Daily Manna 43

திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். மத்தேயு :21 :9

எனக்கு அன்பானவர்களே!

தாவீதின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.🌿

கி.பி. எட்டாம் நூற்றாண்டின் இத்தாலி நாட்டில் தியோடல்ப் (Theodulph) எனும் ஒரு வாலிபன் இருந்தார். அவர் இள வயதிலேயே துறவிகள் மடத்தில் சேர்ந்து, சிறந்த பணியாற்றி வந்தார். நல்ல கல்வியறிவும், மடத்தை நல்ல முறையில் நடத்தும் திறமையும் உடையவராதலால் வெகு சீக்கிரத்தில் அவர் மடத்தின் தலைவரானார்.

அக்காலத்தில் மடங்களிலும், திருச்சபையிலும் குழப்பங்களும், சண்டை சச்சரவுகளும் உண்டாவது வழக்கமாய் இருந்தது.பக்தன் தியோடல்ப் இக்குழப்பங்களைத் திறமையுடன் சமாளித்து, மடத்தைச் சுற்றியுள்ள மக்களைச் சமாதானமாக வாழச் செய்தார்.

இவரது சிறந்த அறிவையும், பக்தியையும், திறமையையும் கேள்வியுற்ற பிரான்ஸ் நாட்டு சக்கரவர்த்தியான சார்லிமாக்னே (Emperor Charlemagne) என்பவர் தியோடல்பை ஆர்லியன்ஸ் நகரத்தின் அத்தியட்சராக நியமித்தார்.

மத்திய காலத்தில் (Middle ages) மத குருக்களிடம் மட்டுமே கல்வியறிவு பெருகியிருந்தது. பொதுமக்களில் பெரும்பாலானோர் கல்வியறிவு இல்லாதவர். ஆதலின், அரசியல் விஷயங்களில் மத குருக்களும், தலைவர்களும் அதிகமாகத் தலையிடும் வாய்ப்பு இருந்தது.

தியோடல்பை ஆதரித்த சார்லி மாக்னே மன்னன் இறந்த பின், அவரது புதல்வரான லூயி அரசன் (Louis the Pious) ஆட்சி புரிந்தார். ஆட்சியில் அவருக்குப் பல தொந்தரவுகள் நேரிட்டன. தியோடல்ப் அத்தியட்சரிடம் பொறாமை கொண்ட பலர் அரசனிடம் சென்று, அவர் ராஜ துரோகியென்றும், அவராலே தான் அரசனுக்குத் தொந்தரவுகள் உண்டாயின என்றும் பொய்ப்புகார் செய்தனர்.

அரசன் கோபமூண்டு, தியோடல்பை ஆங்கர்ஸ் நகரத்தில் சிறையிலடைத்தார். அவர் மூன்று ஆண்டுகள் சிறையில் அவதிப்பட்டார். இந்த நேரத்தை அவர் வேத ஆராய்ச்சியிலும், பாடல்கள் எழுதுவதிலும் செலவிட்டார்.

கி.பி. 821ம் ஆண்டு, குருத்தோலை ஞாயிறன்று, லூயி அரசன் ஆங்கர்ஸ் நகரத்துக்கு வந்திருந்தார். வழக்கம் போல அரசன் தன் பரிவாரங்களோடும், மத குருக்களோடும் காலையில் குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு ஆலயத்துக்குப் பவனி சென்றார்.

தியோடல்ப் அடைபட்டிருந்த சிறை வழியாகப் பவனி செல்லும் போது, இத் தினத்திற்காக ஏற்கெனவே அத்தியட்சர் எழுதி வைத்திருந்த, ‘ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே’ என்ற பாடலை சிறைக் கம்பிகளுக்குள் நின்று உரத்த சத்தமாய்ப் பாடினார்.

இதைக் கேட்ட அரசனும் பரிவாரங்களும் அமைதியாகப் பாட்டு முடியும் வரை நின்றனர்.பாட்டு முடிந்தவுடன் அரசன், ‘இப்பாடலை எழுதிய அத்தியட்சர் ராஜ துரோகியல்ல, இவரை விடுதலை செய்யுங்கள்’ என்று கட்டளையிட்டு, அவரை முன் போல ஆர்லியன்ஸ் நகரத்தின் அத்தியட்சராக நியமித்தார்.

மேலும், ஒவ்வொரு குருத்தோலை ஞாயிறன்றும் இப்பாடல் அந்நாட்டின் ஆலயங்களிலெல்லாம் பாடப்பட வேண்டுமென்றும் கட்டளையிட்டார்.
இப்பாடல் முதலில் லத்தீன் மொழியில் எழுதப்பட்டது.

1842ல் ஜான் மேசன் நீல் (John Mason Neale) என்பவரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, பின்னர் தமிழ் உட்பட ஏராளமான பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, இன்று உலகமெங்கும் குருத்தோலை ஞாயிறன்று இப்பாடலை பாடப்படுகிறது என்பதை அறிவோம்!

வேதத்தில் பார்ப்போம்,

🌿குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு, அவருக்கு எதிர் கொண்டு போகும் படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்.
யோவான் 12 :13.

🌿கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
மாற்கு 11 :10.

🌿சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின் மேலும் கழுதைக் குட்டியாகிய மறியின் மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.
சகரியா 9 :9.

பிரியமானவர்களே,

ஓசன்னா” என்ற சொல்லுக்கு “இரட்சியும்” அல்லது “இப்பொழுது உதவிச் செய்யும்” என்று அர்த்தமாகும்.

இஸ்ரவேல் ஜனங்கள் கூடாரப் பண்டிகையை வருடந்தோறும் ஆசரிக்கும் போது, கைகளிலே குருத்தோலைகளைப் பிடித்தவர்களாய், பலிபீடத்தை ஒரு நாளுக்கு ஒரு முறைவீதம் மொத்தம் ஏழு நாட்கள் சுற்றி வருவதுண்டு.

எட்டாவது நாள் பெரிய ஓசன்னா நாம்! அந்த நாளில் மட்டும் ஏழு முறை “ஓசன்னா” என்று ஆர்ப்பரித்து, மிகுந்த உற்சாகத்தோடு சுற்றி வருவார்கள்.

ஆண்டவரை அன்றைக்கு இரட்சிக்கும்படி கூப்பிட்ட அந்த ஜனங்களைப் போல நாமும் இந்த நாளிலே கூப்பிடுவோமா? அப்படி அவரை நோக்கி கூப்பிடும் போது அவர் நிச்சயமாகவே நம்மை விடுவிப்பார்.

நம்முடைய பிரச்சனை பெரிதாக இருக்கலாம்! அல்லது போராட்டங்கள் பெரிதாக இருக்கலாம்! ஒருவேளை கண்ணீரோடு இருக்கலாம்! எனக்கு உதவி செய்ய யாருமே இல்லையே என்று இருக்கலாம்!
இந்த நேரத்தில் இயேசு உங்களுக்காக வருகிறார்.

பிரியமானவர்களே, நீங்கள் அவரை நோக்கி பார்த்து ஓசன்னா என்று சொல்லி , அவரை நோக்கி பார்க்கும் போது அவர் நிச்சயமாகவே உங்களை விடுவிக்க வல்லவராகவே இருக்கிறார்.

” வாயுள்ள பிள்ளை பிழைக்கும்” என்று சொல்லி நம் ஊரில் ஒரு பழமொழி உண்டு. வேத வசனம் சொல்லுகிறது உன் வாயை விரிவாய் திற அதை நன்மையினால் நிரப்புவேன் ஆண்டவர் உங்களை நன்மையினால் நிரப்ப விரும்புகிறார்.
ஆனால் நீங்கள் கேட்கும் போது மட்டுமே.

அவரிடத்தில் கேட்கிற எவனும் பெற்றுக் கொள்கிறான் ஆமென்! .
நீங்கள் இந்த நாளில் “ஓசன்னா”, “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என்று சொல்லி ஆர்ப்பரியுங்கள்.

நாம் ஒருமனப்பட்டு நம் ஆண்டவரை ஆராதிப்போம் அவரை இருதயத்தில் கூப்பிடுவோம் ஆண்டவர் நம்முடைய நிலைகளை அறிந்து இருக்கிறார்.

எனக்கு உதவி செய்யும் என்று நாம் கேட்கும் போது அவர் நிச்சயமாகவே நமக்கு செவிகொடுத்து, நம்மை
விடுவிக்க வல்லவராயிருக்கிறார்.

இஸ்ரவேல் ஜனங்களின் ஆர்ப்பரிப்பினால் எரிகோ கோட்டை தகர்க்கப்பட்டது போல, நமது தேவனை துதிக்கும் சத்தத்தினால் நமது தடைகள் நீங்கி ஆசீர்வாதங்களை இந்த பரிசுத்த நாளில் பெற்றுக் கொள்ளலாம்.

கர்த்தர் தாமே இந்த ஓய்வு நாளில் அவரை துதிக்கும் சத்தத்தை நம் வாழ்வில் பெருகச் செய்து பரலோக வாழ்வுக்கு நேராக நம்மை தகுதிப்படுத்துவாராக

ஆமென்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *