உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்களென்று கர்த்தர் சொல்லுகிறார். யோவேல் 2 :12
எனக்கு அன்பானவர்களே!
கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
அமெரிக்காலிருந்து அட்லாண்டிக் கடலுக்குள் போகிற வழியில், சரியாக இரண்டாயிரம் மைலுக்கு அப்பால் ஓர் இடம் இருக்கின்றது.
அந்த இடத்திற்குள் சென்று எந்தவொரு மனிதரோ, கப்பலோ, ஏன் வானூர்தி கூட திரும்பி வந்த வரலாறு இல்லை.
அது ஏன்? என்ற காரணத்தை இதுவரைக்கும் யாராலும் அறிந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில், டிரான்ஸ்-ஓசியன் ஏர்லைன்ஸ் விமானிகள் குறிப்பிட்ட அந்த இடத்தை ஒரு சிகப்புக் கோட்டினால் வரையறுத்து, அந்த இடத்திற்குப் ‘திரும்பி வர முடியாத இடம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்
இதில் வேடிக்கை என்னவென்றால், திரும்பி வர முடியாத இடம் என்று விமானிகள் சிகப்புக் கோட்டினால் வரையறுத்த பின்பும், இன்னும் ஒரு சில கப்பல்கள், வானூர்திகள் அந்த இடத்திற்குள் சென்று, திரும்பி வரமுடியாதவாறு இருக்கின்றன.
இதேபோல் தான் சில மனிதர்கள் இவ்வுலக சிற்றின்ப மோகத்தில் நாட்டம் கொண்டு திரும்பி வர முடியாதவாறு’ இருக்கின்ற மக்கள் ஏராளம், ஏராளம்.
வேதத்தில் பார்ப்போம்,
உங்கள் தேவனாகிய கர்த்தர் கிருபையும் இரக்கமுமுள்ளவர்; நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை என்றார்கள்.
2 நாளா 30 :2.
நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.
லூக்கா 5 :32.
உன் மீறுதல்களை மேகத்தைப் போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப் போலவும் அகற்றி விட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக் கொண்டேன்.
ஏசாயா 44 :22.
பிரியமானவர்களே,
போதை வஸ்து வகுக்கும், ஆணவம், கோபம், பேராசை, பொறாமை, கட்டுப்பாடற்ற பாலுணர்வு, பெருந்தீனி, போன்ற பாவங்களுக்குள் சிக்கி, தன் வாழ்வையே தொலைத்துக் கொண்டிருக்கின்ற மக்கள் ஏராளம்.
இத்தகைய சூழ்நிலையில் தான், நம் அன்பின் ஆண்டவர் நம்மை அன்பாக அழைக்கிறார்.நாம் அவரோடு ஐக்கியமாக வேண்டும் என்பதற்காக தான் இந்தத் தவக்காலத்தை நமக்கு கிருபையாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
யோவேல் புத்தகம் நம்
ஒவ்வொருவருக்கும் தரப்படுகின்ற அழைப்பு தான் நீங்கள் உங்கள் ‘முழு இதயத்தோடும் ஆண்டவரிம் திரும்பி வாருங்கள்’ என்பதாகும்.
இந்த அழைப்பு கி.மு. 835 லிருந்து 796 வரையிலான காலகட்டத்தில், ஆண்டவரின் பணியைச் செய்து வந்த தீர்க்கதரிசி யோவேல், ஆண்டவரின் வருகைக்காக இஸ்ரயேல் மக்கள் தங்களைத் தயார் செய்ய வேண்டும் என்பதற்காக கொடுக்கப்பட்ட அழைப்பாக இருந்தாலும், அது இன்று நமக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பாக தான் இருக்கின்றது.
முழு இருதயத்தோடு ஆண்டவரிடம் திரும்பி வருவது என்பது, ஆலய ஆராதனைகளில் கலந்து கொள்வதோ, உடைகளைக் கிழித்துக் கொண்டு, சாக்கு உடை உடுத்தி, சாம்பலில் உட்கார்வதோ அல்லது அழுது புரள்வதோ அல்ல.
மாறாக, தன் குற்றத்தை உணர்ந்து, நெருங்கிய இதயத்தோடு ஆண்டவரிடம் வருவது. அது தான் முழு இதயத்தோடு ஆண்டவரிடம் திரும்பி வருவதாகும்.
இன்னும் சொல்லப் போனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவரிடமிருந்தும் எதிர்பார்ப்பது வெளிப்புற மாற்றத்தை அல்ல, உட்புற மாற்றத்தையே.
அத்தகைய மாற்றம் தான் ஆண்டவருக்கும் விருப்பமானது.
இத்தகைய மனமாற்றம் நம் ஒவ்வொருவருக்கும் அவசியம்.
இந்த தவக்காலங்களில் நாம் முழு மனதோடு ஆண்டவரிடம் திரும்புவோம்.நம் தவற்றிற்காக மனம் வருந்தி இந்த கிருபையின் காலங்களில் அவரோடு ஜக்கியமாக வாழ நேரங்களை அவருக்காக செலவிடுவோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தரும் ஆசிகளை பெற்று வளமாய் வாழுவோம்.
ஆமென்.