அந்தகாரத்திலும் மரண இருளிலுமிருந்து அவர்களை வெளிப்படப்பண்ணி, அவர்கள் கட்டுகளை அறுத்தார். சங்கீதம்:107 :14
எனக்கு அன்பானவர்களே!
நம்மை மீட்டெடுத்த அன்பின் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
குட்டியானை ஒன்று பாகன் வெட்டி வைத்த குழியில் அகப்பட்டுக் கொண்டது. அவன் அதைக் கட்டி இழுத்துச் சென்று தன் வீட்டில் ஒரு தூணில் இரும்பு சங்கிலியால் கட்டி வைத்தான்.
யானைக்குட்டி தன்னை விடுவித்துக் கொள்ள எவ்வளவோ போராடிப் பார்த்தது.
ஆனால், சங்கிலி அதன் காலை அறுத்துப் புண்ணாக்கி விட்டது. பாகன் சிரித்தபடி சொன்னான், “இனிமேல் நீ என் அடிமை. உன்னால் தப்பவே முடியாது”. குட்டி யானைக்கு அவன் சொன்னது உண்மையென்றே பட்டது.
தப்பிச் செல்லும் முயற்சியைக் கைவிட்டு அடிமை வாழ்வு வாழப் பழகியது. தினமும் பாகன் அந்த சங்கிலியை சுட்டிக்காட்டி, “நீ என்னுடைய அடிமை. உன்னால் தப்பவே முடியாது” என்பதையே சொல்லி வந்தான்.
குட்டியும் அதை முழுமையாக நம்பியது. நாட்கள் ஓடின. குட்டி வளர்ந்து பெரிய யானையானது. அப்போதும் பாகன் அதே வார்த்தைகளை தினமும் சொல்ல அது இன்னும் அடிமையாகவே வாழ்ந்து வந்தது. தப்பிச் செல்ல முயலவே இல்லை.
ஒரு நாள் பாகன் வீட்டில் இல்லாத நேரம், கயிற்றை அறுத்துக் கொண்டு மாடு ஒன்று வேகமாக ஓடி வந்து யானை இருந்த இடத்திற்குள் புகுந்தது. நீண்ட தூரம் ஓடிவந்த களைப்பும், பசியும் அந்த மாட்டை வாட்டியது.
ஏதாவது கிடைக்குமா? என்று தேடி யானை கட்டிக் கிடந்த இடத்திற்கு வந்து விட்டது.
யானைக்கு முன்பாகக் கிடந்த புற்களையும் , பச்சை ஓலைகளையும் ஏக்கமாய்ப் பார்த்தது. யானைக்கு அருகே செல்லவும் பயம். மாட்டின் முகத்தில் தெரிந்த பசியை யானை புரிந்து கொண்டது.
“சும்மா பயப்படாம கிட்டே வா” என்று கூறி கொஞ்சம் ஓலைகளை அதற்கு முன்பாகப் போட்டது. மாடு வயிறார சாப்பிட்டது. நன்றியுடன் யானையைப் பார்த்துக் கேட்டது, “இவ்ளோ நல்லவனா இருக்கியே, நீ இங்கே என்ன பண்ற? காடு தானே உன் வீடு. அதை விட்டுட்டு இங்கே எதுக்காக இருக்கே?” என்றது.
இதைக் கேட்டதும் யானைக்கு அழுகை வந்துவிட்டது. அது இதுவரை அன்பான சொற்களைக் கேட்டதே இல்லை. காலில் கிடந்த சங்கிலியைக் காட்டிச் சொன்னது, “இந்த சங்கிலி என்னை எங்கேயுமே போக விடாது. இன்னிக்கு காலைல கூட பாகன், நீ ஒரு அடிமை , உன்னால் தப்பவே முடியாதுன்னு சொல்லிட்டு தான் வெளியே போனான்.
மீறி நான் இழுத்தால் ரத்தந்தான் வரும் ” என்றது.
இதைக் கேட்டதும் மாடு சிரித்து விட்டது.
“அட ஏமாளியே! இதுதானா உன் பிரச்சினை? என்னைப் பார். உன் உடம்புல பத்தில் ஒரு பங்கு கூட இருக்க மாட்டேன். ஆனா நானே இவ்வளவு மொத்தக் கயிற்றை அறுத்துக்கிட்டு ஓடி வந்துருக்கேன்.
நீ சின்ன வயசுல கட்டின தம்மாத்தூண்டு சங்கிலிக்கு பயப்படுறியே! நல்லாப் புடிச்சி ஒரு இழு இழு ” என்றது. அதைக் கேட்டதும் யானைக்கு கொஞ்சம் பயம் தெளிந்தது. சரி, இழுத்து தான் பாப்போமே என்று இழுத்த அடுத்த நொடியே சங்கிலி நொறுங்கி விழுந்தது.
அடடா விடுதலை! உற்சாகமாகக் காடு நோக்கி ஓடியது. அந்த நேரத்தில் வெளியே போயிருந்த பாகன் ஓடி வந்தான், “உன்னால தப்பிக்க முடியாது. நீ ஒரு அடிமை” என்று கத்தினான். அந்த வார்த்தை கேட்டதும் யானை உறைந்து போய் அப்படியே நின்றது.
மாடு சொன்னது, “அவன் பொய்யன். அவன் வார்த்தையைக் கேட்காதே. நீ இனி யாருக்கும் அடிமையில்லை. “ஓடு ஓடு” என்றது. யானை ஓடியது. குறுக்கே வந்து தடுத்த பாகனைத் தூக்கி எறிந்து விட்டு ஓடிக் காட்டுக்குள் மறைந்து போனது.
இதைப் போன்று தான் பிசாசானவனும் நம்மை பலவிதமான பொய்யான வார்த்தைகளை சொல்லி பயம் என்னும் சங்கிலியால் கட்டி வைத்திருக்கிறான்.
வேதத்தில் பார்ப்போம்,
ஜீவகாலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார்.
எபிரேயர் 2:15
இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து உன் கட்டுகளை அறுப்பேன்.
நாகூம் 1 :13.
உன் மீறுதல்களை மேகத்தைப் போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக் கொண்டேன்.
ஏசாயா 44:22
பிரியமானவர்களே,
நம் அன்பான இயேசு கிறிஸ்துவின் மரணம் இந்த மனுக்குலத்திற்கே கிடைத்த பெரிய நன்மையும், ஆசீர்வாதமுமாகும்.
கிறிஸ்து நமக்காக சாபமாகி, சாபத்தில் இருந்து நம்மை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டார் என வேதத்தில் ( கலாத்தியர்:3:13 )-ல் பார்க்கிறோம்.
உங்களுக்காகவும், எனக்காகவும் சிலுவையில் சாபமானார். இயேசு நம்முடைய பாவங்களுக்குரிய தண்டனைகளை தன்மேல் ஏற்றுக் கொண்டார்.
எனக்கு அருமையானவர்களே
உங்கள் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சினைகளால் துவண்டு போய் வாழ்க்கையே வெறுப்பாக உள்ளதா? தற்கொலை செய்து மடிந்து விடலாம் என நினைக்கிறீர்களா? பயப்படாதீர்கள் நீங்கள் ஆசீர்வாதமாய் வாழ்வதற்காகவே இயேசு உங்களுக்காக மரித்தார்.
உங்களுக்கு புதுவாழ்வு கொடுத்து உங்களை ஆசீர்வதிக்க இயேசு விரும்புகிறார். அவரிடம் வாருங்கள். இயேசுவே நீர் எனக்காக மரித்தீர், என் பாவங்களை சுமந்தீர் என் சாபங்களை சுமந்து தீர்த்து விட்டீர் என நான் நம்புகிறேன் என்று அவரிடம் நம்பிக்கையோடு வாய் திறந்து சொல்லுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை காண்பீர்கள்.
இயேசு கிறிஸ்துவின் ரத்தத்தால் மீட்கப்பட்ட நாம் பாவங்களுக்கும் , சாபங்களுக்கும் எப்போதோ நீங்கலாக்கப்பட்டு விட்டோம். ஆனாலும் பிசாசு நம் பழைய பாவங்களைச் சொல்லி சொல்லி நம்மை அடிமையாகவே வைத்திருக்கப் பார்ப்பான்.
இயேசுவுக்கு நம் பாவங்களையும், நாம் படுகிற வேதனையும் நன்கு தெரியும். இருந்த போதிலும் அவர் நம்மைப் பெயர் சொல்லி அழைக்கிறார்.
தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர், என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்.
ஏசாயா 38 :17
அவர் நம் பாவங்களை முதுகுக்கு பின்பாக எறிந்து விட்டார். அடிமைத்தனத்திலிருந்து நம்மை மீட்டெடுத்து விட்டார் என்பதை நாம் அறிக்கை செய்வோம். அப்போது நம் வாழ்வில் பெரிய மாற்றத்தை காண்போம் என்பதில் சந்தேகமில்லை.
இப்படிப்பட்ட புதிய மாற்றங்களை கண்டு கர்த்தருக்கு நன்றிபலிகள் செலுத்த கர்த்தர் தாமே நம் யாவருக்கும் கிருபை செய்வாராக.
ஆமென்.