சீஷர்கள் யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். யோவான் 20:19.
எனக்கு அன்பானவர்களே!
சமாதானத்தின் தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு மன்னனுக்கு மன சமாதானம் இல்லாமல் இருந்தது. குரு ஒருவர் ஊருக்கு வந்துள்ள தகவல் அறிந்து அவரைப் போய்ப் பார்த்தார்.
அவரிடம், தனக்கு வேண்டிய எல்லா செல்வமும் இருந்தும்,ஆட்சி சிறப்பாக நடந்தும் ,மக்கள் மகிழ்வுடன் இருந்தாலும், தனக்கு அளித்த மனச்சுமை அதிகமாகி நிம்மதியில்லாமல் இருப்பதாகக் கூறினார்.உடனே குரு,”ஒன்று செய்.உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு,”என்று சொல்ல,மன்னனும் சிறிது கூட யோசிக்காமல்,’
எடுத்துக் கொள்ளுங்கள் குருவே,”என்றார்.
குரு,”நாட்டை என்னிடம் கொடுத்து விட்டால்,நீ என்ன செய்வாய்?”என்று கேட்டார்.மன்னனும் எங்கோ ஏதேனும் வேலை கிடைத்தால் அதைப் பார்த்துப் பிழைத்துக் கொள்வேன் என்று சொன்னார்.
குரு தயங்காது,”எங்கோ ஏன் வேலை பார்க்க வேண்டும்? நீ என்னிடமே வேலை பார்க்கலாமே?என் சார்பில் என் நாட்டை நீ நிர்வகித்து வா.
ஆண்டுக்கு ஒருமுறை நான் வந்து கணக்கு வழக்குகளை நான் பார்த்துக் கொள்கிறேன்,”என்று சொல்ல மன்னனும் ஒத்துக் கொண்டார்.
ஒரு ஆண்டு கழித்து குரு அரண்மனைக்கு வந்து தனது நிர்வாகியான மன்னனைப் பார்த்து,”நாடு எப்படி இருக்கிறது?வரவு செலவு எல்லாம் எப்படி இருக்கிறது?நீ எப்படி இருக்கிறாய்?”என்று கேட்டார்.
மன்னனும்,”நாடு சுபிட்சமாக இருக்கிறது. நான் மிகுந்த மன சமாதானமாய் நிம்மதியுடன் இருக்கிறேன்.
இப்போது கணக்கு வழக்குகளைக் கொண்டு வந்து காட்டுகிறேன்,”என்று சொன்னார்.
குரு,”அதற்கு அவசியமில்லை. நீ எப்போதும் செய்த வேலையையே இப்போதும் செய்து வருகிறாய்.ஆனால் முன்னால் இந்த நாடு, ‘என்னுடையது’என்று நினைத்து வேலை செய்தாய் அதனால் உனக்கு நிம்மதியும், சமாதானமும் இல்லாமல் போனது.
இப்போது இன்னொருவரின் நாட்டை நாம் நிர்வாகம் மட்டுமே செய்கிறோம் என்ற நினைப்பு உன்னுடன் இருப்பதால் நிம்மதியாக இருக்கிறாய்.
இதே நினைவுடனேயே தொடர்ந்து நிர்வாகத்தை நடத்து,”என்று சொல்லி அவனை ஆசீர்வதித்து விடை பெற்றார் குரு.
வேதத்தில் பார்ப்போம்,
என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
யோவான் 16 :33.
இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
ரோமர் 5 :1.
கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன் கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
சங்கீதம் 29 :11.
பிரியமானவர்களே,
சமாதானம் என்றால் எபிரேய மொழியில் “ஷாலோம்” என்றும் கிரேக்கத்தில் ஐரீன் என்றும் அழைக்கப்படும் இவ் வார்த்தையானது வாழ்க்கையை சிக்கலில்லாமல் மனதை தூய்மையாய் காத்து உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க வாழ்தல் என்று அர்த்தம் தருகிறது.
ஒரு மனிதனுடைய வாழ்வில் சமாதானமும் இளைப்பாறுதலும் இல்லாமல் இருக்கும் போது, அந்த குடும்பத்தில் எப்போதும் பிரச்சனைகளும், சண்டைகளுமாகவே இருக்கும். எந்த ஒரு உயர்வும் அங்கு இருக்கவே இருக்காது.
தற்காலத்தில் அநேக குடும்பங்களுக்குள்ளாக ஒருமனம் இல்லாமல், சமாதானம் இல்லாமல் எப்போது பார்த்தாலும் எதாவது ஒரு பிரச்சனையோடு கூட வாழ்ந்து வருவார்கள். இதற்கு என்ன காரணம் என்று பார்க்கும் போது சமாதானத்தை கொடுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அங்கு இல்லாமல் இருப்பது தான் காரணம்.
இந்த உலகத்தில் மனிதன் எதை வேண்டுமானாலும் சம்பாதித்து விடலாம் ஆனால் சமாதானத்தை மட்டும் இயேசு கிறிஸ்து இல்லாமல் ஒரு போதும் சம்பாதித்துக் கொள்ளவே முடியாது.
மீகா தீர்க்கத்தரிசி, வரப்போகிற மேசியாவான ஆண்டவராகிய இயேசுவைக் குறித்து இவ்விதம் சொல்லியிருக்கிறார். ‘இவரே சமாதான காரணர்‘ இவரே சமாதானத்தின் ஊற்று, இயேசு இல்லாத இடத்தில் சமாதானம் இருக்காது.
இயேசுவின் ஆளுகை இல்லாத இடத்தில் சமாதானம் இருக்காது.
அநேகருடைய வீட்டில் ‘இயேசுவே இந்த வீட்டின் தலைவர்‘ என்ற வசனப்பலகை மாட்டப்பட்டிருக்கும். ஆனால் அங்கு நடப்பதற்கும் இயேசுவிற்கும் எந்த சம்பந்தமும் இருக்காதது
போல் நடந்துக் கொள்வார்கள்.
இயேசு ஒருவரே மெய்யான சமாதானத்தை நமக்குக் கொடுக்க வல்லவர். இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்பு கலங்கிப்போன சீஷர்களைப் பார்த்து சொன்ன வார்த்தையை பாருங்கள்:
“சாயங்கால வேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்கு பயந்ததினால் கதவுகள் பூட்டப்பட்டிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்” யோவான் 20:19. இயேசு ஒருவரே நமக்கு சமாதானத்தைக் கொடுக்கிறவர்.
“சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக”
யோவா 14:27. என்றார்.
இந்த சமாதானத்தின் தேவனாகிய கர்த்தர் தாமே நம்மோடு கூடவே இருந்து நம்மை காத்து வழிநடத்துவாராக.
ஆமென்.