மனுஷ கொலை பாதகனெவனோ அவனுக்குள் நித்திய ஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள். 1 யோவான் 3 :15
எனக்கு அன்பானவர்களே!
பாடுபடும் தாசனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஜேம்ஸ் ஹானிங்டன் இங்கிலாந்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். படிப்பை முடித்த பின் ஒரு வங்கியில் பணியாளராக இருந்தார்.
பின்னர் இறையியலைக் கற்றுக் கொள்வதில் ஆர்வமுள்ளவராக இறையியல் கல்லூரியில் சேர்ந்து படித்தார். பின்னர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிவிக்கும் நற்செய்தி ஊழியத்தில் தன்னை முற்றிலுமாக இணைத்துக் கொண்டார்.
அவரது சொந்த ஊரிலே தூய ஜார்ஜ் ஆலயத்தின் பொறுப்பாளராக ஊழியம் செய்தார். பின்னர் இங்கிலாந்து நாட்டின் சர்ச் மிஷனரி சொசைட்டியில் சேர்ந்து, அதின் மூலம் ஆப்ரிக்காவிலுள்ள ஜாம்பியா நாட்டிற்கு மிஷனரியாக சென்றார்.
அந்த நாட்டை ஐரோப்பியர்கள் அடிமை வியாபார மையமாக வைத்திருந்தனர். மேலும் அந்தநாடு மிகக் கொடூரமும், பாலியல் நோய்கள், மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களின் பிறப்பிடமாகவும் இருந்தது. அங்கு ஊழியம் செய்பவர்கள் பல இன்னல்களுக்கு ஆளானார்கள்.
இந்த நிலையில்
அங்கிருந்து உகண்டா தேசத்தின் மிஷனரி பணித்தளத்திற்கு பொறுப்பாளராக அனுப்பப்பட்டார். அங்கு சென்று விக்டோரியா நயன்சா என்ற புகழ் பெற்ற அருவிக்கு அருகாமையில் புதிய பணித்தளத்தை தொடங்கினார்.
உள்ளூர்வாசிகளுக்கு பள்ளிகளை நிறுவினார். மக்கள் மத்தியில் ஜேம்ஸ் ஹானிங்டனின் செல்வாக்கு உயர ஆரம்பித்தது. கிறிஸ்துவின் நற்செய்தியும் பரவ ஆரம்பித்தது.
கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் மக்கள் நாளுக்கு நாள் பெருகினார்கள். அவர் அனைத்து மக்கள் மீதும் பாரபட்சமின்றி அன்பைக் காட்டினார். சிறியோர் முதல் பெரியோர் வரை அவரை நேசித்தார்கள்.
இவரது வளர்ச்சியில் பொறாமை கொண்ட சிற்றரசன் வாங்கா (MWANCA) பல பொய்யான குற்றங்களை வனைந்து அவரை சிறையில் அடைத்தான். சிறையில் அடைப்பதற்கு அந்த சிற்றரசன் தெரிந்து கொண்ட இடம் ஒரு அசுத்தமான குடிசை.
அவ்விடம் விஷப் பூச்சிகளினாலும், எலிகளாலும் நிறைந்து இருந்தது. பேராயர் ஒரு வாரத்திற்குள்ளாகவே குடிசையிலே வியாதிப்பட்டு இறந்து விடுவார் என அச்சிற்றரசன் எண்ணினான்.
ஆனால் பேராயர் ஜேம்ஸ் ஹானிங்டனோ மரிக்கவில்லை. இந்த அற்புதத்தை பொறுத்துக் கொள்ள இயலாத அச்சிற்றரசன் அவரை வெளியேற்றி கொலை செய்ய உத்தரவிட்டான்.
1885 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ம் நாள், பேராயர் ஜேம்ஸ் ஹானிங்டனை பொது மேடையில் நிறுத்தி ஈட்டியால் குத்தி அவரைக் கொன்றனர். அவர் குத்தப்படும் போது “உகாண்டாவில் கிறிஸ்தவம் பிரவேசிக்கும் வழியை என் இரத்தத்தால் விலைக்கு வாங்கி விட்டேன்.
கிறிஸ்தவம் இனி எளிதில் உகாண்டா தேசத்தில் வளரும் என்று சிற்றரசன் வாங்காவிற்க்கு சொல்லுங்கள்” என்று தனது மரண வேளையில் சொன்னார்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள ஆங்கலிக்கன் திருச்சபைகளை வெகுவாய் உலுக்கிற்று. அவருடைய மரணத்தை தொடர்ந்து இங்கிலாந்தில் மிஷனரி வாஞ்சையுள்ள அநேகர் எழுந்தார்கள்.
அவர்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் உகாண்டாவிற்கு செல்ல மனப்பூர்வமாக முன் வந்தார்கள். அவர்களிலும் அநேகர் ஜேம்ஸ் ஹானிங்டன் போலவே இரத்த சாட்சியாக மரித்தார்கள்.
ஜேம்ஸ் ஹானிங்டன் தரிசனத்தில் கண்டது போலவே இன்று உகாண்டாவின் 90% மக்கள் கிறிஸ்தவர்களாக மாறியிருகின்றார்கள். மிஷனரிகள் புதைக்கபடுவதில்லை, விதைக்கபடுகின்றார்கள் என்ற கூற்று எவ்வளவு பெரிய உண்மை.
வேதத்தில் பார்ப்போம்,
ஒருவன் பிறனுக்கு விரோதமாகச் சதி மோசஞ் செய்து, அவனைத் துணிகரமாய்க் கொன்று போட்டால், அவனை என் பலிபீடத்திலிருந்தும் பிடித்துக் கொண்டு போய்க் கொலை செய்ய வேண்டும்.
யாத் 21 :14.
குற்றமில்லாதவனைக் கொலை செய்யும் படி பரிதானம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன்.
உபா 27 :25.
மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக் கூடுமானால் விடுவி.
நீதி 24 :11.
பிரியமானவர்களே,
நம் அன்பான இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்.
“என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான் என்று.
அவருடைய நாமத்தினிமித்தம் நாம் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்கிறோம்.
அப்போ:14:22-ல் வேதம் சொல்லுகிறது, “நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று.
அன்பான சகோதரனே, சகோதரியே,
ஆண்டவருடைய நாமத்தினிமித்தம் நீங்கள் பலவிதமான வலியையும், வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கலாம். நீங்கள் கஷ்டங்களைச் சந்திக்கலாம். ஆனால், நீங்கள் இறுதிவரை உறுதியாக நிற்கும்போது, கர்த்தர் உங்களை மேன்மையாக வைப்பார் . உங்கள் மூலமாக அநேகர் இரட்சிப்படைவார்கள்.
அதனால் தான் பரிசுத்த பவுல்
1 கொரிந்தியர் 9:24-ல் கூறுகிறார், “பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக் கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.” என்று.
உகாண்டாவில் மிஷனரிகள் சிந்திய இரத்தம் வீண் போகவிலை. ஜேம்ஸ் ஹானிங்டனின் தரிசனமும் விருதாய் மாறிவிடவில்லை. இருண்ட கண்டத்தினுள் மெய்யான ஒளியாம் இயேசு கிறிஸ்து இன்றளவும் அங்கு பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார்
ஆம், எப்பொழுதும் தேவனுக்காக ஓட நம் வாழ்க்கையை அர்ப்பணிப்போம். ஆம், இலக்கை அடையும்படி ஓடுங்கள். நீங்கள் எதிர்நோக்கும் பந்தயத்தில் வெற்றி பெறும் படி தேவனை மட்டுமே நோக்கிப் பாருங்கள்.
பரிசுத்த பவுல் இயேசுவின் நாமத்துக்காக பாடுகளை சகித்துக் கொண்டார். ‘பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாட வேண்டும்’ என்று அவர் கூறினார். இந்த வல்லமையை தேவன் நமக்கும் தர மன்றாடுவோம்.
நம்முடைய உயிருள்ளவரை அவருக்காகவே வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.