உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக் கொண்டிருங்கள். ரோமர் 12 :9
எனக்கு அன்பானவர்களே!
அன்பின் உறைவிடமாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
காலையிலிருந்து மாலை வரை நாம் பல மனிதர்களைச் சந்திக்கிறோம், பேசுகிறோம். இவர்களில் எத்தனை பேரிடம் நாம் உண்மையான அன்போடு சிரித்து பேசி இருப்போம்?
அன்பு பற்றி புத்தர் ஒரு கதை சொல்லியிருக்கிறார். வயல் வரப்பு வழியாக ஒருவன் நடந்து கொண்டிருக்கும் போது புலியைப் பார்த்து விட்டான்.
அவன் ஓட புலி அவனை துரத்தியது. ஒரு சிறிய குன்றின் உச்சிக்கு வந்து விளிம்பில் இருந்த காட்டு மரத்தின் வேர்களைப் பிடித்துக் கொண்டு தொங்கினான்.
புலி அவனை முகர்ந்து பார்க்கும் தூரத்தில் இருந்தது. புலியை பார்த்து நடுங்கிக் கொண்டே கீழே பார்த்தான். இன்னொரு புலி அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது.
மரத்தின் வேர்களில் அவன் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. இரண்டு எலிகள் வேர்களைக் கடிக்க ஆரம்பித்தன. அவனுக்கு கைக்கெட்டும் தூரத்தில் காட்டுச் செடியின் பழம் இருந்தது.
ஒரு கையால் வேரைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் பழத்தைப் பறித்து தின்றான். அப்போது அவன் மனதில் “பழம் எவ்வளவு சுவையாக இருக்கிறது“ என்று தோன்றியது.
‘கனியைச் சுவைக்கும் மனிதனின்‘ மனநிலை
எவ்வளவு தான் துன்பங்களும், பிரச்சனைகள் இருப்பினும் அனைத்தையும் மறந்து மகிழ்ந்திருக்கச் செய்கிற சக்தி அன்பிற்கு மட்டும் தான் உண்டு.
அன்பிற்கு மட்டுமே வாழ்வை இனிமையாக நகர்த்திச் செல்கின்ற சக்தி உண்டு.
வேதத்தில் பார்ப்போம்,
நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள் என்றார்.
யோவான் 13 :35.
நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன்.
யோவான் 15 :17.
ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக் கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
1 யோவான் 4 :7.
பிரியமானவர்களே!
அன்பு தான் இவ்வுலகை இயக்கும் சக்தி. பலவிதமான மனித உறவுகளிடமும் நாம் எதிர்பார்ப்பதும், பெற விரும்புவதும் அன்பு தான்.
நாம் அன்பாக இருப்பதாலும்
மற்றவர்கள் மீது அன்பு காட்டுவதன் மூலம் நமக்கு எப்போதும் சந்தோச உணர்வு ஏற்படுகிறது.
அன்பு என்பது என்ன ? அது பல அர்த்தங்கள் பொதிந்த வார்த்தை. அன்பை அவ்வளவு எளிதில் வரையறுத்துச் சொல்ல முடியாது. மேலும், எந்த அளவிற்கு ‘அன்பு‘ ஆழமான வார்த்தையோ அதே அளவிற்கு மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியது.
அன்பைப் பற்றி பேசாதவர்களே இல்லை. அன்பு, காதல், பாசம், நேசம் என்று பல்வேறு பெயர்களில் நாம் அழைத்தாலும் எல்லாமே அன்பு என்பதைத் தான் மையப்படுத்துகிறது.
துன்பமும் , துயரமும் பயமும் நிறைந்ததாக எண்ணுகின்ற நம் வாழ்வில் அன்பு ஒன்று தான் ஆறுதல்.
சிலரிடம் நம் பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டால் மனம் ஆறுதலாக உணர்வதற்கு காரணம் இது தான்.
நம் கடவுள் அன்பாக இருக்கிறார்.
நான் உன்னை நேசிக்கிறேன்.
என்னுடைய தாயை நேசிக்கிறேன்.
இவையெல்லாம் என்ன…?அன்பை வெளிப்படுத்துகிற பல்வேறு வார்த்தைகள்.
கடவுள் அன்பாக இருக்கிறார் என்பதற்கு என்ன அர்த்தம் ? கடவுள் எந்த துன்பத்தையுமே நமக்கு தரமாட்டார். நம் மீது அன்பாக இருக்கிறார் என்று நாம் நம்புவதன் மூலம் பய உணர்வை நீங்கி நம்மை செயல்பட உத்வேகம் பிறக்கிறது.
நம்முடைய அன்பு கடவுளுக்கு மட்டுமல்லாமல், சக மனிதர்களிடமும் நாம் அன்பு காட்டும் போது
நம்முடைய வாழ்க்கை இனிதாக அமையும்.
மனிதனின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை அளிக்கக் கூடியது அன்பு மட்டும் தான்.
இந்த கலங்கமில்லாத அன்பை இயேசு கிறிஸ்து நம்மிடம் காட்டியதைப் போல நாமும் மாயமற்ற அன்புள்ளவர்களாய் வாழ்ந்து அன்பினால் இந்த புது உலகை கட்டுவோம்.
இப்படிப்பட்ட பூரண அன்பினால் கர்த்தர் தாமே நம் யாவரையும் நிரப்பி ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
ஆமென்.