Daily Manna 284

உன் சுயபுத்தியின் மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு நீதிமொழிகள்:.3:5

எனக்கு அன்பானவர்களே!

இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு மனிதன் பிரயாணமாய் வந்து ஆறு ஒன்றைக் கடந்து செல்ல நேர்ந்தது.

அருகில் இருந்த படகைக் கண்டும், அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல்,
‘செங்கடலைக் கடக்கச் செய்த ஆண்டவரே, இந்த ஆற்றையும் கடக்க செய்யும்’ என்று சொல்லி நடக்க ஆரம்பித்தான்.

யார் சொல்லையும் கேட்காமல் தலைக்கு மேல் தண்ணி வர ஆற்றில் மூழ்கியே மாண்டு போனான்.

ஆண்டவர் தனக்கு கொடுத்த புத்தியைப் உபயோகிக்காது போனான்.

பொதுவாக மனிதர்கள் மற்றவர்கள் நம்மை அறிந்து கொள்ள வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதே இயற்கையாக உள்ள குணம்.

ஆனால் தேவன் விரும்புகிற வெற்றியுள்ள வாழ்க்கையை நாம் வாழ்வதற்கு தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாக இருக்கிறது.

தேவ சித்தம் அறிந்து கொள்ளாதவர் வெற்றி வாழ்க்கையை வாழ முடியாது. தேவ சித்தம் அறிந்து கொண்டவர், வெற்றி வாழ்க்கையை வாழாமல் இருக்க முடியாது. இது தான் வேதாகம உண்மை.

வெற்றி வாழ்க்கையை ஆசைப்படுகிற அநேகர் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ முடியாமல் இருப்பதற்கு முதல் காரணம். தேவ சித்தம் அறிந்து கொள்வதற்கு பதில் சுயசித்தம் செய்ய துடிப்பது தான்.

நமது புத்தியை அப்படியே மழுங்கடித்து விட்டு தேவனை மட்டும் எதிர்பார்ப்பதல்ல. நமக்குத் தேவன் தந்த புத்தியை பகுத்தறிவோடு சரிவர உபயோகிக்க வேண்டும் என்பதே.

நாம் தேவனை நம்பாமல், நமது சுயபுத்தியில் எப்போது சாய்கிறோமோ, அல்லது நமது புத்தியை மூட்டைக்கட்டி வைத்து விட்டு, ‘தேவனே, நீரே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும்’ என்று எப்போது சோம்பேறியாய் இருக்கிறோமோ, அப்போது நாம் பெரும் தவறு செய்கிறோம்.

நாம் தேவனையும் முழுமையாக நம்ப வேண்டும்; அதே வேளையில் தேவன் நமக்குத் தந்த புத்தியையும் சரிவர உபயோகிக்கப் பழக வேண்டும்.

இரண்டும் நமது வாழ்வில் ஒன்றுடன் ஒன்று கலந்து செயல்பட ஆரம்பிக்கும் போது
தேவ வழிநடத்துதலைப் பெற்றுக் கொள்ள முடியும்.

வேதம் சொல்லுகிறது கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்…”
நீதிமொழிகள்:1:7 என்று கூறுகிறது. நாம் தேவனுக்குப் பயந்து உண்மையாய் நடக்கும் போது, சரிவர சிந்திக்கவும் தீர்மானிக்கவும் தேவன் நமக்கு ஞானத்தைத் தருகிறார்.

வேதத்தில் பார்ப்போம்,

ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். நீதிமொழிகள்: 3 :13.

புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக் கொள், அதை விட்டு விடாதே; அதைக் காத்துக் கொள், அதுவே உனக்கு ஜீவன்.
நீதிமொழிகள்: 4:13

மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான்.
யோபு: 28:28

பிரியமானவர்களே,

சாய்ந்திருப்பது என்பது ஒரு சுகமான அனுபவம். நன்கு வேலை செய்து களைத்துப் போனவர் சற்று சாய்ந்திருக்கும் போது எத்தனை ஆறுதல் பெறுகிறார்.

அதிக துக்கத்தால் அழுபவர்கள் பக்கத்தில் இருப்பவரின் தோளின் மீது சாய்ந்து கொள்வார்கள். வீட்டிலே சாய்வு நாற்காலிகளை வயோதிபர்கள் சாய்ந்து கொள்வதற்காக வைத்திருப்பார்கள்.

சாய்ந்து கொள்வது என்பது ஒரு சுகமான அனுபவமாக இருந்தாலுங்கூட நாம் எதிலே சாய்கிறோம் என்பதில் தான் அதின் சுகமே அடங்கியுள்ளது அல்லவா?

தேவனிடத்தில் ஞானத்தைப் பெற்றுக் கொண்ட சாலொமோன் ஞானியின் வார்த்தைகள் சாய்ந்திருத்தலைக் குறித்து நமக்குப் போதிக்கிறது. ‘உன் சுய புத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும்; கர்த்தரில் நம்பிக்கையாயிரு.’ என்றார் .

அதற்காக, நமது புத்தியைப் உபயோகிக்காமல் மழுங்கடிக்க விட்டு விட்டு, தேவன் எல்லாம் பார்த்துக் கொள்ளுவார் என இதனை தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டு பேசாமல் இருக்கக் கூடாது.

இதே சாலொமோன், “வழியிலே சிங்கம் இருக்கும், நடு வீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்”
நீதிமொழிகள்: 26:13 என்றும் எழுதியுள்ளார்.

அதற்காக சாக்குப்போக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் சோம்பேறியைப் போல நமது புத்தியை ஓரங்கட்டி வைத்துவிட்டு வாழும் ஒரு வாழ்வைக் குறித்து ஞானி பேசாமல்,

தேவனோடு இணைந்த வாழ்வை வாழ்ந்து அவர்மீது முழு நம்பிக்கை வைத்து வாழுவதைக் குறித்தே பேசுகிறார்.

“நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து தீமையை விட்டு விலகு” என்றும் நீதிமொழிகளில் ஞானி எழுதியிருப்பதை நாம் காண்கிறோம்.

இதன் அர்த்தம் என்ன? நமக்குள்ள ஞானம் தேவனே தந்தார் என்பதை உணர்ந்து, அவர் தந்த ஞானத்தை அவரோடுள்ள உறவின் மூலமாக இன்னும் செம்மையாக உபயோகிக்கலாம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆண்டவர் நமது வாழ்வில் வைத்திருக்கும் நோக்கத்தைக் கண்டு அதை, அவருடைய சித்தம் போல் நாம் வாழ அந்த ஞானம் நமக்கு உதவுகிறது.

இதைத் தான், நமது சுயபுத்தியின் மேல் சாயாமல், தேவன் மீது நம்பிக்கை கொண்டு, அவரில் சாய்ந்து வாழும் வாழ்வு என்பதாக சாலோமோன் சுட்டிக் காட்டுகிறார்.

நாமும் நமது சுயபுத்தியின் மேல் சாயாது, தேவனுடைய ஆலோசனையை நாடும் போது நாம் எல்லா காரியத்திலும் வெற்றி பெறுவோம்.

நமது வாழ்வில் வெற்றியை சுதந்தரித்து வளமான வாழ்வு வாழ இறைமகன் இயேசு கிறிஸ்து நமக்கு அருள் புரிவாராக.
ஆமென்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *