ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு. தானியேல்: 9:10
எனக்கு அன்பானவர்களே!
அன்பின் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஆலயம் ஒன்றில் அன்பான போதகர் ஒருவர் இருந்தார். அவரிடம் ஒரு மனிதன் வந்து தங்கினான். அவன் ஒரு திருடன் என்று அவர் அறிந்த பொழுதும், அவனுக்கு சகல உதவியும் செய்து கொடுத்து அவனை அன்புடன் நடத்தினார் .
அவனோ நன்றி கெட்டவனாக ஆலயத்திலிருந்த இரண்டு வெள்ளிப் பொருட்களை திருடிக் கொண்டு ஓடி மறைந்து விட்டான். அதை அவன் விற்பதற்கு துணிந்த பொழுது, காவலர்கள் அவனை சந்தேகப்பட்டு பிடித்து,
அது ஆலயத்திலிருந்து திருடப்பட்டது என்று கண்டுபிடித்து, போதகரிடம் அவனை அழைத்து வந்தார்கள். போதகரோ, அவர்கள் கேட்ட பொழுது, அவனை அவர்களிடம் காட்டிக் கொடுக்காமல், “நான் தான் இதை அவனுக்கு கொடுத்தேன்” என்று சொல்லி அவனை தப்புவித்தார்.
போதகரின் அன்பு, அந்த திருடனின் மனதை உடைத்தது. அன்றுமுதல், கீழ்த்தரமான திருட்டுத் தொழிலை அவன் விட்டுவிட்டு, உண்மையான மனிதனாக போதகரிடமே தங்கி உழைத்து வந்தான்.
அன்பு திரளான பாவங்களை மூடும் என்று வேதத்தில் பார்க்கிறோம்.
நாம் தேவனுடைய அன்பால் நிரப்பப்பட்டது உண்மையானால், நாம் பிறரின் தப்பிதங்களை அவர்களுக்கு மன்னித்து ஆண்டவருக்கு பிரியமான ஒரு வாழ்க்கையை வாழ்வோம்.
ஏனென்றால், “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்” யோவான் 13:35 என்று ஆண்டவர் கூறுகிறார்.
வேதத்தில் பார்ப்போம்,
மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.
நீதிமொழி: 19 :11.
நியாயஞ் செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்து பார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன்.
எரேமியா: 5 :1.
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
மத்தேயு 6 :14.
பிரியமானவர்களே,
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் அன்பிற்காக ஏங்குகின்றனர். நாம் பிறரை நேசிப்பதற்கும், பிறரால் நேசிக்கப்படுவதற்கும் பிறந்தவர்கள்.
ஆனால், அன்பற்ற சூழ்நிலையை பிசாசு நம் மத்தியில் உருவாக்குகிறான். அன்பை குறித்து நாம் வேதத்தில் இப்படியாக வாசிக்கிறோம், “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை;
அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.
சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது.
தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்”
1 கொரி13:4-8. என்று அன்பைக் குறித்து அநேக காரியங்களை கூறுகிறது.
அன்பு ஒருநாளும் ஒழியாது, அது மாறாது. ஆண்டவரை அறியாத ஜனங்களை ஆண்டவரிடமாய் கொண்டு வரும் படிக்கு, இந்த அன்பை நீங்கள் உலகுக்குக் காண்பியுங்கள். நிபந்தனையின்றி அயலகத்தாரை நேசியுங்கள். மன்னிப்பு தேவைப்படும் ஒருவரிடத்தில் தெய்வீக அன்பைக் காட்டுங்கள்.
மன்னிப்பு என்பது இயேசு கிறிஸ்துவின் குணாதிசயத்தை பிரதிபலிக்கிறது. அது தேவையற்ற வலி மற்றும் குற்ற உணர்ச்சியிலிருந்து உங்களை விடுவித்து புது வாழ்வை அளிக்கும்.
இத்தகைய புதுவாழ்வை பெற்று வளமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.