இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? ஏசாயா 43 : 19
எனக்கு அன்பானவர்களே!
ஆசீர்வாதத்தின் ஊற்றும் உறைவிடமும் காரணருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு முறை புத்தர் தன் சீடர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருவர் அவர்களைக் கடந்து சென்றனர்.
அதில் ஒருவன் “அந்த காலத்தில் நான் எப்படி இருந்தேன் தெரியுமா? இனி என் வாழ்க்கையில் அந்த வசந்த காலம் வருமா தெரியவில்லையே “ என்று வருத்தப்பட்டுக் சொன்னான்.
இது அவரின் காதில் விழுந்தது. அப்போது புத்தர் சீடர்களிடம் “ மனிதனின் வாழ்நாள் எவ்வளவு தெரியுமா?’ என கேள்வி கேட்டார். ஒரு சீடர் அறுபது ஆண்டு என்றார். இன்னொருவரோ அதெப்படி சிலர் எழுபது எண்பது ஆண்டுகள் கூட இருக்கிறார்களே என்று மறுத்தார்.
இப்படி ஆளாளுக்கு பதில் சொல்ல புத்தர் இடைமறித்தார்.
“மனிதர்கள் தற்போது எப்படி வாழ்கிறார்கள் தெரியுமா? சிலர் கடந்த காலத்தை சிந்தித்து கவலையில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.
சிலர் எதிர்காலம் குறிந்த கற்பனையில் ஏங்கித் தவிக்கிறார்கள். அதனால் நிகழ் காலத்தை இழந்து விடுகிறார்கள்.
நிகழ்காலத்தில் விழிப்புடன் இருப்பவனே நிறைவுடன் வாழ்கிறான். நிகழ்காலமே அவன் வாழும் காலம் “ என்றார்.
மனித வாழ்க்கை வலிகள் நிறைந்தது மட்டுமல்ல, அனேக வழிகளும் நிறைந்தது!
ஆனால் ஆண்டவர் நம்மோடு உடனிருப்பதை உணர்ந்து விட்டால் வழிகளை எளிதாக கண்டுபிடித்து விடலாம் தடைகளையும் தாண்டி விடலாம்!
வேதத்தில் பார்ப்போம்,
வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப் போல செழிக்கும்.
ஏசாயா 35 :1.
தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 136 :16.
இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
ஏசாயா: 43 :19
பிரியமானவர்களே,
நம்முடைய கர்த்தர் சகலவற்றையும் புதிதாக்குகிறவர். நம்முடைய ஆண்டவர் செய்கிற ஒவ்வொரு காரியமும் எப்போதும் புதிதாகவும், ஆச்சரியமானதாகவும் இருக்கும். ஆகவே தான் அவர் சொல்லுகிறார் நான் வனாந்தரத்தில் வழியையும் அவாந்தரவெளியில் ஆறுகளையும் உண்டாக்குவேன் என்று.
பொதுவாக வனாந்தரத்தினுடைய மிகக் கொடுமையான காரியம், வழியை ஓரிடத்திலும் நாம் எங்கும் காண முடியாது. எங்கு பார்த்தாலும் வெறுமையாகவே இருக்கும். நீங்கள் வனாந்தரத்திற்குள்ளே நுழைந்து விட்டீர்கள் என்றால் எவ்வழியில் வந்தோம், எந்த பக்கமாக செல்ல வேண்டும் என்று நீங்கள் பிரயாசப்பட்டாலும், உங்களால் அறியவே முடியாது. அதுதான் வனாந்தரத்தின் பரிதாபமான நிலைமை.
அதைப்போல கடந்த ஆண்டு உங்கள் வாழ்க்கை ஒரு வனாந்தரமாக இருந்திருக்கலாம். இந்த நாளிலே அதே வனாந்தரத்தில் கர்த்தர் உங்களுக்காக ஒரு வழியை உருவாக்குவார். கர்த்தருடைய வாக்குத்தத்தத்தை மனப்பூர்வமாய் விசுவாசியுங்கள்.
அவ்வண்ணமாக கர்த்தர் உங்களுக்கு கூறுகிற மற்றொரு வார்த்தை அவாந்திர வெளியிலே ஆறுகளை உண்டாக்குவேன். அவாந்தரவெளி என்றால் வெட்டவெளி. நீங்கள் அனைவரும் அறிந்தபடி வெட்டவெளி என்றாலே தண்ணீரற்ற வறண்ட பகுதி.
ஆனால் கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார் அந்த வனாந்தரத்திலும் அவரால் உங்களுக்காக ஆறுகளை உண்டாக்க முடியும். அன்றைக்கு ஏதோம் வனாந்தரத்தில் வாய்க்கால்களை வெட்ட வைத்து
(2 ராஜாக்கள் 3:8,17) ராஜாக்கள் முதல் மிருக ஜீவன்கள் வரைக்கும் தண்ணீர் பருக வைத்த நம்முடைய கர்த்தர், இன்றைக்கும் ஜீவிக்கிறார்.
அவரே உங்கள் வனாந்தரத்தை தண்ணீர் தடாகமாக மாற்றுவார். மேலும், இந்த நாளிலும் அவர் உங்களுக்கு செய்யப் போகும் புதிய ஆசீர்வாதங்களை ஜெபத்தோடு விசுவாசியுங்கள்.
கர்த்தர் தாமே இந்த ஓய்வு நாளில் புதிய ஆசீர்வாதங்களை தந்து, புதிய வாழ்வுக்கு நேராக நம்மை அழைத்துச் செல்வாராக.
ஆமென்.