பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நான் உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான். யோவான்: 13 :37
எனக்கு அன்பானவர்களே!
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்
இயேசுவின் பன்னிரெண்டு சீடருள் முதன்மையான இடத்தை சீமோன் பேதுரு பெற்றிருந்தார். சீமோன் என்றால் “செவிகொடுப்பவர்” என்று அர்த்தம்.
ஆனால் சீமோனோ தனக்கு எல்லோரும் செவிகொடுக்க வேண்டும் என்று வாழ்ந்து வந்தார்.
இயேசு சீமோனைக் கண்டு, “யோனாவின் மகனாகிய சீமோனே, நீ கேபா எனப்படுவாய்”.
கேபா என்றால் அரமேய மொழியில் “பாறை”, “கல்” என்று பொருள்படும்.
கிரேக்கத்தில் “பத்ரோஸ் – Petros” என்றும், இலத்தீனில் “பத்ரூஸ்-Petrus” என்றும், ஆங்கிலத்தில் பீட்டர் என்றும், தமிழில் பேதுரு அல்லது இராயப்பர் என்றும் அழைக்கப்படுகிறார்.
சீமோன் ஆத்திர குணமுள்ளவனும், அவசர பேச்சாளனுமாயிருந்தார். பிற்காலங்களில் இந்த குணங்கள் நீக்கப்பட்டு உறுதியான பாறையைப் போலிருப்பான், என்று அறிந்தவராய் இயேசு அவருக்கு அந்தப் பெயரை வழங்கினார்.
பின்பு ஒருநாள் கலிலேயாக் கடலில் பேதுரு இரவு முழுவதும் முயன்றும் ஒரு மீனும் அகப்படாத நிலையில் இயேசுவின் குரலுக்கு இணங்கி ஆழத்தில் வலையை போட்டு வலை கிழியும் அளவிற்கு மீன்களை பிடித்தார்.
அப்பொழுது இயேசு, “பயப்படாதே ! இது முதல் நீ மனிதரைப் பிடிக்கிறவனாய் இருப்பாய்” என்று பேதுருவுக்கு ஒரு சிறப்பான அழைப்பை விடுத்தார். பேதுரு உடனே கீழ்படிந்து எல்லாவற்றையும் விட்டு விட்டு அவரை பின்பற்றினார்.
ஆனால் இயேசு அழைத்த அழைப்பையும் மறந்து,தன் உயிருக்கு பயந்து இயேசுவை மூன்று முறை மறுதலித்து சபிக்கவும் சத்தியம் பண்ணவும் தொடங்கினார். உடனே சேவல் கூவிற்று,
இயேசு சொன்ன வார்த்தையைப் பேதுரு நினைவு கூர்ந்து, மனங்கசந்து மிகவும் அழுதார்.இயேசுவின் சிலுவை மரணமும், தமது மறுதலிப்பும் பேதுருவை மிகவும் பாதித்தது. இதை அன்பின் ரட்சகர் கண்டார். பின்னாளில் ஆண்டவரின் பணிகளை செய்து கர்த்தருக்காக வாழ்ந்தார் என்று பார்க்கிறோம்.
வேதத்தில் பார்ப்போம்,
சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
மத்தேயு :16 :16.
அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைத்துக் கொண்டு, வெளியே போய், மனங்கசந்து அழுதான்.
மத்தேயு:26:75.
பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
யோவான்: 21:17.
பிரியமானவர்களே,
“அழுகை அழுக்கு கழுவும்” என்பது நல்மொழி. மனங்கசந்து அழுதமையால் அழுக்கு நீங்கி சுத்தமானார் பேதுரு.
பேதுருவின் நற்செய்தி அறிவிப்பினால், அகரிப்பா அரசனின் நான்கு மனைவிகள் மனம் மாறினார்கள்.
தங்கள் வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொண்டார்கள். மேலும் அல்பினசின் மனைவி செந்திப்பாவும் தனது பாவ வாழ்கையை விட்டு பரிசுத்த வாழ்க்கைக்கு நேராய் திரும்பினாள் என்று Ecclesiastical history 3-1 இப்புத்தத்தில் குறிப்பிடப்பட்டடுள்ளது.
அகரிப்பாவும், அல்பினசும் பேதுருவின் மேல் கோபம் கொண்டு, அவரை கொலை செய்ய திட்டமிட்டனர்.
பேதுருவின் நண்பர்களும், திருச்சபை மக்களும் பேதுருவை காப்பாற்றி தப்பிக்க வழி செய்தார்கள்.
பேதுரு தொடர்ந்து ஊழியம் செய்ய வேண்டுமென அவர்கள் விரும்பினார்கள். பேதுரு தனது மனைவியை ரோமாபுரி சபை மக்களிடத்தில் விட்டு விட்டு அங்கிருந்து ஓடத் தொடங்கினார். பேதுரு ஓடும் பொழுது, இயேசு கிறிஸ்துவின் வார்த்தை அவருக்கு எதிரே வருவதைக் கண்டார்.
பேதுரு மரிப்பதற்க்கும் துணிந்து ரோம் நகருக்கு மீண்டும் திரும்பினார். பேதுரு கண் முன்னே தன்னோடு ஊழியம் செய்த தன் மனைவியை சிலுவையில் அறைந்தார்கள். இந்த காட்சியை பேதுரு காணுமாறு கட்டாயப் படுத்தினார்கள்.
ஆனால் பேதுரு சிலுவையில் துன்பப்படும் தன் மனைவியைப் பார்த்து, “நம் ஆண்டவர் நமக்காக சிலுவையில் தொங்கிய காட்சியை நினைத்துக் கொள்” என்று ஊக்கப்படுத்தினார் என்று கீழ்கண்ட புத்தகத்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Eusebius, Ecclesiastical History, 3, 30).
பேதுரு இந்த செயலை துணிவோடு செய்தபடியால், சிறைச்சாலைக் காரன் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார்.
தன் மனைவியை சிலுவையில் அறைந்ததை கண்டபின், பேதுருவை சிலுவையில் அறையும் நேரம் வந்தது. அப்பொழுது பேதுரு, “என் ஆண்டவர் சிலுவையில் நேராய் அறையப்பட்டு மரித்ததைப் போல நான் அறையப்பட தகுதியற்றவன்.
என்னைத் தலைகீழாக சிலுவையில் அறைய வேண்டும்” என்று கேட்டு கொண்டார். பேதுரு கேட்டு கொண்ட வண்ணமாகவே சிலுவையில் தலைகீழாக அறைந்தார்கள். (Eusebius, Ecclesiastical History, 3-1).
இவ்வாறு ஆண்டவருக்காய் சிறந்த ஊழியம் செய்து இரத்த சாட்சியாய் மரித்து திருச்சபையின் மூலைக்கல் ஆனார் சீமோன் பேதுரு.
ஆம், நிரந்தரம் இல்லாத உலகில் நன்மை செய்ததினால், மற்றவர்களால் வந்த துன்பங்களையும், வேதனைகளையும் பொறுமையாய் சகித்து, ஆண்டவரோடு நித்திய நித்தியமாய் வாழக்கூடிய பேரானந்த பாக்கியத்தை பெற்றுக் கொண்டார் பேதுரு.
பரலோகத்தின் திறவுகோலையும் ஆண்டவர் தந்தருளினார் என்று வேதத்தில் பார்க்கிறோம். கர்த்தர் பேதுருவை குறித்து சொன்ன வார்த்தைகள் நிறைவேறியது.
நமது வாழ்விலும் கர்த்தர் நமக்கு கொடுத்த வாக்கை ஏற்ற வேளையில் நிறைவேற வல்லவராயிருக்கிறார்.
கர்த்தர் தாமே இந்த வார்த்தைகள் மூலமாய் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் ஆசீர்வாதத்திற்கு நேராய் வழி நடத்தி செல்வாராக.
ஆமென்.