ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக் கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று, சங்கீதம்:118:22
எனக்கு அன்பானவர்களே !
நமது அன்பின் ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு இடத்தில், ஏலம் விடுபவர் ஒரு பழைய வயலினை (Violin) 🎻 எடுத்து, ஏலம் விட ஆரம்பித்தார். அந்த வயலின் மிகவும் பழையதாக, தூசி படிந்ததாக, அதனுடைய நரம்புகள் (Strings) எல்லாம் தொய்ந்துப் போனதாக, அநேக நாட்களாக உபயோகிக்கப்படாததாக இருந்தது.
ஏலம் விடுபவர் நினைத்தார், “இதைப் போய் நான் ஏலம் விடுகிறேனே, யார் வாங்கப் போகிறார்கள்? என் நேரம் இதற்காக வீணாகப் போவது தான் மிச்சம்” என்று நினைத்தவராக, அதை ஏலம் விடுவதற்கு, ஒரு டாலர், இரண்டு டாலர் என்று ஆரம்பித்தார். ஒருவர் மூன்று
டாலர் என்றுக் கூறவும், “மூன்று டாலர் ஒரு தரம்”, “மூன்று டாலர் இரண்டு தரம்”, “மூன்று டாலர் மூன்று தரம்” என்று கூறி முடிப்பதற்குள்,
ஒரு சத்தம், “பொறுங்கள்” என்றுக் கேட்டது.
ஒரு உயரமான மனிதர், முன்பாக வந்துக் கொண்டிருந்தார், அவர் வந்து, அந்த வயலினைக்
(Violin) கையில் எடுத்து, அதைத் துடைத்து, தொய்ந்துப் போயிருந்த அதன் நரம்புகளை (Strings) சரியாக டியூன் பண்ணி, அதை மெருகேற்றினார்.
இப்போது அந்த
வயலின் (Violin) புதுப் பொலிவோடு ஜொலித்தது. அதிலே அழகான ஒரு பாடலை இசைக்க ஆரம்பித்தார்.
பாடல் நின்றவுடன், ஏலம் விடுபவர், மெதுவான சத்தத்தில், அந்த வயலினின் (Violin) அருமையை உணர்ந்தவராக, இப்போது, இந்த வயலின் (Violin) “1000 டாலர் ஒரு தரம்” என்று கூற ஆரம்பித்தார். ஒருவர் “2000” என்றுக் கூற, இன்னொருவர், “3000” என்று போட்டியிட ஆரம்பித்தனர். கடைசியாக 4000-த்தில் அதன் ஏலம் முடிந்தது.
கூடியிருந்த மற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை,”2 டாலருக்குப் விலைப் போன அந்த வயலின் இப்போது 4000 டாலருக்கு எப்படி போயிற்று” என்று அந்த ஏலம் விடுபவரை கேட்ட போது அவர் சொன்னார், “அது என் எஜமானனுடைய கைகளின் தொடுதல்” (the touch of the Master’s Hand) என்று.
என் எஜமானின் கைப்பட்டதினால் அது மிகவும் விலையேறப் பெற்றதாக மாறி விட்டது என்றார்.
வேதத்தில் பாப்போம்!
இயேசு அவர்களை நோக்கி: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக் கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது
மத்தேயு 21: 42
மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டதும் விலையேறப் பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்
1 பேதுரு 2 :4
என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப் பண்ணினீர், என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம் பண்ணும் படியாக நீர் என் இரட்டைக் களைந்து போட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்.
சங்கீதம் 30:11
பிரியமானவர்களே,
ஒரு வேளை நீங்கள் நினைக்கலாம், “என்னால் என்ன பிரயோஜனம்?” பாவத்திலும், துன்பத்திலும் அடிபட்டு, பொலிவிழந்து இருக்கிற என்னால் என்ன பிரயோஜனம்? என்று நினைக்கிறீர்களா?
*ஆண்டவர் உங்களை* *தொடும் போது* *நீங்கள்* *ஜொலிக்க* *ஆரம்பிப்பீர்கள்* . உங்களுக்கு தெரியுமா? ஞானிகளை வெட்கப்படுத்தும் படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண்டார்;
பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும் படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துக் கொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்து கொண்டார். –
1கொரி 1:27-28. என்று பார்க்கிறோம்.
சமீபத்தில் ஒரு அருமையான ஊழியர் ஒரு சபைக்கு சென்றிருந்தார். அவர் ஏழு தலைமுறையாக மந்திரவாதத்தில் ஈடுபட்டு, தன் குடும்பத்தில் அநேகர் பைத்தியங்களாக திரிந்து, வாழ்க்கையில் சந்தோஷத்தைக் காணாதவராக, இருந்தார். அவருக்கு பிறந்த ஆறு குழந்தைகளும் அடுத்தடுத்து, மரித்துப் போனது.
அவரும் அவருடைய மனைவியும் தற்கொலை தான் முடிவு என்று முடிவு செய்து அதற்கு ஆயத்தம் செய்த போது, கர்த்தர் “மகனே” என்று அவரை அழைத்து, தம்மை வெளிப்படுத்தி, அவரை தமது கனமான ஊழியத்திற்கு தெரிந்துக் கொண்டார்.
அவர் செய்த ஒவ்வொரு பிரசங்கங்களும் முத்தானவை.
ஆம் பிரியமானவர்களே,
உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கையை இழக்காதீர்கள். ஒரு பயங்கர
மந்திரவாதியை கர்த்தர் எடுத்து, அவருக்கென்று உபயோகிக்க கூடுமானால் உங்களை உபயோகிப்பது அவருக்கு லேசான காரியம்! நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முத்துக்கள் என்பது கர்த்தருக்குத் தெரியும்.
லேகியோன் பிசாசு பிடித்திருந்த ஒருவனுக்காக இயேசுகிறிஸ்து கலிலேயாவைக் கடந்து, கதரேனருடைய நாட்டிற்கு வந்து, அவனை சுகப்படுத்தி, அவனை கிறிஸ்துவின் அற்புதங்களை சொல்லும் ஊழியக்காரனாக மாற்றினார்,
அவர் ஒவ்வொரு ஆத்துமாவிற்காக கரிசனையுள்ள தேவன். “நான் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லதவன், என்னால் கர்த்தருக்கு என்ன செய்ய முடியும்” என்று நினைக்கிறீர்களா? அந்த லேகியோன் பிசாசு பிடித்திருந்த ஒருவனால் ஒரு பட்டணத்தை ஆதாயப்படுத்த முடியுமானால் (லூக்கா 8:39-40) எல்லா ஞானத்தோடும் உங்களை உருவாக்கின கர்த்தருக்கு உங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும்.
இயேசு கிறிஸ்துவுடன் உரையாடிய சமாரிய ஸ்திரீ வேறு ஒன்றும் செய்யவில்லை. அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளே போய், ஜனங்களை நோக்கி; நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்து தானோ என்றாள்.
நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர் மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள் (யோவான் 4:28,29,39). அவள் போய் மற்றவர்களுக்கு ‘வந்து பாருங்கள்’ என்று மட்டுமே கூறினாள்.
அதைப் போல உங்கள் சபைக்கு மற்றவர்களை வந்துப் பாருங்கள் என்று நீங்கள் அழைக்கலாம். அவர்கள் வந்து, ஜீவனுள்ள தேவனை அவர்களே அறிந்துக் கொள்வார்கள்.
ஆம், நம்முடைய வார்த்தையினிமித்தம் அநேகம் பேர் கர்த்தரை அறிந்து கொள்வார்கள்.
இப்படிப்பட்ட பரிசுத்த வாழ்க்கை வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.