Daily Manna 286

தடைகளை நீக்கிப் போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்து போகிறார் மீகா: 2:13

எனக்கு அன்பானவர்களே!

தடைகளை நீக்கி, நம்மை செவ்வையாய் நடக்க செய்கிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

பண்டைய காலத்தில், ஒரு மன்னர் ஒரு சாலையில் பெரிய கற்பாறை ஒன்றை வைத்தார். பின்னர் அவர் தன்னை மறைத்துக் கொண்டு, யாராவது அந்த கற்பாறையை வழியிலிருந்து நகர்த்துவாரா என்று பார்த்துக் கொண்டிருந்தார்.

ராஜாவின் செல்வந்த வணிகர்கள் மற்றும் பிரபுக்கள் அந்த சாலையில் வந்தனர். அவர்கள் அந்த பாறையைப் பற்றி கண்டு கொள்ளாமல் அதைச் சுற்றி நடந்து சென்றார்கள்.

பல பாதசாரிகள் சாலைகளை தெளிவாக வைத்திருக்கவில்லையே என்று சத்தமாக மன்னனைக் குற்றம் சாட்டிக் கொண்டே போனார்கள், ஆனால் அவர்களில் யாரும் கல்லை வெளியே எடுப்பது பற்றி எதுவும் செய்யவில்லை.

ஒரு விவசாயி ஒரு மூட்டை காய்கறிகளை சுமந்து கொண்டு வந்தார்.

கற்பாறையை நெருங்கியதும், விவசாயி தனது சுமையை கீழே இறக்கி வைத்து விட்டு,கல்லை சாலையிலிருந்து வெளியே தள்ள முயன்றார். அதிக அழுத்தம் மற்றும் சிரமத்திற்குப் பிறகு, அவர் இறுதியாக வெற்றி பெற்றார், பாறையை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினார்.

பிறகு மகிழ்ச்சியோடு விவசாயி தனது காய்கறிகளை எடுக்க திரும்பிச் சென்றபின், கற்பாறை இருந்த இடத்தில் ஒரு பை கிடப்பதைக் கவனித்தார்.

அந்தப் பையில் பல தங்க நாணயங்களும், விலை உயர்ந்த பொருட்களும் இருந்தன. மேலும் சாலையிலிருந்து பாறாங்கல்லை அகற்றுவோருக்கு இந்த தங்கம் பரிசு என்று விளக்கும் ஒரு குறிப்பு மன்னரிடமிருந்து வந்ததாக இருந்தது.

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு தடைகளும் சூழ்நிலைகளும் நம்மை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை நமக்கு அளிக்கிறது.

வேதத்தில் பார்ப்போம்,

தடைகளை நீக்கிப் போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்து போகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்.
மீகா: 2:13.

இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம் பண்ணுவான்
மாற்கு: 1 :2.

நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்
ஏசாயா: 45:2.

பிரியமானவர்களே,

வாகனப் பயணங்களின் போது எதிர்ப்படுகிற வேகத்தடைகள், வேகத்தைக் குறைக்க மட்டுமல்ல, விபத்துக்களைத் தடுக்கவும் தான்.

வாழ்க்கைப் பயணங்களிலும் தடைகள் உண்டு. அவை நமக்கு சலிப்பை ஏற்படுத்தினாலும் அவை நம் நன்மைகளுக்கே! அத்தடைகளின் நடுவிலே தான் நம் கர்த்தரின் வல்லமையை நம்மால் காண முடியும்!

வாழ்க்கையில் முன்னேற்றத்தை தடை செய்யும்படியும், ஆவிக்குரிய வாழ்க்கையில் தடைகளை உண்டு பண்ணும் படியும் அநேக விதங்களில் எதிராளியாகிய சாத்தான் தந்திரமான வழிகளில் வருவான்.

ஆனாலும் கர்த்தர் நமக்கு முன்பாக செல்லுகிறபடியால் அவர் எல்லா தடைகளையும் நீக்கி நம்முடைய காரியங்கள் யாவையும் செவ்வாய் செய்வார்.

நான் எதை செய்தாலும் எல்லாம் தடையாக இருக்கிறதே, எதுவுமே எனக்கு வாய்க்கவில்லையே என்று கவலையுடனும் வேதனையுடனும் இருக்கிறீர்களா? கர்த்தர் உங்களுக்கு முன்பாக சென்று இந்த தடைகளை உடைக்கப் போகிறார் கவலைப்படாதீர்கள்.

வேலையில் பிரச்சனை, திருமணத்தில் பிரச்சனை, வீடு கட்டுவதில் பிரச்சனை, எதை எடுத்தாலும் எல்லாம் பாதியில் நின்று விடுகிறதே ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்று விரக்தியுடன் இருக்கிறீர்களா? விசுவாசத்தை விட்டு விடாதீர்கள்.

உங்களுக்கு முன்பாக தடைகளை நீக்குகிறவர் போக போகிறார். எல்லா தடைகளும் இருந்த இடம் தெரியாத அளவிற்கு ஒன்றுமில்லாமல் போகப் போகிறது. விசுவாசத்துடன் ஜெபித்து நன்மைகளை சுதந்தரித்துக் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் ஏற்படுகிற தடைகள் எல்லாம், பிரச்சனைகள் எல்லாம் உங்களுக்கு எதிரானது அல்ல. உங்கள் விசுவாசத்திற்கு எதிரானது.

உங்கள் விசுவாசத்திற்கு வைக்கப்பட்டிருக்கிற பரீட்சை. இந்த பரீட்சையில் ஜெயிக்க வேண்டுமானால் நீங்கள் தேவனோடு கூட இருக்க வேண்டும். ஜெபத்துடன் இருக்க வேண்டும். அப்போது தான் கர்த்தர் நம் முன்பாக செல்வதை நம்மால் உணர முடியும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் என் வாழ்வில் உள்ள தடைகள் எல்லாம் நீங்கும் என்ற விசுவாச உறுதியில் ஒவ்வொரு நாளும் நிலைக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *