உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும், சங்: 25:3
அன்பானவர்களே,
பொதுவாக “காத்திருப்பது” என்பது மிகவும் கடினமான நேரம் தான்.
எனினும், காத்திருப்பதை நினைத்து சோர்ந்து போகாதிருங்கள். பொறுமை எப்போதும் நற்பலனையே கொண்டுவரும். ஏற்ற நேரத்தில் கர்த்தர் உங்களுக்கு நீதி செய்வார். ஆகவே, நம்பிக்கை இழக்காமல் ஆண்டவரையே நோக்கிப் பாருங்கள்.
அவசரப்பட்டு தேவனுடைய சித்தத்திற்கு மாறாக செயல்பட ஒருபோதும் இடம் கொடுத்து விடாதீர்கள். அது பல வேதனைகளையும், இழப்புகளையும் கொண்டு வந்துவிடும்.
நீங்கள் நீண்ட நாட்களாக ஜெபித்துக் கொண்டிருக்கலாம். அல்லது உங்கள் சொந்த வாழ்க்கையிலும் தேவனுடைய ஆசீர்வாதத்திற்கு நீங்கள் காத்திருக்கலாம். காத்திருப்பது மிகவும் கடினமான ஒரு காரியம் தான்.
“கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்” என்ற சங்கீதக்காரனாகிய தாவீதின் வார்த்தை நமக்கு நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. நம் அன்பின் ஆண்டவரிடம் சகலத்தையும் சமர்ப்பியுங்கள். அவர் உங்களுக்காக ஒரு அற்புதம் செய்வார். “ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார். உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன். அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்”
ஏசா:30:18 என்ற வார்த்தையின்படியே, நீங்கள் நிச்சயமாக, கர்த்தருடைய நன்மையைக் காண்பீர்கள்.
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து சிறந்ததைப் பெறுவீர்கள். “நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்” என்று நம் அருமை இரட்சகர் கூறுகிறார்.
எனவே நாம் பயப்படவும் கலங்கவும் வேண்டாம்.
வேதத்தில் பார்ப்போம்,
உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும், முகாந்தரமில்லாமல் துரோகம் பண்ணுகிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக.
சங் :25:3
கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன், அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.
சங்:40:1
நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்: விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.
நீதி:13:12
எனக்கு அருமையானவர்களே,
காத்திருக்கிறீர்கள் என்பதை தேவன் அறிவார். அதை அவர் ஏற்ற வேளையில் கொடுக்கும்போது நிச்சயமாகவே அது ஜீவ விருட்சத்தை போல நல்ல பலனை கொடுப்பதாக இருக்கும்.
அப்படி காத்திருக்கும் காலம் நமக்கு விலையேறப்பெற்ற காலமாகும். அதில் நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் வைத்துள்ள அன்பின் ஆழத்தை அவர் கண்டு கொள்ள ஏதுவாகும்.
நாம் காத்திருக்கும் நாட்களில் சாத்தானுக்கு இடம் கொடுத்தோமானால், அது நமக்கு கண்ணியாக மாறிவிடும். அது நம் ஆண்டவரை விட்டு பிரிவதற்கு ஏதுவாக மாறிவிடும் . ஆகவே நம்முடைய காத்திருப்பு நாட்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பிரியமானவர்களே, எவ்வளவு காலம் காத்திருப்பது என சோர்ந்து போகாதீர்கள், உங்களது ஜெபத்திற்கும் கண்ணீருக்கும், கிரியைக்கும் ஏற்ற காலம் வரும்போது, அத்தனை பலனையும் காண்பீர்கள்.
ஆண்டவருடைய சமுகத்தில் நீங்கள் விட்ட ஒவ்வொரு சொட்டு கண்ணீரும் வீணாக ஒரு போதும் போகாது.
அவை சர்வ வல்லமை படைத்த கர்த்தருடைய கணக்கில் இருக்கிறது.
ஆகவே இதுவரை நீதியாய் வாழ்ந்து என்ன பயன்? ஜெபித்து, கடவுளுக்கு பிரியமாய் வாழ்ந்து என்ன பயன்? என்று இருதயத்திலும் நினைக்காதீர்கள். நிச்சயமாகவே முடிவு உண்டு. உங்கள் நம்பிக்கை வீண் போகாது.
ஆமென்.