நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். ஏசாயா 53 :5
எனக்கு அன்பானவர்களே!
குணமாகும் தேவனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
டாக்டர்.வில்லியம் ஜேம்ஸ் என்பவர் பிரபல மனநோய் மருத்துவ நிபுணர். இவர் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில், (Harvard University) பேராசிரியராக பணியாற்றினார்.
திடீரென்று அவர் ஒரு மர்ம நோயால் தாக்கப்பட்டார். நரம்பு மண்டலம் முழுவதும் தளர்ச்சியடைந்து சரீரம் செயலிழந்தது. மருத்துவர்களால் அவரை சுகமாக்க முடியவில்லை. அவர் மருத்துவத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தபடியால், மருத்துவர்களின் இயலாமை அவரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
உலகில் நரம்பு தொடர்பான நிபுணர்கள் எங்கெங்கு உண்டோ, அவர்கள் அனைவரையும் அவரை குணமாக்க அழைக்கப்பட்டனர். ஆனால் ஒரு பலனுமில்லை. “தான் வாழ்ந்து என்ன பயன்?” என்று அவர் நினைக்க ஆரம்பித்தார். . . டாக்டரின் இந்நிலை குறித்து அறிந்த ஒரு சாதாரண தேவ ஊழியர் அவரை சந்திக்க வந்தார்.
இவர் சுகமளிக்கும் வரத்தை பெற்றவரும் அல்ல. சாதாரண மனிதரான அந்த ஊழியர், ஜெபிக்குமுன், இயேசு கிறிஸ்துவைக் குறித்தும், அவர் அளிக்கும் தெய்வீக சுகத்தைக் குறித்தும் பேசினார். டாக்டருக்கோ நம்பிக்கை வரவில்லை.
எனினும் அவருடைய அனுமதியுடன் தலையின் மீது கை வைத்து ஜெபிக்க ஆரம்பித்தார்.
உடனே, “மின்சாரம் போன்ற வல்லமை என் உடலுக்குள் பிரவேசித்து செயல்படுகிறதை நான் உணர்ந்தேன். என் நரம்புகள் பெலப்படுகிறதை அறிகிறேன். நான் குணமாகிறேன்” என்று உற்சாகமாக கூறிக் கொண்டே அவர் அற்புதமாக சுகமடைந்தார். அன்றிலிருந்து இயேசுவுக்காக தன் வாழ்க்கை முழுவதும் அர்ப்பணித்தார்.
வேதத்தில் பார்ப்போம்,
அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின் மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
1 பேதுரு 2:23.
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
ஏசாயா 53:5.
நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று.
ஓசியா 14 :4.
பிரியமானவர்களே,
மருத்துவர்களால் கூடாத காரியம் நம் இயேசுவால் கூடும். பொதுவாகவே நாம் மருந்து மாத்திரைகள் மீது நம்பிக்கை வைக்கிறோம். மருந்துகளை எடுப்பது தவறல்ல.
வேதத்திலே எசேக்கியா ராஜாவின் புற்றுநோய் குணமாக அத்திப்பழ அடையை போடும்படி தேவனே கூறுகிறார். இருப்பினும் நமது நம்பிக்கையை மருந்துகளின் மேல் வைக்காமல்,
எல்லாவித மருந்துகளையும் கண்டுபிடிக்க மனிதனுக்கு ஞானம் கொடுக்கும் தேவன் மேலேயே வைப்போம். டாக்டர் கொடுக்கும் மருந்தை சாப்பிடுங்கள். சுகத்தை தேவனிடமிருந்து எதிர்பாருங்கள்.
அவரே நம்மை குணமக்க வல்லவர். . . இன்றும் நம்மில் அநேகர் தீராத வேதனையோடும், குணமடையாத வியாதியோடும் வாழ்ந்துக் கொண்டிருக்கலாம்.
இருந்த பணத்தையெல்லாம் மருத்துவத்திற்கு செலவழித்தும் வியாதி
நீங்காமலிருக்கலாம். இயேசு கிறிஸ்துவை நம்பி வாருங்கள். அவர் குணமாக்கும் கர்த்தர். அவர் சிலுவையில் பட்ட காயங்களின் தழும்புகளால் குணமாகிறோம் என்று வேதம் நமக்கு கூறுகிறது.
அவரிடம் வந்த அநேகர் முற்றிலும் சுகமானார்கள். இன்றும் அதே தேவனாய் மாறாதவராக குணப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவருடைய நாமங்களில் ஒன்று *_யெகோவா ரஃபா.* அப்படியென்றால் குணமாக்கும் கர்த்தர் என்று அர்த்தமாகும்.
பன்னிரண்டு வருடமாய் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தை தொட்டால் நான் குணமாவேன் என்று விசுவாசித்து தொட்டாள். அந்த கணமே அவள் குணமானாளே!
38 வருடமாய் படுத்த படுக்கையாய் கிடந்த திமிர்வாதக்காரனை இயேசு கண்டு அவன் வெகுநாளாய் வியாதிப்பட்டவன் என்று அறிந்து அவனை சுகமாக்கினாரே! அதே தேவன் இன்றும் மாறாதவராயிருக்கிறார்.
தேவனுடைய நாமம் மகிமைக்கென்று நம் வியாதிகளை மாற்றி, நமக்கு சுகத்தை தர வல்லவர்.
நாம்முடைய பாடுகளையும், வேதனைகளையும், துன்பங்களையும் காண்கிற தேவன் அவர். தம்முடைய தழும்புகளால் நம்மை குணமாக்கிற தேவனாயிருக்கிறார்.
உங்கள் வியாதி எலும்பில் இருக்கலாம், தோலில் இருக்கலாம், உடல் உறுப்புகளில் எந்த இடத்தில் இருந்தாலும், விசுவாசத்தோடு ஜெபியுங்கள். கர்த்தர் உங்களுக்கும் அற்புதமான சுகத்தைத் தருவார்.
ஏனெனில் அவர் நமக்காகவே சிலுவையில் அத்தனை பாடுகளையும் பொறுமையாய் சகித்தார்.
அவருடைய பிள்ளைகளாகிய நாம் இந்த விசுவாச உறுதியோடு வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.