Daily Manna 40

தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். யோவான் 19:26

எனக்கு அன்பானவர்களே!

‌ கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

மரியாளுக்கு தன் மகனாகிய இயேசுகிறிஸ்து மீது தாய்க்குரிய பாசம் இருக்கும். ஆனால் இயேசுகிறிஸ்து தான் பூமிக்கு வந்த நோக்கத்தை அறிந்துள்ளார். தனக்கு நிகழ வேண்டிய கொடுமைகளை தன் தாயாக வாழும் மரியாளால் தாங்க முடியாது என்பதை இயேசுகிறிஸ்து நன்கு அறிந்துள்ளார்.

இயேசுகிறிஸ்து தன்னை விட்டு பிரிவதை மரியாளால் ஏற்க முடியுமா? தன் மகன் தன் கண்முன் கொடூரமாக இறப்பதை ஒரு தாயால் தாங்க தான் முடியுமா? மரியாளை பெலவீனமாக்குவது எது? அவரது தாய்மை.?

இயேசு சிறு வயதில் இருக்கும் போது “அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள். அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கு அடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியதென்று நீங்கள் அறியீர்களா என்றார். தங்களுக்கு அவர் சொன்ன வார்த்தையை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை” – லூக்கா 2: 48,49,50

மரியாளால் இயேசுகிறிஸ்துவின் பிரிவை தாங்க முடியவில்லை. எப்படி இயேசுவின் சிலுவை மரணத்தை சகிக்க முடியும்.

தன் குழந்தை பருவம் முதலே மரியாளிடம் தான் யார் என்பதை இயேசுகிறிஸ்து உணர்த்துகிறார். ஆனால் தாய்மை மரியாளை பெலவீனப்படுத்துகிறது. ‘அம்மா’ என்ற சொல் மரியாளை இன்னும் அடிமைப்படுத்தும்.

சிலுவையில் சித்தரவதை அனுபவித்து உயிர் துறக்கும் நிலையில் உள்ள தன் மகனை காணும் போது மரியாளின் மனம் எப்படி நொருங்கியிருக்கும்!

அச்சமயத்தில் ‘அம்மா’ என்ற வார்த்தை இயேசு கிறிஸ்துவினிடம் இருந்து வந்தால் மரியாள் தாங்குவாரா?
இல்லை சிலுவைப் பாடுக்கு முன்பு வரை ‘அம்மா’ என்று அழைத்து விட்டு உயிர்த் துறக்கும் நேரத்தில் ‘ஸ்திரீயே’ என்றால் தான் மரியாள் தாங்குவாரா?

மரியாளை குறித்து விழிப்புடன் இயேசுகிறிஸ்து செயல்படுகிறார்.
தன் மீது மரியாள் கொண்டுள்ள தாய்ப்பாசத்தை அகற்ற முயலும் இயேசுகிறிஸ்து மகனுக்குரிய கடமைகளில் இருந்தும் பின்வாங்கவில்லை.

தான் இறக்கும் தருவாயிலும் ஏழை விதவை தாய்க்கு தன் நண்பனை மகனாக விட்டு செல்கிறார்.
“இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்று கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.

பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக் கொண்டான்” – யோவான் 19:25,26

யோவானைப் பார்த்து, “அதோ, உன் தாய்” என்று சொன்னார். யோவானுக்கு புதிய உறவு கொடுக்கப்பட்டது. அந்தப் புதிய உறவோடு புதிய பொறுப்புகளும் அவனோடு இணைந்து கொண்டது. இன்றைக்கு அநேகர் உறவுகளை விரும்புகிறார்கள். ஆனால், பொறுப்புகளை விரும்புகிறதில்லை.

வேதத்தில் பார்ப்போம்,

அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.
யோவான் 19:26

பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார் அந்நேரத்தில் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக் கொண்டான்.
யோவான் 19:27

உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.
எபேசியர் 6 :3.

பிரியமானவர்களே,

ஆண்டவரின் அன்பின் சீடன் என அழைக்கப்பட்ட யோவான் ஆண்டவரை அதிகமாக நேசித்தவர், ஆண்டவராலே அதிகமாக நேசிக்கப்பட்டவர். ஆண்டவருடைய மார்பிலே சாய்ந்து கொண்டவர். அவ்வளவு நெருக்கமாக அவரை அன்புகூர்ந்த சீஷனாயிருந்தான்.

ஆண்டவரிடத்தில் ஏதாவது கேள்விகள் கேட்க வேண்டுமென்றால் மற்ற சீடர்கள் யோவானிடத்தில் அணுகுவார்கள். அப்படிப்பட்ட வாய்ப்பைப் பெற்றவர் தான் யோவான்.

இந்த யோவான் தான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சிலுவையிலே தொங்கிக் கொண்டிருக்கும் பொழுது, மற்றவர்களோடு அவனும் சிலுவையண்டையில் நின்று கொண்டிருந்தான். ஆண்டவருடைய கோரக் காட்சியைப் பார்த்து கலங்கிக கொண்டிருந்தான்.

“அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேர முதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக் கொண்டான்” யோவான் 19:26,27. இப்படிச் சொன்னவுடனே மரியாளை யோவான் தனது தாயாக உடனடியாக ஏற்றுக் கொண்டதை நாம் இந்த வேதபகுதியிலே வாசிக்கின்றோம்.

அருமையானவர்களே, இயேசுவின் அன்பின் சீடனான யோவானுக்கு இந்த சிலுவை எப்படிப்பட்ட இடமாகக் காணப்பட்டது என்பதை விளக்கிக் காட்டுகிறது.

முதலாவதாக இந்த சிலுவை என்பது கீழ்ப் படிதலின் இடமாகும். யோவான் 19:27- வது வசனம்: “பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக் கொண்டான்”. ‘அந்நேரமுதல்’ என்கிற வார்த்தை இந்த இடத்தில் முக்கியமானதாகும்.

அந்த நிமிடத்திலே அந்த மரியாளை தன்னுடைய சொந்த தாயாக ஏற்றுக் கொண்டு பராமரிக்கும் பொறுப்பை ஏற்றான் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. சிலுவை என்பது கீழ்ப்படிதலின் இடமாகும். கீழ்ப்படிதல் இல்லாமல் தேவனிடத்திலே நாம் ஆசீர்வாதங்களைப் பெற முடியாது.

ஆண்டவராகிய இயேசுவானவர் நம்மிடத்திலே கீழ்ப்படிதலை விரும்புகிறார். அவர் நம்மைக் கீழ்ப்படிய அழைக்கிறார். நாம் கீழ்ப்படிய இடங்கொடுக்கும் போது, அல்லது ஒப்புக் கொடுக்கும் போது ஏராளமான ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம். நம்மைக் குறித்த தேவனுடைய திட்டம் நிறைவேற ஆரம்பிக்கின்றது.

சிலுவை என்பது உண்மையாகவே பொறுப்புகளை நமக்குத் தருகிற இடமாகும். இன்றைக்கு அநேகர் உறவுகளை ஏற்றுக் கொள்ள ஆசிக்கிறார்கள். உறவுகளைத் தேட விரும்புகிறார்கள். ஆனால், இந்த இடத்திலே உறவுகளைத் தேடுகிற, விரும்புகிற மக்களுக்கு ஆண்டவர் பொறுப்புகளைக் கொடுக்கிறார்.

மட்டுமல்ல, அந்தப் பொறுப்புகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார். யோவானைப் பார்த்து, “அதோ, உன் தாய்” என்று சொன்னார். யோவானுக்கு புதிய உறவு கொடுக்கப்பட்டது. அந்தப் புதிய உறவோடு புதிய பொறுப்புகளும் அவரோடு இணைந்து கொண்டது. இன்றைக்கு அநேகர் உறவுகளை விரும்புகிறார்கள். ஆனால், பொறுப்புகளை விரும்புகிறதில்லை.

சிலுவை என்பது கீழ்ப்படிதலின் இடமாகும். கீழ்ப்படிதல் இல்லாமல் தேவனிடத்திலே நாம் ஆசீர்வாதங்களைப் பெற முடியாது.

ஆண்டவராகிய இயேசுவின் சிலுவை அண்டையிலே வந்து பாருங்கள், அவருடைய பார்வையோடு இந்த உலகத்தை நீங்கள் கண்ணோக்கிப் பார்ப்பீர்களானால், அன்புகூருவதற்கு ஏராளமான மக்கள் இருக்கிறார்கள்.

அநேக குடும்பங்களிலே தங்களுக்குப் பிரியமானவர்களை இழக்கக் கொடுத்திருக்கிறார்கள். அநேக பெற்றோர்கள் தங்கள் பிரியமான பிள்ளைகளை இழந்திருக்கிறார்கள்.

அநேக வீடுகளிலே தங்களுடைய பிள்ளைகளை உறவினர்களை விபத்திலே இழந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட மக்களுக்கு அன்புகூறவும், ஆறுதல் கூறவும் ஆண்டவர் நம்மை அழைக்கிறார்.

ஆகவேதான், சிலுவை என்பது உண்மையாகவே அன்புகூருகிற இடம் மாத்திரமல்ல, ஆறுதலைக் கொடுக்கிற இடம் மாத்திரமல்ல, அன்புகூருகிற நபர்களைப் பெற்றுக் கொள்ளுகிற இடமாகவும் மாறுகிறது.

நாமும் கர்த்தர் நமக்கு தருகிற பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *