மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; ஏசாயா: 53:4
எனக்கு அன்பானவர்களே!
தமது ஜீவனையே நமக்காக தந்த நம் அன்பின் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க ஐக்கிய நாட்டில் டெக்ஸாஸ் பகுதியில் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் ஒரு மனிதன் அழகிய தோட்டம் ஒன்றின் வழியாக சென்று கொண்டிருந்தான்.
அங்கு ஒரு குட்டிப்பையன் தோட்டத்தில் இருந்த பூக்களைப் பார்த்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். அப்போது கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்று அந்த சிறுவனை நெருங்கிக் கொண்டிருப்பதை இந்த மனிதன் பார்த்தார்.
கொஞ்ச நேரத்தில் அந்த பாம்பு அந்த சிறுவனை தீண்டும், அவன் மரித்துப் போவான் என்பதை அந்த மனிதன் புரிந்து கொண்டான். என்ன செய்வதென்று தெரியாத நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பாம்புக்கும் சிறுவனுக்குமிடையே இந்த மனிதன் பாய்ந்து சென்றான்.
பாம்பு அந்த மனிதனை பத்து முறை கொத்தியது. பாம்பு கொத்திய வேதனையில் அவன் அலறினான். அவனது அலறல் சத்தம் கேட்டு, அந்த குட்டிப்பையனின் தந்தையும் அருகில் இருந்தவர்களும் ஓடி வந்தார்கள்.
அந்த பாம்போ ஓடிப்போனது. அந்த குட்டிப் பையன் காப்பாற்றப்பட்டான். பாம்பால் கொத்தப்பட்ட மனிதனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். உயிருக்காக போராடிய அவனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றினார்கள்.
அந்த பையன் பெரியவனாக வளர்ந்த பின்பு, அந்த நபரை பார்க்கும் போதெல்லாம், “எனக்காக இவர் தன் உயிரையே தியாகம் செய்ய இருந்தார்” என்று நன்றி உணர்வோடு நினைவு கூர்ந்திருப்பானல்லவா!
அது போலவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் உங்களுக்காகவும் எனக்காகவும் தம் ஜீவனையே தியாகம் செய்து ,நம்மை மீட்டேடுத்தார்.
வேதத்தில் பார்ப்போம்,
நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழி தப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப் பண்ணினார்.
ஏசாயா: 53:6
அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக் கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
மத்தேயு 8:17
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே.
2 கொரி: 8:9.
பிரியமானவர்களே,
சிலுவையில் அவர் நமக்காக சிந்திய இரத்தம், நமக்கு பாவ மன்னிப்பையும் , மீட்பையும் கொண்டு வருகிறது. “என் பிள்ளைகள் பாவத்திலிருந்து மீட்கப்படுவதற்காக இதை பொறுமையோடு சகித்துக் கொள்வேன்” என்று அவர் எண்ணினார்.
நம்முடைய மீறுதல்களுக்காக அவர் காயப்பட்டார்; நம்முடைய அக்கிரமங்களுக்காக அவர் நொறுக்கப்பட்டார்
கர்த்தராகிய இயேசு தம் பிள்ளைகளுக்கு மன்னிப்பையும் குணமாக்குதலையும் கொடுக்கும்படிக்கே அவர் சிலுவையில் பல பாடுகளை அனுபவித்தார்.
அவர் தலையில் சூட்டப்பட்ட முட்கிரீடத்தினால், கை கால்களில் கடாவப்பட்ட ஆணிகளால் இரத்தம் புரண்டோடியது. நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. நம்மை நோயிலிருந்து காப்பாற்றுவதற்காக அவர் தம் சரீரத்தில் காயமேற்றார்.
இன்றும் சுகத்திற்காக ஆண்டவரை நோக்கிப் பார்க்கிற யாவரையும் அவர் குணமாக்குவார். மருத்துவர்கள் ஒருவேளை உங்களை குணப்படுத்த முடியாது என்று கூறலாம். உங்களை குணப்படுத்தக்கூடிய மெய்யான இரட்சகர் இயேசு இருக்கிறார் என்பதை மறவாதீர்கள்.
“உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது”
மத்தேயு 9:29 என்று இயேசு கூறியிருக்கிறார். தேவனுடைய வார்த்தையின்மீது உங்கள் விசுவாசக் கண்களை பதித்திடுங்கள்.
“வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை” மத்தேயு 24:35 என்று கூறியிருக்கிற இயேசு கிறிஸ்துவின் மீது உங்கள் நம்பிக்கையை வைத்திடுங்கள். அவர் உங்களை நிச்சயமாக குணமாக்குவார்.
“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்”
1 யோவான் 1:9. தேவனுடைய தியாகத்தின் மூலமாக பாவமன்னிப்பை நமக்கு எளிதாக கிடைக்கச் செய்துள்ளார்.
நம்மீது வரவிருந்த ஆக்கினைத்தீர்ப்பு அவர்மேல் வந்தது. “இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்.
தமது ஜீவனையும் பொருட்படுத்தாமல் நம்மை மீட்கவும், நமக்கு சமாதானத்தை தரவும், நம்மை பாதுகாக்கவும், பாவங்களை நீக்கவும், வியாதிகளை மாற்றவும், நம்மை நீதிமான்களாய் மாற்றி நித்திய ராஜ்ஜியத்தை சுதந்தரிக்கவும் அவர் தமது ஜீவனை தந்தது எவ்வளவு பெரிய பாக்கியம்.
இதை உணர்ந்தவர்களாய் நாம் ஒவ்வொரு நாளும் வாழ நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக..
ஆமென்.