்தின் அடிமைத்தனத்தில் கட்டப்பட்டிருக்கிறீர்களா? யாராவது என்னை இதிலிருந்து விடுவிக்க மாட்டார்களா? என்று ஏங்கிக் கொண்டிருக்கிறீர்களா?

“இயேசு” என்ற பெயரை நோக்கி கூப்பிடுங்கள். அவர் உங்களுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை நிச்சயம் கொண்டு வருவார்.

நீங்கள் வெட்கப்பட்ட அதே இடத்தில், கர்த்தர் உங்களை கனப்படுத்துவார். நீங்கள் இழந்த அனைத்தையும் மீண்டும் பெற்றுக் கொள்வீர்கள்.

வேதத்தில் பார்ப்போம்,

அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ் செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்.
சங்கீதம் :146:7.

என்னுடையவர்களைக் கிரயமில்லாமலும் பரிதானமில்லாமலும் விடுதலையாக்குவான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா: 45 :13.

இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்
கொலோசேயர்: 1:13.

பிரியமானவர்களே,

இந்த உலகத்தில் நாம் சிற்றின்பங்களையும் , நரகத்தை நோக்கி செல்லுகின்ற பாவ வழிகளையும் தெரிந்துக் கொண்டவர்களாயிருக்கிறோம்.

எனவே ‘நம் அனைவருடைய பாவங்களையும் இயேசுகிறிஸ்து சிலுவையில் சுமந்து தீர்க்க வேண்டியதாயிருந்தது’ என்று வேதம் தெளிவாய் கூறுகின்றது .

இயேசு எனக்காக சிலுவையில் மரித்தார் என்றும், அவர் சிந்தின விலையேறப் பெற்ற ரத்தம் என்னுடைய வியாதிகளைப் போக்கும் என்றும், நாம் மனதார விசுவாசிக்க வேண்டும்.

அப்பொழுது அவரது தெய்வீக சுகத்தை நாம் அனுபவிக்க முடியும்.
வாழ்நாளெல்லாம் வியாதியோடும், பலவீனத்தோடும் இருப்பது தான் தேவனுடைய சித்தம் என அநேகர் தவறான கருத்துடையவர்களாக இருக்கிறோம்.

“பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறது போல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்’
III யோவான்:1: 2
மேற்கண்ட வசனத்தை கவனித்தீர்களா? நாம் ஆரோக்கியமாகவும், சுகமாகவும் இருப்பது தான் தேவனுடைய விருப்பம்.
இதை மனப்பூர்வமாக விசுவாசியுங்கள்.

மாத்திரமல்ல, ‘நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்’ ஏசாயா: 53:5 என வேதம் தெளிவாகக் கூறுகிறது.

ஆகவே, எப்படிப்பட்ட வியாதிகளாக இருந்தாலும் சிலுவையில் சிந்தின இயேசு கிறிஸ்துவின் ரத்தத்தின் வல்லமையினால் பிசாசின் கிரியைகளை அழித்து தெய்வீக சுகத்தை கட்டாயம் இயேசு தருவார்.
ஏனெனில் அவர் இன்றும் ஜீவிக்கிறார்.

அது மட்டுமல்ல, அவர் தரித்திரத்திலிருந்தும் விடுதலை தருபவர்.
‘நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே, அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே’
II கொரிந்தியர் :8:9 என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகின்றார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய நோய்களிலிருந்து மாத்திரம் விடுதலை தருகிறார் என்று வேதம் சொல்லவில்லை. நம்முடைய சகல தரித்திரங்களிலிருந்தும் விடுதலை தருகிறார் என்று வேதம் தெளிவாக கூறுகிறது.

நம்முடைய வாழ்க்கைக்கு பணம் மிகவும் முக்கியமானதாகும். இந்த பெரிய வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய நம்முடைய தேவன் ஐசுவரியமுள்ளவர்.

‘பூமியும் அதன் நிறைவும் கர்த்தருடையது’ என நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். அப்படியானால் ஒருவேளை தரித்திரம் அல்லது கடன்பாரம் நம்முடைய வாழ்வில் இருந்தாலும் அதைப் போக்குவதற்கு தேவன் வழிகளை உருவாக்குவார்.

இன்றைக்கே கர்த்தர் உங்கள் வாழ்வில் காணப்படுகிற எல்லாவிதமான அடிமைத்தனங்களையும் உடைத்தெறிந்து, உங்களை விடுவித்து, நீங்கள் தலை நிமிர்ந்து நிற்கச் செய்வார்.

ஆகவே நாம் இந்த விசுவாச வார்த்தைகளை பற்றிக் கொண்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் விடுதலைப் பெற்று வளமாய் வாழ இறைமகன் நம் யாவருக்கும் அருள் புரிவாராக..
ஆமென்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *