மனுஷன் படும் எல்லாப் பிரயாசமும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதை நான் கண்டேன்; பிரசங்கி 4:4
எனக்கு அன்பானவர்களே!
கர்த்தரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
இயேசுவின் பெரும்பாலான சீடர்கள் கலிலேயா ஊரை சேர்ந்தவர்கள். நாத்தான்வேல் என்பவர் கானாவைச் சேர்ந்தவர்.
இயேசுவின் சீடர்களில் ஒருவரான நாத்தான் வேல் இந்தியாவின் வடமேற்குப் பகுதி வரை வந்து இறைபணி ஆற்றியதாக சொல்லப்படுகிறது. அதன்பின்னர் ஆசியா மைனரில் சிலகாலம் பணியாற்றினார். அங்குள்ள ஏராப்போலி என்னுமிடத்தில் பிலிப்பு என்னும் சீடரும் பணியாற்றி வந்தார். இருவருமாக சேர்ந்து சிலகாலம் அங்கே பணியாற்றினார்கள்.
நாத்தான் வேலுக்கு பார்த்தலமேயு என்னும் பெயரும் உண்டு.
அதன்பின்னர் நாத்தான்வேல் ஆர்மேனியாவில் தன்னுடைய பணியை ஆரம்பித்தார். ஆர்மேனியாவில் இறைப்பணி ஆற்றச் சென்றது கி.பி 60ல். அங்கு ததேயு சுமார் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவ மதத்தை நிறுவியிருந்தார்.
நாத்தான்வேல் அவரோடு இணைந்து சில காலம் பணியாற்றினார்.
ஐந்தாறு ஆண்டுகள் இருவரும் இணைந்து இறைபணி ஆற்றினார்கள். கிறிஸ்தவம் மிகவும் விரைவாகப் பரவ ஆரம்பித்தது. அங்குள்ள பிற மத நம்பிக்கையாளர்களும், அரசும் இவர்களுக்கு எதிரானார்கள்.
ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களை அவர்கள் கொன்று குவித்தார்கள்.
கிறிஸ்துவை நம்புபவர்கள் என்று பிரகடனப்படுத்தியோர் கொல்லப்பட்டார்கள். அந்த கூட்டத்தில் ததேயுவும் இறந்தார்.
நாத்தான்வேல் தப்பினார்.
அப்போது அங்கு ஆண்டு வந்த அரசனுடைய மகளுக்கு மூளைக் கோளாறு இருந்தது.
நாத்தான்வேல் அரண்மனைக்குச் சென்றார். இயேசுவை நம்பினால் அந்த பெண்ணைக் குணப்படுத்துவதாக வாக்களித்தார். அரண்மனைவாசிகள் சிரித்தனர். பின், குணம் பெற்றால் நம்புவோம் என்றனர். நாத்தான் வேல் மண்டியிட்டு செபித்தார். பின் அந்தப் பெண்ணைத் தொட்டு சுகமளித்தார். அவளுடைய மூளை நோய் உடனடியாக விலகியவுடன், அனைவரும் அதிசயித்தனர்.
அரண்மனையில் பலர் கிறிஸ்தவத்தில் இணைந்தார்கள். அரசனும் கிறிஸ்தவராக மாறினார்.
அரசனும் அரண்மனை மக்கள் பலரும் கிறிஸ்தவ மதத்தில் இணைந்ததைக் கண்டு ஆனந்தமடைந்த நாத்தான்வேல் அரசன் வணங்கிய சிலையைப் பார்த்தார்.
அதில் அசுத்த ஆவிகள் நிறைந்திருப்பதாய் தெரிந்தது அவருக்கு. கையிலுள்ள சிலுவையை எடுத்து சிலையை நோக்கி நீட்டினார். அசுத்த ஆவிகள் மக்களின் கண் முன்னால் சிலையை உருட்டி தள்ளி விட்டு வெளியேறியதை கண்டார்கள்.
சிலைக்கு வழிபாடு செய்து வந்த பூசாரிகள் கடும் கோபமடைந்தனர். அவர்கள் அரசருடைய சகோதரன் மூலமாக நாத்தான் வேலைக் கொல்ல சதித் திட்டம் தீட்டினார்கள். அரசனின் சகோதரன் பூசாரிகளின் பக்கம் சாய்ந்தான்.
நாத்தான் வேல் பிடிக்கப்பட்டார்.
அவருக்கு சிலுவை மரணம் தீர்ப்பானது.
அதுவும் உயிருடனே நாத்தான்வேலுடையதோலை உரித்து, பின் அவரை சிலுவையில் தலை கீழாய் அறைய வேண்டும் என்று தீர்ப்பானது.
மிகவும் கொடூரமான, வேதனையான, முறையில் நாத்தான்வேல் கொல்லப்பட்டார்.
பொறாமையுள்ளவர்களின் சூழ்ச்சியால் கொலை செய்யப்பட்டார்.
கி பி 68 ல் டைபர் நதியோரமாய் அமையப் பெற்றிருக்கும் பார்த்தலமேயு ஆலயத்தில் இவருடைய எலும்புகள் இன்னும் பத்திரப்படுத்தப் பட்டுள்ளன.
வேதத்தில் பார்ப்போம்,
பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர் மேல் பொறாமை கொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்.
லேவி19 :18.
கோபம் நிர்மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்.
யோபு 5 :2.
உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?
நீதி 27 :4.
பிரியமானவர்களே,
பொறாமை முதல் படுகொலைக்கான காரணத்தை உருவாக்கியது, பொறாமை காரணமாக, காயீன் ஆபேலைக் கொன்றான், சகோதரர்கள் யோசேப்பை எகிப்துக்கு விற்றார்கள், சவுல் தாவீதைக் கொல்ல முயன்றான்,
வேதபாரகரும் பரிசேயரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தார்கள். வேதம் சொல்லுகிறது
பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை (இயேசுவை ) ஒப்புக் கொடுத்தார்கள் என்று மாற்கு 15:9 . பார்க்கிறோம்.
பொறாமை இருக்கும் இடத்தில், கருணை ஒருபோதும் இருப்பதில்லை.
பொறாமை என்பது ஒரு நல்லொழுக்கத்தை இழக்கும் ஒரு பிசாசு மனநிலையாகும்.
பொறாமையின் ஆரம்பம் பெருமை. “ஒரு பெருமைமிக்க மனிதன் தன்னை விட உயர்ந்த மனிதனையோ, அல்லது, நல்லவனாக வாழ்பவனையோ அவனால் சகித்துக் கொள்ள முடியாது, ஆகவே அவர்கள் மேல் அவன் கோபப்படுகிறான். பொறாமையுள்ளவனாகிறான்.
ஒரு தாழ்மையான நபர் பொறாமைப்பட முடியாது, ஏனென்றால் அவர் தனது தகுதியற்ற தன்மையைப் பார்த்து உணருகிறார், அதே நேரத்தில் அவர் மற்றவர்களை மிகவும் தகுதியானவராக அங்கீகரிக்கிறார்.
நாம் விதைத்ததை அறுவடை செய்கிறோம். அன்பு இல்லாத இடத்தில் பொறாமை இருக்கிறது.
“பொறாமை மற்றும் சர்ச்சை உள்ள இடத்தில், கோளாறு மற்றும் தீமை எல்லாம் இருக்கிறது”
(யாக்கோபு 3:16)
“பொறாமை சர்ச்சையை வளர்க்கிறது. உங்கள் பகைமையும் சச்சரவும் எங்கிருந்து கிடைக்கும் நீங்கள் பொறாமைப்பட்டு எதையும் அடைய முடியாது, ”என்று யாக்கோபு கூறினார்.
ஆகவே நாம் பொறாமை எனும் தீய குணத்தை நீக்கி விட்டு சாந்தமும், மனத்தாழ்மையும், அன்பும் உள்ளவர்களாய் வாழுவோம். கிறிஸ்துவின் ராஜ்ஜியத்தில் பங்கடைவோம்.
ஆமென்.